பெருங்கனவின் முடிவில்…

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெண்முரசு நாவல் வெளிவருவது இன்றோடு (16.07.2020) நிறைவடைந்திருக்கிறது. ஒரு பெரிய கனவு கண்டு விழித்ததுபோலத்தான் உணர்கிறேன். 2014ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியிலிருந்து ஆரம்பித்து ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு அத்தியாயம் என ஏழாண்டுகள் தொடர்ந்து எழுதியிருக்கிறார். 2013ம் ஆண்டு டிஸம்பரில் இவ்வாறு வெண்முரசு என்ற தலைப்பில் வெளிவர ஆரம்பிக்கவிருப்பது குறித்த அறிவிப்பு வெளிவந்தபோதே பரவசமாக இருந்தது. சிறுவயதிலிருந்தே மஹாபாரதத்தை மிக ஆர்வமாக படித்தும் கேட்டும் பார்த்தும் வந்திருக்கிறேன். தூர்தர்ஷனில் வெளிவந்த மஹாபாரதம், அமர்சித்ரகதாவின் சிறிய பதிப்பில் காமிக்ஸ் வடிவில் வந்த புத்தகம் ஆகியவை தவிர அவ்வப்போது ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் வரும் சிறுசிறு மகாபாரதக் கதைகள், சோ அவர்களின் மஹாபாரதம் பேசுகிறது தொடரை துக்ளக்கில் வாரவாரம் படித்தது என நிறைய வகைகளில் படித்திருந்த அனுபவத்தாலும், ஜெயமோகன் அவர்களின் புனைவுகளில் மயங்கியிருந்த காரணத்தாலும் அவர் எழுத இருக்கும் மகாபாரதம் எவ்விதம் இருக்குமென ஆர்வமுடன் இருந்தேன். அவரின் பதிவை என் முகநூல் பக்கத்தில் பகிர, அதைப் படித்த என் நண்பன் ஏதோ நானே அதை எழுதவிருக்கிறேன் என எண்ணி வாழ்த்து தெரிவித்து அசடு வழிந்தது நினைவுக்கு வருகிறது.

ஆனால் வெண்முரசின் முதற்கனல் ஆரம்பித்தபோது மிக வேகமாக என்னை அது வெளியில் தள்ளியது. இத்தனைக்கும் அந்த காலகட்டத்தில் தான் எழுதவிருக்கும் பாரதத்தின் வடிவம் குறித்த பல தகவல்களை ஜெயமோகன் பல வாசகர் கடிதங்கள் வழியாகவும், கட்டுரைகள் வழியாகவும் கொடுத்துக் கொண்டே இருந்தார். மூலநூலுக்கும் வெண்முரசுக்கும் இடையில் இருந்த கதை மாறுபாடுகள், நீட்சிகள் ஆகியவை பெரிதும் என்னை குழப்பின. “பாற்கடலை கடையும்போது அசுரர்கள்தான் வாசுகியின் தலைப் பக்கம் இருப்பார்கள். நீங்கள் தேவர்கள் என மாற்றி எழுதியிருக்கிறீர்களே” என்று நான் கேட்டதற்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறார். அவர் புராண கதைகளை வெண்முரசில் தகுந்த இடங்களில் கொண்டுவருவதை ரசிக்க முடிந்தாலும், ஏனோ என்னால் அதை தொடர்ந்து படிக்க முடியாமல் திணறினேன். முதன்முறையாக ஒரு பகுதி என்னை ஈர்த்தது என்றால் முதற்கனலின் ஆரம்பத்தில் வியாசரிடம் பீஷ்மர் தெளிவு பெற வரும்போது, சித்ரகர்ணி என்ற சிங்கம் பசுவை கொன்று எடுத்துச் செல்லும் பகுதிதான். அதைத் தொடர்ந்து பாரதத்தின் நிகழ்வுகளை ஒட்டி வெண்முரசும் செல்ல, அதனுடன் நன்றாக ஒன்ற முடிந்தது. எனினும் முதற்கனலின் முடிவை நெருங்கும்போது மீண்டும் அதிலிருந்து விலகிவிட்டேன். அதன் இறுதிப் பகுதிகள் வெளிவந்து சில வாரங்கள் கழிந்தே அவற்றை அவசர அவசரமாக படித்துவிட்டு, புரிந்தும் புரியாமலும் அடுத்த நாவலான மழைப்பாடலுக்குள் நுழைந்தேன்.

என்னை இப்போதும் மிகவும் ஈர்க்கும் வெண்முரசின் நாவல்களில் மழைப்பாடலும் ஒன்று. மொத்த மகாபாரதமும் நிகழக் காரணமான அடிப்படை நிகழ்வுகள் நடக்கும் பகுதிகள். இவ்வளவு விரிவாக அவற்றை அவர் எழுதிச் சென்றதை மிகவும் ரசிக்கமுடிந்தது. அநேகமாக அது வெளிவந்த ஒவ்வொரு நாளுமே அன்றன்றைய பகுதிகளை படித்திருந்தேன். நான் அறிந்த மஹாபாரதத்தையும் மற்ற புராணக்கதைகளையும் ஒரு பக்கம் ஒதுக்கிவைத்துவிட்டு இவர் என்ன சொல்கிறார் என்று மட்டும் கவனிக்க ஆரம்பிப்போம் என்ற நிலைக்கு வந்தது இந்நூலில்தான். இதற்கடுத்து வந்த வண்ணக்கடல் நாவலும் இதே அளவுக்கு பிடித்திருந்தது என்றாலும் அதில் இளநாகனின் பயணத்துடன் ஏனோ என்னால் ரொம்பவும் ஒன்றமுடியவில்லை. அப்பகுதிகளை அப்படி அப்படியே கடந்துவிட்டு நடுநடுவில் வரும் பாரத நிகழ்ச்சிகளை மட்டும் படித்து அந்நாவலைக் கடந்தேன். பின்னர் நீலம். இதன் மொழியும் என்னை வசீகரித்தாலும் ஒரு கட்டத்தில் இதிலிருந்தும் முற்றிலும் வெளியே சென்று, அந்நூல் முடிந்து அடுத்த நாவல் வெளிவர இருந்த இடைவேளையில்தான் மீண்டும் சென்று படித்து முடித்தேன். அடுத்து வந்த பிரயாகை நூலில் முற்றிலும் ஒன்றமுடிந்தது. வெளிவந்த பகுதிகளை அன்றன்றே படித்த நாவல்களில் இதுவும் ஒன்று. துருபதனை பாண்டவர்கள் வெல்லும் பகுதி மிகவும் ஈர்த்த ஒன்று. “இதையே இப்படி உக்கிரமாக எழுதினார் என்றால், குருஷேத்திரப் போர் பகுதிகள் என்னவாக இருக்கும்” என மலைக்கவைத்தது அப்பகுதி.

அடுத்து வந்த வெண்முகில்நகரம் நூலும் அன்றன்றே படித்த நூல்களுள் ஒன்று. தொழும்ப முத்திரையை சூடி சாத்யகி துவாரகையில் நுழைவதும், அவனை கிருஷ்ணன் அரவணைத்து தன் அணுக்கன் ஆக்குவதும், பூரிசிரவஸின் பயணங்களும் காதல்களும் அவை மிக எளிதாக நிறைவேறாமல் போவதும் மிகவும் மனதை பாதித்தவை. அடுத்து வெளிவர ஆரம்பித்து எட்டு ஒன்பது அத்தியாயங்களுடன் நின்றுபோன காண்டவம் நூலை ஏறத்தாழ நான் முழுக்கவே படிக்கவில்லை. ஆனால் அது அவ்வாறு நின்றுபோனது ஒரு அதிர்ச்சியாக இருந்தது. ஜெயமோகன் முன்னரே “ஒரு படைப்பு தானாக எழவில்லை என்றால் அதை அப்படியே விட்டுவிட்டு போகத்தான் வேண்டும். அதையே பிடித்து தொங்கிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை” என்றெல்லாம் ஏற்கனவே வெண்முரசு தொடர்பான கேள்விபதில் ஒன்றில் சொல்லியிருந்தபோதும் அவ்வாறு அது நின்றுபோனது கொஞ்சம் திகைப்பாகத்தான் இருந்தது. மீண்டும் இந்திரநீலம் ஆரம்பித்தபோது அவர் தனக்கு வசதியான ஒரு இடத்திற்கு மீண்டும் சென்று நின்றுகொண்டு வெண்முரசைத் தொடர்கிறார் என்று அற்பமாக எண்ணினேன். ஆரம்பத்தில் அன்றன்றே படித்தாலும் போகப்போக படிப்பதை நிறுத்தி பின்னர் இறுதியில் ஒரேமூச்சில் பல அத்தியாயங்களைப் படித்து வந்து இணைந்து கொண்டேன். காண்டீபம் ஆரம்பத்தில் இணையத்தில் படிக்க ஆரம்பித்து பின்னர் அதன் வடிவம் பிடிகிடைக்காமல் முழுக்கவே படிக்காமல் விட்டுவிட்டேன். பின்னர் நூலாக வந்தபோது ஒரு பயணத்தில் படிக்க ஆரம்பித்து பின்னர் அதே மனநிலையில் சில நாட்களுக்கு நீடித்து அதை படித்து முடித்தேன். காண்டீபத்தை அவ்வாறு நான் உடனே படிக்காமல் போனதற்கு முதற்காரணம் அது மஹாபாரத நிகழ்ச்சிகளை விவரிக்காமல் அதனின்று விலகிநின்று அர்ஜுனனின் பயணங்களைப் பற்றி மட்டும் பேசியதால் என நினைக்கிறேன். முதன்மைக் கதைமாந்தர்கள் இல்லாமல் நகர்வது அவ்வளவாக என்னை ஈர்க்கவில்லை. ஆனால் பின்னர் ஒரே நூலாக படிக்கும்போது நிகழ்ச்சிகளை இணைத்து படிக்க முடிந்தது. நல்ல அனுபவமாகவும் இருந்தது.

வெய்யோன் என்னை மீண்டும் மீண்டும் ஈர்க்கும் நூல். கௌரவர்கள் கர்ணனிடம் காட்டும் பிரியம் மீண்டும் மீண்டும் நான் படிக்கும் ஒன்று. சுஜாதனின் விஸ்வரூபம், இளைய கௌரவர்களுடனான உண்டாட்டு, கௌரவர்களின் குழந்தைகள் கர்ணனிடம் பெரீந்தையே என கொஞ்சுவது, பீமன் அவர்களுடன் விளையாடுவது, ஜயத்ரதன் கர்ணனிடம் வந்து இணைந்து கொள்வது. இந்திரப் பிரஸ்தத்திற்கு விரிந்த மனத்துடன் துரியனும், அனைத்துப் புறமும் கூர்நோக்குடன் என கர்ணனும் செல்வது, அங்கு நடக்கும் நிகழ்வுகள் என நெஞ்சில் என்றென்றும் நிற்கும் நூல் இது. பன்னிரு படைக்களம் நூல், நான் ஒவ்வொரு நாளும் பதைபதைப்புடன் படித்த நூல். திரௌபதியின் துகிலுறிதல் நிகழ்வை நோக்கி மெல்ல மெல்ல கதை நகர்ந்து செல்வது மிகவும் மனதை கனக்கச் செய்யும் ஒன்று. உச்சகட்டமாக அந்த துகிலுறியப்படும் கணத்தில் அங்கு நின்ற ஒவ்வொரு ஆணுமே அதை உள்ளூர எதிர்பார்த்திருந்தான் என்ற வரிகள் மிகவும் துன்புறுத்தின. துரியனின் மகள் மூலமாக திரௌபதியின் மானம் காக்கப்படுவது, திரௌபதியின் வஞ்சினம் அவள் தோழி மாயையின் மூலம் வெளிப்படுவது என நாடகீய தருணங்கள் ஒன்றையொன்று விஞ்சுபவையாக இருக்கும்.

சொல்வளர்காடு, கிராதம், மாமலர் ஆகிய மூன்று நாவல்களும் நான் முழுமையாகவே படிக்காமல் விட்டவை. சிலமுறை ஆரம்பித்து ஆனால் தொடரமுடியாமல் வெளியேறியவை. அக்காலகட்டத்தில் வேலையிலும் பொருளாதார நிலையிலும் ஏற்பட்ட நெருக்கடிகள் ஓரளவு இதற்குக் காரணம் என நினைக்கிறேன். மேலும் முன்னர் கூறியதுபோல பாரதத்தின் முதன்மை நிகழ்வுகளிலிருந்து விலகி தனி நாவல்களென நின்றமையும் ஒரு காரணம் எனக்கு என நினைக்கிறேன். அடுத்துவந்த நீர்க்கோலம் நாவலை முழுக்க படிக்க முடிந்ததும் இதே காரணத்தால்தான். அது பாண்டவர்களின் அஞ்ஞாதவாச காலகட்டத்தை சொல்லும் நூல் என்பதால். இதில் பீமனிடம் சம்பவன் என்னும் அணுக்கன் வந்து சேரும் பகுதிகள் மிகவும் ஈர்த்தன. நடுவில் சில நாட்கள் படிக்காமல் விட்டாலும் திடீரென ஒருநாள் மீண்டும் ஆரம்பித்து விடாமல் படித்து முடித்த அன்று சரியாக நாவலும் வெளிவந்து முடிந்திருந்தது. இதற்கடுத்து வந்த எழுதழலும் குருதிச்சாரலும் பெரும்பாலும் தினமும் படித்துவிடமுடிந்தது. நான் படித்த மஹாபாரதப் பகுதிகள் இல்லையென்றாலும் குருஷேத்திரப் போர் நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக கதை நகர்ந்து சென்றதை ரசித்துப் படிக்க முடிந்தது. இளைய பாண்டவர்களும் அபிமன்யூவும் முதன்மை பெறும் பகுதிகள் கிருஷ்ணரின் தூது, தாய்களின் பதைபதைப்பு என ஆற்றில் செல்வதுபோல நிகழ்ச்சிகள் சீராக சென்றுகொண்டிருந்தன இவற்றில். ஏனோ இவை இரண்டையும் ஒரே நாவலாகவே என்னால் நினைக்க முடிகிறது. சமயங்களில் எந்த நிகழ்ச்சிகள் எந்த நூலில் வருகின்றன என்று பிரித்தறிய முடியாமல் இருக்கும். எழுதழல் என்ற தலைப்பை வைத்துக் கொண்டு “ஆஹா போர் எழுந்தது” என நினைத்தேன். பின்னர் குருதிச்சாரல் என்றதும் “நிச்சயம் போர் தான்” என்றும். ஆனால் இவைதாண்டி இமைக்கணம் தாண்டி செந்நாவேங்கையின் இறுதிப் பகுதிவரைக்கும் போர் எழ காத்திருக்க வேண்டியிருந்தது.

இமைக்கணமும் நான் கிட்டத்தட்ட முழுமையாக படிக்காமல் விட்ட நூல். கர்ணன் வரும் பகுதிகளை மட்டும் இரண்டு மூன்று முறை படித்து அத்தோடு விட்டுவிட்டேன். ஆனால் படித்த வரைக்குமே ஒரு வசீகரிப்பையும் திகைப்பையும் அளித்தன இமைக்கணத்தின் பகுதிகள். கர்ணனின் வாழ்க்கை இவ்வாறு இன்றி முழுக்க அனைத்தும் சரியாக நடந்திருந்தால், அவன் பெயர் சில நூற்றாண்டுகளில் மறைந்திருக்கும் வாய்ப்புள்ளது எனபதை ஜெயமோகன் விளக்கியிருக்கும் பகுதிகள் அசத்தலாக இருந்தன. கீதையின் உரைநூல்கள் சிலவற்றை படித்தபின் இதை படிக்கவேண்டும் என வைத்திருக்கிறேன். சென்னை வெண்முரசுக் கூட்டத்தில் கொரோனாவின் புண்ணியத்தால் இணையம் வழி இணையும் ஒவ்வொரு முறையும் “இல்லை, இல்லை. எவ்வாறாகிலும் அடுத்த கூடுகைக்குள் மொத்த நூலையும் படித்துவிடவேண்டும்” என்ற உறுதி கிளம்பும். பின்னர் படித்து முடிக்கவேண்டிய மற்றவை நினைவில் வந்து மீண்டும் அடங்கிவிடும். எவ்வாறு அதன் வாசிப்பு நிகழவிருக்கிறது என பார்க்கவேண்டும்.

செந்நாவேங்கையிலிருந்து ஆரம்பித்து நேர்கோட்டுப் பயணம்தான். வெண்முரசு இன்றி ஒருநாளும் கழிந்ததில்லை. அன்றன்றைய பகுதிகளை அன்றன்றே படித்துவிடுவது வழக்கமாக ஆனது. இக்காலகட்டத்தில் நான் வெளிநாட்டுக்கு வாழ வந்ததும் ஒரு முக்கிய காரணம். நான் இப்போது இருக்கும் சுவிட்ஸர்லாந்தில் இரவு ஏழரை (குளிர்காலங்களில்) அல்லது எட்டரை (வெயிற்காலங்களில்) ஆகும்போது இந்தியாவில் இரவு பன்னிரெண்டு ஆகிவிடும். ஆகையினால் அன்றைய அத்தியாயத்தை பொறுமையாக படித்துவிட்டு தூங்க ஏதுவாக இருக்கும். இருந்தாலும் போர் பகுதிகள் ஆரம்பித்தபின் எங்கு இருந்தாலும் படித்திருப்பேன் என தோன்றியது. ஒன்றின்மேல் அடுத்தது என உச்சங்களாக வந்துகொண்டே இருந்த பகுதிகள். அது நேற்று இரவு வரை நீண்டு முடிந்திருக்கிறது. இன்று ஆசானின் இணையதளத்தில் வெண்முரசின் பகுதிகள் வரவில்லை என்பதை கனக்கும் மனதுடன் பார்த்துவிட்டே இப்பதிவை எழுத ஆரம்பித்தேன். இனி அடுத்ததாக அவர் மேற்கொள்ள இருக்கும் முயற்சிகள் வெளிவரும்வரை ஒரு வெறுமை நிச்சயம் இருக்கும்.

வெண்முரசு நிறைவை ஒட்டி குரு பூர்ணிமை அன்று நடந்த ஸூம் கலந்துரையாடலில் வாசகர் ஒருவர் வெண்முரசில் படித்த வரிகள் மனதினுள் சென்று வாழ்க்கை அனுபவங்களினூடாக மீண்டும் எழுந்துவருவதைப் பற்றி சொல்லியிருந்தார். அது எனக்கும் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது. நானாக நினைத்து அவ்வப்போது சொல்லும் உவமைகள், தத்துவங்கள் எல்லாம் முன்னர் எப்போதோ வெண்முரசில் படித்தவை என்பதை கண்டுவருகிறேன். உதாரணமாக, எங்கள் மனதுக்கு நெருக்கமான பெண் தோழி ஒருவரின் மகன் அவரைப் போலவே இருப்பான். அவனிடம் பேசும்போதெல்லாம் அத்தோழியிடமே பேசுவது போல மனம் தானாக நினைத்துக் கொள்ளும். பின்னர் இதைக் குறித்து பேசும்போது “இப்போது அந்தத் தோழியை என்னால் இப்படி அணுக்கமாக நெருங்கி அன்பைக் கொட்டி கொஞ்சி பேசமுடியாதில்லையா? அந்த குறையை போக்குவதற்காகவே கடவுள் இவனை அவளுடைய தோற்றத்தில் படைத்தார் போல” என்றேன். இதே நினைப்பு என் நண்பர்கள் சிலரின் மகன் / மகள்களிடம் தோன்றியிருக்கிறது. இது ஏதோ நானே அன்பினால் உருகி கண்டடைந்த உண்மை என நினைத்தால், வெய்யோன் நாவலில் ஓரிடத்தில் இளைய கௌரவர்கள் துரியோதனனின் தோற்றத்தை கொண்டிருப்பதை சுட்டி கர்ணன் சொல்வதுபோல ஜெயமோகன் எழுதியிருக்கிறார். இதைப் பற்றி தோழி ஒருவரிடம் சொன்னபோது அவர் அப்போது படித்துக் கொண்டிருந்த வண்ணக்கடல் நூலில் இதேபோன்று அர்ஜுனன் சொல்வதையும் சேர்த்து சுட்டிக் காட்டினார். இவ்வாறு வரிகளும் உவமைகளும் நாம் படிக்கும்போது மனதினுள் சென்று, பின்னர் இன்செப்ஷன் படத்தின் வருவதுபோல தன் சொந்த கருத்து என வளர்ந்து வெளிவருவது அடிக்கடி நிகழ்கிறது. முதலில் ஆச்சரியமாகவும் அடுத்து எரிச்சலாகவும் இருந்தது. இவர் நம் மூளையை துளைத்து உள்ளே சென்று முழுக்கவுமே ஆக்கிரமித்து விட்டாரோ என. பின்னர் ஒருமாதிரி இது இயல்புதானே என்றாகி இப்போதெல்லாம் “அட அவரின் எழுத்துக்களை இவ்வளவு உள்வாங்கியிருக்கிறேனே” என பரவசப்படுவதில் வந்து சேர்ந்திருக்கிறது.

அதேபோன்று, வெண்முரசின் வெவ்வேறு பகுதிகளை பின்னர் நினைவு கூர்தல். உதாரணமாக பெண்களின் பெயர்கள் எவ்வாறு தமிழ்ப்படுத்தப்பட்டு வெண்முரசில் வருகிறது என ஒரு உரையாடல் சென்றது. அதாவது விஜயா தேவிகா போன்றவை விஜயை தேவிகை என்று ஆவது போல. இதில் ப்ரீதா என்பது ப்ரீதை என ஆகிறது என நான் சொன்னேன். அது வந்த பகுதியை நினைவு கூர்ந்து, அப்பெயர் கிருஷ்ணனும் அர்ஜுனனும் பேசிக்கொள்ளும் பெண் என நினைவுக்கு வந்து பிரயாகை என நினைத்துத் தேடி வெண்முகில்நகரம் என கண்டுகொண்டேன். அதில் அர்ஜுனன் கிருஷ்ணனின் தோளில் அறைவது முதற்கொண்டு மனதில் பதிந்திருந்தது. சென்னை வெண்முரசு கூடுகைகளுக்கு செல்லும்போதும், அங்கே குழுமத்தினர் குறிப்பிடும் நிகழ்ச்சிகளை உடனுக்குடனே முழு துல்லியத்துடன் நினைவிலிருந்து எடுக்க முடிந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. தானாக நினைவுக்கு வருவதில்லை ஆனால் மற்றோர் குறிப்பிடும்போது முழுக்க நினைவுகூர்வது வியப்பாக இருந்தது. சமீபத்தில் வெண்முரசில் விநாடிவினா போல ஒரு விளையாட்டு ஆடியபோதும் பெரும்பாலான கேள்விகளுக்கு உடனுக்குடனே பதில்சொல்ல முடிந்தது. இவற்றை படித்தபோது இவ்வளவு ஆழ்ந்து படித்ததில்லை. மேலும் இப்பகுதிகளைத் தொடர்ந்து வரும் வாசகர் கடிதங்களை படிக்கும்போதும் நிறைய விஷயங்களைத் தவற விட்டிருப்பதை கண்டிருக்கிறேன். ஆனால் மனதினுள் ஏதோ ஒருவகையில் இவை சென்று படிந்திருப்பது நினைவுகூரும்போது நிறைவாக இருக்கிறது.

வெண்முரசின் பலவரிகள் ஆப்த வாக்கியமாக மனதில் நின்றிருக்கும். அன்றன்று படிப்பவற்றில் அவ்வாறு தோன்றுவதை வாட்ஸாப் ஸ்டேட்டஸில் வைக்க வருவேன். சக ஜெயமோகன் வாசகர்களும், உற்ற நண்பர்களுமாக ஆனவர்கள் நிறைய பேர் அவற்றை ஏற்கனவே ஸ்டேட்டஸில் வைத்திருப்பதை பார்த்து புன்னகைத்து நிற்பேன். வாசிக்க ஆரம்பித்த பொழுதுகளில் இவற்றை தொகுத்து வைக்கலாம் என தோன்றியதுண்டு. ஆனால் இவர் எழுதிச் சென்ற அளவில் பாதிக்கும் மேல் அவ்வாறான வரிகள் இருப்பதை பார்த்து அவ்வெண்ணத்தை விடவேண்டியதாகியது. மீள்வாசிப்பில் அவ்வாறு மீண்டும் தொகுக்கலாம் என இருக்கிறேன்.

வெண்முரசில் என்னை மிகவும் ஈர்ப்பவை, அக்கால நிகழ்ச்சிகளையும் மகாபாரத நிகழ்வுகளையும் தர்க்கப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் ஜெயமோகன் எழுதுவது. கதாயுதத்தை வைத்து ஒருவன் தேரிலிருந்து போர்புரிவதை அவன் சங்கிலியுடன் கோர்த்து பயன்படுத்தினான் என்பது போல. பீஷ்மருக்கு முந்தைய குழந்தைகளை கங்கா தேவி ஆற்றில் மூழ்கடிப்பதை “காங்கேய குலத்தில் அவ்வாறு கங்கையில் இட்டு தானே நீந்தி கரையேறும் குழந்தைகளையே அக்குலத்தவர் ஏற்றுக்கொள்வர்” என்பது போல. போர் உத்திகள், வியூகங்கள், படைக்கலங்கள், அம்புகள், விற்களை பயன்படுத்துதல், துறைமுகங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், ஒலியை கட்டுக்குள் வைக்கும் மண்டப அமைப்புகள், என ஒவ்வொன்றிலும் அந்த மாதிரியான விளக்கங்கள் சித்தரிப்புகள் இருப்பதை காணமுடியும். இவற்றை படிக்கும்போது, தர்க்க ஒழுங்கைத் தேடும் மூளையின் பகுதிக்கு உணவளித்ததுபோலாகிறது. அதனால் கற்பனையில் பறக்க விரும்பும் பகுதிக்கு முழுச் சுதந்திரம் கிடைத்து படைப்பில் தோயமுடிகிறது.

இந்த வெண்முரசு நூல்களை கூடவே பயணித்து வாசித்த பொழுதுகளில் கனவுகளால் நிறைய அலைக்கழிக்கப்பட்டேன். ஏற்கனவே விதவிதமாக கனவு கண்டு தானும் பீதியாகி மற்றவரையும் இம்சை படுத்தும் எனக்கு இது குரங்குக்கு கிடைத்த கள் என்றாகியது. வெய்யோன் படிக்க ஆரம்பித்த பொழுதுகளில்தான் இந்த கனவுகள் வர ஆரம்பித்தது. வெண்முரசை ஒட்டி நானாக கனவில் கதையை என்போக்கில் எழுதிக் கொண்டு போகும் கூத்துகள் இருமுறை நடந்தது. வெய்யோனின் கர்ணனாக நான் ஒரு நாகர்குல கிராமத்துக்கு செல்கிறேன். அங்கு ஊரே என்னை எதிர்க்கிறது. அப்போது ஒரு பெண் மாத்திரம் அவர்களை தடுத்து திறமையாக வாதாடி நான் நாகர்குலத்தின் நன்மைக்கென வந்திருப்பவன் என்று அவர்களுக்கு புரியவைக்கை, அவர்களும் என்னை ஏற்றுக்கொண்டு ஊர்நடுவே உள்ள மண்டபத்தில் அருகருகே படுத்து உறங்குகிறோம். அனைவரும் உறங்கிவிட நான் அந்தப் பெண்ணின்மேல் அன்புகொண்டு எழுந்து சென்று அவளை எழுப்பி என் அன்பையும் நன்றியையும் சொல்ல, நனவுலகத்தில் என் மனைவி குழம்பியதில் முடிந்தது. அதேபோல் செந்நாவேங்கையில் போரின் முதல் நாட்களில் குலாடப்படைகள் கௌரவர்களின் தாக்குதலைத் தாங்கமுடியாமல் பின்வாங்க, பீமன் வெறிகொண்டு தன் படையினர் என்றும் பாராமல் அவர்களையே பின்னாலிருந்து தாக்க அந்த உக்கிரம் தாங்காமல் அப்படைகள், இதற்கு கௌரவப்படைகளுடனேயே மோதிவிடலாமென முடிவெடுத்து மீண்டும் முன்னேற அப்படைவீரர்களுள் ஒருவனாக நான் அலைக்கழிந்தது அக்கால கட்டத்தில் வந்த மிதமான கனவுகளில் ஒன்று. போர்க்களப் பகுதிகள் வந்த காலத்தில் அநேக இரவுகளில் வெறும் இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் மட்டுமே தூங்கி அலுவலகத்தில் சிரமப்பட்டிருக்கிறேன். சரியாக இந்த நாவல்களுக்கிடையேயான இடைவெளிகளில்தான் என்னால் நன்கு தூங்க முடிந்திருக்கிறது. முன்னர் சொன்னதுபோல தூங்கும்முன் இவற்றைப் படித்தது காரணம் என நினைக்கிறேன். நீர்ச்சுடர் வந்தபோது மீண்ட தூக்கம் கல்பொருசிறுநுரையில் மீண்டும் தடைப்பட்டது. இனிமேல் மீண்டும் ஒழுங்குக்கு வரும் என நினைக்கிறேன்.

வெண்முரசின் நிறைவு கட்டுரையில் வாசகர்கள் விடாமல் இரவு பன்னிரெண்டு மணிக்கு வாசிப்பதை ஜெயமோகன் எழுதியிருப்பார். அது எனக்கு மிகவும் அணுக்கமான ஒன்று. இந்தியாவிலிருந்த நாட்களில் இதற்காகவே பன்னிரெண்டு மணிவரைக்கும் எதையேனும் வாசித்துவிட்டு பின்னர் வெண்முரசை வாசித்துவிட்டு தூங்கச் செல்வேன். சிலசமயம் இதை படித்துவிட்டு மற்ற பதிவுகளை படிக்கும் மனநிலை வாய்க்காமல் போகலாம் என எண்ணி அவற்றை முதலில் வாசித்துவிட்டு இதற்கு வந்ததும் உண்டு. ஆர்வம் தாங்காமல் வேகமாக வந்து இதை வாசித்துவிட்டு மற்றைய பகுதிகளுக்கும் போனதுண்டு. வெய்யோன் வந்த போதுதான் ஜெயமோகன் அவர்களை நேரில் சந்தித்தேன். அவர் தங்கியிருந்த விடுதி அறையில் சென்று அவரைப் பார்த்தபோது வெய்யோனின் அன்றைய பகுதியை பிழை திருத்திக் கொண்டிருந்தார். அதை ஆர்வமாக நின்று பார்க்கமுடிந்தது நான் பெற்ற பேறுகளுள் ஒன்று. எல்லா பயணங்களிலும் இரவு விழித்திருந்து படித்திருந்திருக்கிறேன். சில சமயங்களில் ஆரம்பத்தில் தூங்கி பின்னர் மூன்று மணியளவில் எழுந்து படித்து மீதித் தூக்கத்தை தொலைத்திருக்கிறேன். ஒரு பேருந்து பயணத்தில் காண்டீபத்தையும் ஒரு ரயில் பயணத்தில் வண்ணக்கடல் புத்தகத்தையும் புத்தகமாக வைத்து படித்தது நினைவுக்கு வருகிறது. அவர் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து எழுதினார் என்றால் நானும் நான் பயணித்த சில நாடுகளில் எல்லாம் வைத்து வெண்முரசை படித்திருக்கிறேன். ஒருவகையில் சொல்லப்போனால் வெண்முரசு தவிர இந்த ஆண்டுகளில் வாசித்த மற்ற நாவல்கள் கதைகள் வெகுகுறைவு.

முழுக்கவே படித்ததில்லை என்பதால் வாசிக்கவேண்டியவை நான்கு நாவல்கள்.

சொல்வளர்காடு
கிராதம்
மாமலர்
இமைக்கணம்

வாசித்தேன் என்றாலும் மீண்டும் வாசிக்க நினைப்பவை.

வண்ணக்கடல் – குறிப்பாக இளநாகனின் பயணங்கள்.
நீலம் – முழுவதும்
இந்திரநீலம் – முழுக்க வாசித்தேன் என்றாலும் மீண்டும் ஒருமுறை ஆழ்ந்து வாசிக்கவேண்டும்.

வெண்முரசின் நாவல்களில் செம்பதிப்புகளாக இதுவரை வந்தவற்றில் வெய்யோன், எழுதழல், குருதிச்சாரல் ஆகியவற்றை வாங்காமல் விட்டுவிட்டேன். செந்நாவேங்கை அச்சு முடிந்து டெலிவரிக்காக காத்திருக்கிறது. முதற்கனல் முன்பதிவுத்திட்டத்தில் வந்தபோது, வாங்கலாமா இல்லை பின்னர் மலிவு விலைப் பதிப்பில் வாங்கிக் கொள்ளலாமா என்று ஊசலாடிக்கொண்டிருந்தேன். அறுநூறு ரூபாய் கொடுத்து ஒரு தமிழிலக்கிய புத்தகம் வாங்குவது என்பது எனக்கு பதட்டமூட்டும் விஷயமாக அப்போது இருந்தது. அதற்கு சற்றுமுன்னர்தான் விஷ்ணுபுரம் நாவலை கிட்டத்தட்ட அதேவிலைக்கு வாங்கியிருந்தேன். மீண்டும் அறுநூறு ரூபாயா என்று எண்ணியிருந்தபோது, யாரோ ஒரு வாசகருக்கு “மற்ற விஷயங்களிலும் இதே அறுநூறு ரூபாயை செலவழிக்க இதே அளவு யோசிப்பீர்களா என நீங்களே சிந்தித்துப் பாருங்கள்” என்ற ரீதியில் ஜெயமோகன் பதிலளித்திருந்தார். அது எனக்கே என சொன்னதுபோல இருந்தது. ஒரு கைபேசிக்கு பத்தாயிரம் ரூபாய் செலவழிக்க தயங்காதவன் இதற்கு கணக்கு பார்க்கிறேனே என வெட்கினேன். இதற்கிடையில் நான் பங்குபெற்றிருக்கும் சொல்புதிது குழுமத்தில் ஒரு நண்பர் “இவையன்றி நம் குழந்தைகளுக்கு நாம் என்ன சொத்து சேர்த்து வைத்துவிடப் போகிறோம்” என எழுதியிருந்தார். தாமதிக்காமல் உடனே நானும் முன்பதிவு செய்தேன். முன்னூறு பேர் வரை சேராவிட்டால், செம்பதிப்பு திட்டத்தை கைவிட்டுவிட்டு பணத்தை திரும்பக் கொடுத்துவிடுவதாக சொல்லியிருந்தார்கள். ஆனால் நல்ல வேளையாக நூல் நல்லபடி வெளிவந்தது. நற்றிணை பதிப்பக அலுவலகத்திற்கு நானே சென்று வாங்கி வந்தேன் என நினைவு. புத்தகத்தில் “கணேஷ் பெரியசாமிக்கு, அன்புடன் ஜெயமோகன்” என எழுதி கையெழுத்திட்டிருந்தார். மிகவும் ஆசையுடன் அப்பக்கத்தை அடிக்கடி பார்த்துக் கொள்வேன். பின்னர் வந்த செம்பதிப்பு நூல்கள் ஒவ்வொன்றிலும் என் மனைவியின் பெயர், மகள்களின் பெயர்களைக் குறிப்பிட்டு கையெழுத்து வாங்கிக்கொள்வேன். பின்னர் என் பெயருக்கே அனைத்தையும் கையெழுத்திட்டு வாங்கிக் கொள்கிறேன். புத்தகங்களை என் அலுவலக முகவரிக்கு தருவிப்பேன். வந்ததும் பிரித்து பார்த்து (ஓவியங்கள் வந்தவரைக்கும்) ஓவியங்களில் மயங்கி பின்னர் முகர்ந்து பார்த்துவிட்டு அலுவலக மேஜையிலேயே போவோர் வருவோர் பார்வையில் படுமாறு அன்றுமுழுக்க வைத்திருப்பேன், “ஆ! வெண்முரசு வாசகரா நீங்க! வாங்க உக்காந்து பேசுவோம்” என்று அழைக்கப்போகும் நபரை எதிர்பார்த்து. ஆனால் இதுவரை அவ்வாறு நடந்ததில்லை.

என் மனைவி இரண்டாவது மகளைக் கருவுற்று இருந்தபோது வண்ணக்கடல் வெளிவந்து கொண்டிருந்தது. என்ன குழந்தை பிறக்கப்போகிறது என்ற குறுகுறுப்பில் என்னைச் சுற்றி நடப்பவை வழியாக இயற்கை அதற்கு ஏதாவதொரு வகையில் குறிப்புணர்த்துகிறதா என்றெல்லாம் பார்த்துக் கொண்டிருப்பேன். பிரசவத்திற்குக் குறித்த நாள் நெருங்கும் தருவாயில் வண்ணக்கடல் முடிந்து வெண்முரசின் அடுத்த நூலாக நீலம் வரவிருப்பதாக ஆசானின் தளத்தில் பதிவு வந்தது. நான் உடனே “ஓ! கிருஷ்ணன் போல ஒரு மைந்தன் பிறக்கவிருக்கிறான்” என கடவுளே குறிப்புணர்த்துகிறார் என நினைத்து பரவசமானேன். பெண்குழந்தையாக பிறந்ததும் குழம்பினேன். ஆகஸ்ட் 14 அவள் பிறந்தாள். ஆகஸ்ட் 18ம் தேதியிலிருந்து நீலம் வர ஆரம்பித்தது. உறங்கும் ராதையிலிருந்து முதல் அத்தியாயம் கிளம்பி ராதையின் வழியாக கிருஷ்ணனை பார்க்கும் கோணத்தில் நீலம் விரிய, சரியாகத்தான் குறிப்பு வந்திருக்கிறது, நான் தான் லட்சணமாக புரிந்துகொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன். வெண்முரசிலேயே தேடி எடுத்து அதிதி என அவளுக்கு பெயரிட்டேன். ஆசானிடம் நேரில் சந்தித்து ஒருமுறை சொன்னபோது புன்னகைத்தார்.

இங்கு நின்று இந்த ஏழாண்டுகளில் வெண்முரசோடு சேர்ந்து என்னென்னவெல்லாம் என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கின்றன, எவ்வாறெல்லாம் நான் உருமாறியிருக்கிறேன் என்பதை திரும்பிப் பார்க்கும்போது வியப்பாகவும் ஊக்கமாகவும் இருக்கிறது. பொதுவாக லீப் வருடங்களின்போதும், ஒவ்வொரு தேர்தலின்போதும் இவ்வாறு நினைத்துப் பார்ப்பேன். இப்படி வெண்முரசோடு இணைத்துப் பார்க்கும்போது நிறைவாக இருக்கிறது. இந்த ஏழாண்டுகளில் இரண்டாவது மகள் பிறந்து, இரு மகள்களும் வளர்ந்து, கொஞ்ச நாட்கள் பள்ளிக்கு சென்று பின்னர் எங்களால் வீட்டில் படிக்கவைக்கப் பட்டு இப்போது சுவிஸ் வந்த வகையில் மீண்டும் பள்ளிக்கே சென்று வருகின்றனர். கடனில்லாத வாழ்க்கையிலிருந்து, வாழ்க்கையின் முதல் கடனாக வீட்டுக் கடனை வாங்கி, ஒரு அடுக்ககத்தில் ஒரு வீட்டை வாங்கி போராடி குடியேறி, கடன் கழுத்தை நெறித்து இப்போது வெளிநாட்டு வருவாயினால் மீண்டு வந்திருக்கிறோம். ஷெல்ஃபுகளில் ஒரு தட்டு என இருந்த புத்தக அடுக்கு, பல தட்டுக்களுக்கு பரவி ஒரு தனி அலமாரி வாங்கும் நிலைக்கு வந்து இப்போது அதையும் தாண்டி மற்ற அலமாரிகளை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் வாழும் வாழ்க்கை, மேற்கொள்ளும் முடிவுகள் ஆகியவற்றில் நம்பிக்கை மீதூறி வந்திருந்திருக்கிறது. என் எழுத்து நடை நன்கு மேம்பட்டிருக்கிறது. ஆசானின் எழுத்து நடையையும் அவர் வார்த்தைகளையும் பிரதியெடுப்பது நடந்தாலும் அதுவும் இயல்புதான் என சமீபத்தில் எழுதிய கட்டுரையில் ஆசானே சொல்லிவிட்டதால் அதைப் பற்றிய குறைகள் ஏதுமில்லை. ஒரு வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்து, இன்னொரு வெளிநாட்டு பயணத்தை ஏற்று ஊர் மாறி நாடு மாறி இங்கு வந்து சில வாரங்களில் திரும்பிவிடுவோமோ என்ற நிலையிலிருந்து மாறி மூன்றாவது வருடத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். வீடு மாற்றங்கள், ஊர், நாடு மாற்றங்கள் என நிறைய. “வெண்முரசு வந்திட்டிருந்த காலத்தில நான் இதை செஞ்சேன்” என வருங்காலத்தில் நினைவுகூர பல விஷயங்கள் இருக்கின்றன.