விடாது கறுப்பு

தினமும் அலுவலகம் செல்லும்போது, குப்பை மூட்டையைக் கொண்டு சென்று வீதி முனையில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போட்டுச் செல்வது வழக்கம். வழக்கமான என் மறதியின் காரணமாக, அடிக்கடி குப்பையைக் கொட்ட மறந்து, அலுவலகம் வரை அந்த குப்பை மூட்டையை கொண்டு சென்று விடுவேன் 🙂 அன்றும் அப்படித்தான் ஆனது.

சரி, வரும் வழியில் குப்பையை போட்டுவிடலாம் என்று திரும்ப கொண்டு வந்தபோது, சாலையில் ஒரு வேக உடைப்பானில் வண்டி ஏறியபோது குலுக்கலில் குப்பை மூட்டை கீழே விழுந்துவிட்டது. நானும் கவனிக்கவில்லை. பின்னால் வந்த ”அன்பர் நெ.1” என்னைக் கூப்பிட்டு “நீங்க எதுவும் பிளாஸ்டிக் பை வண்டில மாட்டியிருந்தீங்களா? அது அங்க வுழுந்துடுச்சு” என்றார். நான் “ஆமா.(அவர் குப்பை மூட்டையைத்தான் சொல்கிறார் என்பதை உணர்ந்து) ஓ. அது பரவாயில்லை. தாங்க்ஸ்” என்றேன்.

பின் சிறிது தூரம் வந்த பிறகு பின்னாலிருந்து மறுபடியும் ஒரு குரல். இப்போது “அன்பர் நெ.2”. சரி அவரும் குப்பை மூட்டையைப் பற்றித்தான் சொல்லப் போகிறார் என்று பார்த்தால்……

..

..

..

மனுஷன் குப்பை மூட்டையை சிரத்தையாக எடுத்துக் கொண்டு என் பின்னாலேயே வந்து வழியை மறித்து, கையில் கொடுத்துவிட்டார்!!! நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு “ரொம்ப தாங்க்ஸ் ஸார். பை தெ வே அது குப்பை மூட்டைதான். இருந்தாலும் ரொம்ப தாங்க்ஸ்” என்றேன். 

பாவம். அவர் முகம் தொங்கிப் போய்விட்டது 🙁 இருந்தாலும் நான் அதை சொல்லியிருக்க வேண்டாம் என்று அப்புறம் தோன்றியது. anyways damage has happened 🙂 பின் வாயும் சிரிப்புமாக அந்த மூட்டையை ஞாபகமாகக் கொண்டு வந்து குப்பைத் தொட்டியில் வீசிவிட்டு வந்தேன். 

moral of the story : தமிழ்நாட்டில் இன்னும் கூட நிறைய நல்ல உள்ளங்கள் இருக்கின்றன். 

பி.கு : இந்தப் பதிவுக்கும், இந்தத் தலைப்புக்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பவர்களுக்கு : அந்தக் குப்பை மூட்டையின் நிறம் ”கறுப்பு”.