மூங்கில் குடில்

ஒரு Update : இந்த உணவகம் மூடப்பட்டுவிட்டது

நேற்று இரவு போருர் சிக்னல் அருகே கடைகளுக்கு சென்றுவிட்டு, அப்படியே இரவு உணவை முடித்துக் கொள்ளலாம் என்று மூங்கில் குடில் என்று பெயரிடப்பட்டிருந்த உணவகத்திற்கு சென்றோம். மூங்கில் என்ற கருப்பொருளை வைத்து முழு உணவகத்தையும் வடிவமைத்திருக்கிறார்கள். உணவின் தரம் மற்றும் சுவை நன்றாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. மேலும் நிறைய, நிறைய உணவு வகைகள். கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. சில அரேபிய உணவு வகைகள் கூட இருந்தன!

ஆனால் உணவை பரிமாற எடுத்துக் கொள்ளும் நேரம் கொஞ்சம் அதிகம்தான். மேலும் பில் தொகையை செலுத்துவதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது. ஒருமுறை சென்று பார்க்கலாம் என்று பரிந்துரைக்கிறேன்.

நிற்க. இதில் முக்கியமான விஷயம் அவர்களுடைய உணவு வகைப் பட்டியல்தான். நிறைய எழுத்துப் பிழைகள். சில சிரிக்கவும், சிந்திக்கவும், பயப்படவும் வைக்கின்றன. உதாரணத்திற்கு சில.

Mutton Papper soup : காகிதத்தை papper என்று ஸ்வீடிஷ் மொழியில் குறிக்கிறார்கள். ஒருவேளை காகிதம் தின்ற ஆட்டின் சூப்பாக இருக்குமோ?

Sexy chicken Fried (Half/Full) : கோழியிலும் கவர்ச்சியா? பாதி மற்றும் முழு என்று வேறு சொல்கிறார்கள்.

Panner & panner tikka : அவரை 65 என்றால்? என்ன செய்வார்களோ? இதில் டிக்கா வேறு

Noodless (!?) – சில உணவுகளை மட்டும் வெகு தாமதமாகக் கொண்டுவந்ததன் காரணம் இப்போது புரிகிறது. அவையும் Noodless போல. ஆனால் அதை ஏன் குறிப்பிடவில்லை?

Gopi manchurian – ”கோபிநாத்”கள் தங்களுடைய “உடமைகளை” பத்திரமாக பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். “தவறினால்” நிர்வாகம் பொறுப்பல்ல

Kashmier naan – என்னை இந்த அரசியல் விளையாட்டுக்கெல்லாம் இழுக்காதீர்கள்!!