வரம்–சிறுகதை குறித்து…

ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை மாலை நடைபெறும் சுக்கிரி குழும ஸூம் உரையாடலில் நேற்று (11/09/2021) எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் புனைவுக் களியாட்டு தொகுப்பின் நூறாவது கதையான “வரம்” சிறுகதை பற்றி நான் பேசியதன் சற்றே திருத்தப்பட்ட வடிவம்.

ஆசான் தனது அரதி என்னும் கட்டுரையில், மரபார்ந்த மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளுக்கு அரதி மனநிலை பீடித்திருக்கும்போது, அனுமனை அல்லது பிள்ளையாரை வணங்கச் சொல்வது உண்டு என எழுதியுள்ளார். அனுமன் வீரத்தின் சின்னம் என்றும் பிள்ளையார் ருசியின் சின்னம் என்றும் சொல்லியிருப்பார். அவற்றை வணங்கும்போது அவை நம் ஆழ்மனதில் ஏற்படுத்தும் விளைவுகளின் வழியாக நாம் அந்த அரதி நிலையை வென்று மேலே வருவோம் என்பதாக சொல்லியிருப்பார். இக்கதையில் அத்திருடன் அந்தப் பெண்ணின் குலதெய்வமாக இருக்கும் பகவதியின் மூலமாகவே அச்செயலை நிகழ்த்துகிறான் என தோன்றியது.

முதன்முதலில் வாசிக்கத் தொடங்கியபோது கதையின் முகப்பிலுள்ள பகவதியின் முழுதணிக்கோல படத்தையும், திருடனிலிருந்து கதை ஆரம்பிப்பதையும் பார்த்தவுடன் திருடனுக்குத்தான் ஏதோ அமானுஷ்ய அனுபவம் ஏற்படப்போகிறது என நினைத்திருந்தேன். ஸ்ரீதேவி கதாபாத்திரம் தனது அப்பாவுக்கு எழுதிக்கொண்டிருந்த இறுதிக் கடிதத்தின் வழியாக – அது முற்றுப்பெறவில்லையென்றாலும் – அவளது குடும்ப சூழலை, அவள் எடுக்கவிருக்கும் முடிவுகளைப் பற்றி தெரிந்துகொண்டு, அடுத்தநாள் இரவுக்குள் அந்த பகவதி சிலையை அலங்கரிக்க வேண்டிய அனைத்தையும் வாங்கிக் கொண்டுவந்து, சிறப்புற அலங்கரித்து, அவள் வரும் நேரத்தில் அக்கருவறைக் கதவுகள் காற்றில் தானே திறப்பதற்கும் மணிகள் காற்றில் முழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை கவனமாக யூகித்து செய்துவைத்து காத்திருக்கிறான். அவற்றை எந்தவித தடயங்களும் இல்லாமல் செய்கிறான். தான் வந்துபோனது தெரியாத வண்ணம், உதைத்தாலே உடைந்துவிடும் நிலையிலுள்ள கதவை கவனமாக இரும்புக்கம்பியை வைத்து திறக்கிறான். காற்றில் தானே அசைந்து ஒலியெழுப்பும் வகையில், மணிகளின் நாவுகளில் விசிறிகளை கட்டிவைக்கிறான். காற்றின் விசையில் கருவறைக் கதவுகள் தானே திறந்துவிடுவதற்காக எண்ணைய் விட்டு எளிதாக்குகிறான். அலங்கரிக்கத் தேவையான பொருட்களை சிலவற்றை சேகரித்து, சிலவற்றை திருடி, சிலவற்றை தானே செய்தும் சிலவற்றை வாங்கி தயார் செய்கிறான்.

ஆனால் இவையனைத்து ஏற்பாடுகளுமே ஒரு மெலிதான வாய்ப்புக்காகத்தான். தனது வாழ்வை முடித்துக்கொள்ளும் அந்நேரத்தில் அவள் கோவிலுக்கு வராமல் செல்லலாம். வெளியிலிருந்தே வணங்கிவிட்டு செல்லலாம். அல்லது மொத்தமாகவே அம்முடிவை இன்னொரு நாளுக்கு தள்ளிப் போட்டிருக்கலாம். ஆனால் அவன் திறமையான திருடன் என்பதாலும் அனைத்தையும் அறிவான் என்பதாலும் அவன் இவற்றுக்கு தயாராக இருக்கிறான். எந்தத் தயக்கமோ அல்லது வேறுவகையில் இவை நடந்துவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணங்களும் அவனிடம் இல்லை.

ஸ்ரீதேவியைப் பொறுத்தவரை அவளுக்கு வாழ்வில் வெற்றிபெறுவதற்கான அனைத்து காரணிகளும் ஏற்கனவே நன்கு வகுக்கப்பட்டிருக்கின்றன. அவளால் சுவையாக சமைக்க முடிந்திருக்கிறது. தன் வாழ்க்கையை கனவுகளால் நிறைத்துக் கொண்டிருக்கிறாள். கனவுகளில் வேட்கை மிக்கவளாக, வேட்கையால் ஆற்றல் எழுந்தவளாக, அதுகொடுக்கும் நிமிர்வு கொண்டவளாக இருக்கிறாள். ஆனால் ஏதோ ஒன்று அவளை அத்தனை பொழுது தடுத்து வைத்திருந்திருக்கிறது. அதைத்தான் இந்தத் திருடன் சரியான வகையில் உடைத்துவிட்டிருக்கிறான் என தோன்றுகிறது. நிரம்பிய அணையில் விழும் சிறு கீறலே அவ்வணையை முழுமையாக உடைக்க வல்லது என்று சொல்வதைப் போல, அந்த சிறு தருணமே அவள் தன் வாழ்க்கையில் முழுமையாக வெளிப்பட போதுமானதாக இருக்கிறது.

கனவுகள் தீங்கற்றவையாக இருந்து வெறுமையை அளிக்கத் தொடங்குவதுபற்றி கதையில் ஆசான் கூறியிருப்பது மிக அருமை. அவை வெறுமையை அளிக்கத் தொடங்குவதை நாம் ஆரம்பத்திலேயே உணராமல் நெடுந்தொலைவு போய்விடுகிறோம். நம்மால் அந்நிலையில் அக்கனவுகளை உதறவும் முடியாமல் ஆகி அவை கொடுக்கும் உக்கிரத்தோடு போராட வேண்டியிருக்கிறது. அந்நேரத்தில் இத்திருடன் நிகழ்த்தும் நிகழ்வுபோல ஒன்று நடந்தால் இம்மாதிரி கனவுகள் நனவாகும் வாய்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

ஸ்ரீதேவி என அப்பெண்ணுக்கு பெயர்வைத்துவிட்டு, பகவதியையும் தேவி என சொல்வது ஒரு இனிய மயக்கத்தை அளிக்கிறது. முழு அலங்காரக் கோலத்தில் விண்ணாளும் சக்கரவர்த்தினியாக தேவி நின்றிருந்தாள் என்னும்போது எந்த தேவி என்ற திணறல் வருகிறது.

இக்கதை திருடனின் கனவோ என நினைக்கவும் கதை சிறு இடம் தருகிறது. அலங்காரங்களை முடித்துவிட்டு திருடன் கற்பனையில் ஸ்ரீதேவியின் வீட்டை பார்ப்பதற்கு அடுத்துதான் ஸ்ரீதேவி வீட்டைவிட்டு கிளம்பும் இடம் ஆரம்பிக்கிறது. ஸ்ரீதேவி பகவதியை கண்டு திகைப்பதை மிக அருகே அமர்ந்து திருடன் பார்க்கிறான். அவள் தூங்கும்போதும் அவ்வாறே அருகில் அமர்ந்து பார்க்கிறான். ஒருவேளை அவன் அவளது கடிதத்தை படித்துவிட்டு ஆனால் ஏதும் செய்ய இயலாமல் அல்லது செய்யத் தெரியாமல் வந்து இதுபோன்று அலங்கரித்து அமர்ந்து அவ்வினிய கற்பனையில் ஈடுபடுகின்றானோ எனத் தோன்றியது.

இன்னொரு கோணத்தில் அந்நிகழ்வு மொத்தமுமே ஸ்ரீதேவியின் கனவுதானோ என்றும் தோன்றியது. அவள் கடிதம் எழுதிவிட்டு பாதியில் உறங்குகிறாள். அவ்வுறக்கத்தில் அவள் காணும் கனவில், திருடன் வந்து கடிதத்தை படித்து, இம்மாதிரியான ஒரு நிகழ்வை நிகழ்த்துகிறான். அக்கனவு அனுபவத்தின்மூலம் அவள் தனது சோர்ந்த மனநிலையிலிருந்து விடுபட்டு மேலெழுந்து வருகிறாள் என்றும் நினைக்கத் தோன்றியது. தன் கனவு காணும் இயல்பினால் அவள் “நான் பகவதியை அக்கோலத்தில் பார்த்து அயர்ந்து நின்றபோது, அந்தத் திருடன் என்னை ஏதோ விண்ணாளும் சக்கரவர்த்தினியை பார்ப்பது போல பார்த்தான்” என்னும் விருப்பக் கற்பனையும் அக்கனவில் சேர்ந்து கொண்டதோ என்றும் நினைத்தேன். அவன் அவள் வீட்டை விட்டு நீங்கும்முன் அவளுடைய உதட்டிலளித்த முத்தத்தையும் அவ்வாறே “என் குணத்தையும் நிமிர்வையும் கண்டு தன்னை கட்டுப்படுத்த முடியாமல் என் உதட்டில் முத்தமிட்டு சென்றான்” என்று எண்ணியிருக்கிறாளோ என்றும்.

ஸ்ரீதேவி அக்கோவிலை விட்டுச் சென்றபின் தான் உருவாக்கின அந்த சூழலை முழுமையாக நீக்கிவிட்டு திரும்பிச் செல்கிறான். அவை ஒரு கனவுபோன்ற அனுபவமாக ஸ்ரீதேவிக்கு அமையவேண்டும் என எண்ணியா? அல்லது குடித்து முடித்த பீடியை அணைத்து தன் பாக்கெட்டிலேயே போட்டுக்கொள்ளும் அவனது வழக்கமான செயலா என தெரியவில்லை. உதடுகள் புன்னகைக்க கண்களில் கண்ணீர் வழிய அணிகலன்களையும் ஆடையையும் கழற்றும் இடம் அருமை. தான் விரும்பிய வகையில் அந்நிகழ்வு நடந்தேறியது குறித்த புன்னகை சரி. ஆனால் கண்ணீர் ஏன்? அவள் கொண்ட மாற்றத்தை தானும் உணர்கிறானா? அதன்பின்னர் ஒருவேளை அவனது வாழ்க்கையும் மாறிவிடுகிறதா? அல்லது ஒருவேளை அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஒருகணம் ஆசைப்பட்டு பின்னர் அவள் வாழ்க்கையை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தும் முடிவை எடுத்தானோ! கடைசியில் அவன் முத்தமிடுவதாக வரும் வரியும் அதையே எண்ணச் செய்கிறது. அந்த உருவாக்கப்படும் நிகழ்வு நடக்கும்வரை அவனுக்கு அவளை அடைய ஒரு சிறு வாய்ப்பு இருக்கிறது. அந்நிகழ்வு நடந்து அவள் உள்ளூர நகர்ந்துவிட்டால் பின்னர் அதற்கான வாய்ப்புகள் இல்லை. தானே அவற்றுக்கான கதவுகளை மூடுகிறோம் என்பது தெரிந்ததாலா?

அவளது வாழ்க்கையிலேயே ஒரு மாற்றத்தை உருவாக்கிவிட்டு ஆனால் அதற்கான எந்த கிரெடிட்டையும் ஏற்றுக்கொள்ளாமல் அவற்றைப் பற்றி அவளுக்குமே சொல்லாமலும், ஒரு தடயமும் இல்லாது விலகிச் செல்வது நெகிழவைக்கிறது. பகவதியின் உருவத்தை வர்ணிக்கும் வார்த்தைகள் வெகு அழகாக இருக்கின்றன. இதழ்க்குமிழ்வு, தோள்குழைவு, முலைமுகிழ்ப்பு, தொடையுருள்வு என அவற்றின் இணைவொலி மிக நன்றாக இருக்கின்றது. ஆசான் சொல்லிணைவின் ஒலி இசையாக இருப்பதற்கு எப்போதுமே மெனக்கெடுவார். அது இவற்றிலும் தெரிகிறது. இருபத்தாறாயிரம் பக்க வெண்முரசு எழுதியபின்னும் இவ்வளவு இசையுண்ட வார்த்தைகள் மென்மேலும் அவரிடமிருந்து வந்துகொண்டேயிருப்பது குறித்து எண்ணுவது ஒரு இனிய அலுப்பைத் தருகிறது.

குத்தகைதாரர்களும் பட்டாதாரர்களும் உள்ளூர் பண்ணையார்களும் நிலங்களை ஆக்ரமித்துக் கொண்டனர் என்பதை படிக்கும்போது ஆசானின் பலிக்கல் கதை நினைவுக்கு கொண்டுவந்தது. இங்கும் ஒரு பலிக்கல் அடுத்து நடக்குமாக இருக்கும்.

கதையில் நெகிழச்செய்த வரி “ஒவ்வொன்றும் பொன் என மாறும் ஒரு தருணம் உண்டு”! இக்கதையில் நம்மை இரு இடங்களில் பொருத்திக் கொள்ள முடிகிறது. ஸ்ரீதேவியாக நம்மை உணரும் இடங்கள் நம் வாழ்க்கையில் இருந்திருக்கும். அந்தக் கோணத்தில் இக்கதை தரும் உத்வேகம், மன அமைதி, இதம் மிகவும் அருமை. திருடனாக நம்மை உணரமுடியுமா? இன்னொருவர் வாழ்க்கைக்கு அவரறியாமல் இம்மாதிரி ஒரு மாற்றத்தை நம்மால் உருவாக்க முடியுமா? அதன்வழி அத்திருடன் கொள்ளும் நிறைவை நாமும் அனுபவிக்கமுடியுமா? அப்படி அமைந்தால் அதுவும் ஒருவகையில் நமக்கு வரம்தான்.

தொடர்புடைய இணைப்புகள் :

பலிக்கல் – சிறுகதை : https://www.jeyamohan.in/130851/
அரதி – கட்டுரை : https://www.jeyamohan.in/1245/