பழைய பேப்பர் – துக்ளக்

முன்னுரை

துக்ளக் இதழின் மீது பெரும் நம்பிக்கையும், விருப்பமும் கொண்டவன் நான். துக்ளக் இணையதளத்தில் அதன் பழைய இதழ்களும் (2006ம் வருடம் வரை) கிடைப்பதால், அவற்றில் கிடைக்கும் சுவையான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் இந்தத் தொடர் பதிவுகளை ஆரம்பிக்கிறேன். மற்ற பத்திரிக்கைகளின் பழைய செய்திகளையும் (கிடைக்கும் பட்சத்தில்) சேர்த்துக் கொள்ளலாம் என்று இருக்கிறேன். தமிழனின் “பழைய பேப்பர் படிக்கும் பண்பாட்டின்” மீது நம்பிக்கை வைத்து இதைத் தொடங்குகிறேன்.

2006ம் ஆண்டு மே 2ம் தேதியிட்ட துக்ளக்கில் இருந்து ஆரம்பிக்கிறேன். இதில் ஒரு சுவாரஸ்யமான கட்டுரை வந்துள்ளது. அந்த மாதத்தில் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடந்து தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. அந்த சமயத்தில் (வாக்குப் பதிவு முடிந்து எண்ணிக்கை தொடங்குவதற்கு முன் என்று நினைக்கிறேன்) வந்த கட்டுரை இது.

யார் ஜெயிப்பார்கள் என்று ஜோதிடர்கள் சிலரிடம் கருத்துக்கள் பெறப்பட்டு அவை அச்சாகியுள்ளன.

கோட்டையூர் சிவசுப்ரமணியம் (ஆசிரியர், ஜோதிட முரசு).

 

எஸ்.ஆர். வைகை வளன்

 

கா.அறிவழகன் (ஜோதிடர், மதுரை)

ஆகிய மூவரின் கருத்துக்களும் வெளியாகி உள்ளன. இவற்றில் கா. அறிவழகன் தவிர மற்ற இருவரும் அ.தி.மு.க. வே ஜெயிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்! சோ அவர்களை அதிமுக ஜால்ரா என்று சொல்லி புறப்படுபவர்களுக்கு நல்ல தீனியாக இக்கட்டுரை இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஜோதிடம் குறித்து எனக்கு நல்ல அபிப்பிராயம் இருந்தாலும், இந்த மாதிரி ஜோதிடங்கள் எவ்வாறு கணிக்கப்படுகின்றன என்பதே தெரியவில்லை. இதைக் கூட பொறுத்துக் கொள்வேன். சிலர் பங்கு வர்த்தகம் குறித்தும் ஜோதிடக் கருத்துக்களை வாரியிறைக்கின்றனர். அவையெல்லாம் எப்படி மக்கள் நம்புகிறார்கள் என்று ஆச்சரியமாக இருக்கிறது. யாராவது விஷயம் தெரிந்தவர்கள் கூறுங்களேன்.

இந்தக் கட்டுரைக்கான இணைப்பு இதோ.

http://www.thuglak.com/thuglak/main.php?x=archive/02_05_2006/yaar16_17.php&startpos=1

இந்தத் தளத்தில் நுழைய நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டியிருக்கும். பதிவு இலவசம்தான். ஆனால் சமீபத்திய இதழ்களை மட்டும் படிக்க முடியாது (கடைசி 12 இதழ்கள் என்று நினைக்கிறேன்). ஆனால் பழைய இதழ்களைப் படிக்க முடியும். எழுத்துரு பிரச்சனையால் என்னுடைய இந்தத் தளத்தில் இக்கட்டுரையை பதிவேற்ற முடியவில்லை. வரும் பதிவுகளில் பார்க்கலாம்.