ஹிந்து சமய ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி

திருவான்மியூர் பஸ் நிலையத்தின் பின்புறம் ராமச்சந்திரா கல்லூரி வளாகத்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற இந்த கண்காட்சிக்கு கஷ்டப்பட்டு ஜூலை 13 அன்று சென்றுவந்தேன். நான் நினைத்திருந்ததைவிட பெரிதாகவே இருந்தது. நுழைந்து சிலநேரமானபோது கூட சிறியது, எளிதில் சுற்றிப்பார்த்துவிடலாமென்றுதான் நினைத்தேன். நிறைய கடைகள், சில ரதங்கள், சில தற்காலிக ஆலயங்கள், வழக்கம்போல் சாப்பாட்டுக்கடை மற்றும் ஒரு மண்டபத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் என்று நன்றாகவே களை கட்டியிருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டமும் கணிசமாக இருந்தது. வாயிலில் ஆச்சரியமாக பாதுகாப்பு சோதனைகள். சிறிய பைகள் வைத்திருந்தவர்கள் உட்பட பைகள் கொண்டு வந்திருந்தவர்கள் தனியாக சோதனை செய்யப்பட்டார்கள்.

முகப்பிலேயே ஆர்.எஸ்.எஸ்ஸின் பத்திரிக்கையான விஜயபாரதத்தின் ரதம் நின்றிருந்தது. அங்கு இருந்த இளைஞரிடம் பொதுவாக பேசிக்கொண்டிருந்தபோது (கடந்த ஒன்றரை மாதமாக தமிழ்நாட்டை வலம் வந்துகொண்டிருக்கிறதாம்), ஒரு மஹாத்மாவை சந்திக்க நேர்ந்தது. கடையை பார்க்கவந்த அந்த நபர், விஜயபாரதம் இதழை புரட்டி பார்த்துவிட்டு, “பழைய இதழ்கள் ஏதேனும் இருந்தால் ஒன்று கொடுங்களேன். படித்துப் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்கிறேன்” என்று கேட்டார்! ஒரு இதழின் விலை ரூ.10 மட்டுமே! இந்த இளைஞரும் மறுபேச்சில்லாமல் ஒரு பழைய இதழை எடுத்துக் கொடுத்து “அதன் பின்னாலேயே, சந்தா முகவரி, மற்றும் இணையதள முகவரியெல்லாம் இருக்கு ஸார்” என்று சொல்லி அனுப்பிவைத்தார். இவர் தன் மகன்/மகளுக்கு எப்படி வரன் பார்க்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டேன்.

கடைகளை பார்த்தபோது புத்தக சந்தைதான் ஞாபகத்திற்கு வந்தது. நிறைய புத்தகக் கடைகள். தமிழ்நாட்டில்தான் எத்தனையெத்தனை மஹான்கள் இருக்கிறார்கள். தலையை சரித்தபடி சிரித்த, ஒரு கையை உயர்த்தி அருள்புரிகிற, இருகைகளையும் உயர்த்தி அருள்புரிகிற, அன்புடன் பார்க்கிற பல மஹான்கள்.  தீவிரமாக முகத்தை வைத்திருந்த ஒரு மஹானின் புகைப்படம் கூட கண்ணில் பட்டது. அவர்களது பொன்மொழிகள், கேள்வி-பதில்கள், உரைகள் இப்படி கடைகள் ரொம்பி வழிந்தன. நிறைய குழுக்கள் அவற்றுக்கென தனி சீருடைகளுடன் வந்திருந்தன.

ராமகிருஷ்ண மடம், ரமணாஸ்ரமம், யோகி ராம்சுரத்குமார் ஆசிரமம், மூன்று சங்கர மடங்கள், மாதா அமிர்தனந்தமயி ஆசிரமம் என நான் அறிந்தவையும் அதில் இருந்தன. தமிழ்ஹிந்து தளத்தின் கடையென்று நினைக்கிறேன், நான் சென்றபோது அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு எங்கோ சென்றிருந்தனர். சில நிமிடங்கள் பொறுத்திருந்து பார்த்துவிட்டு வந்துவிட்டேன். இஸ்கான், மற்றும் ஹரே கிருஷ்ணா இயக்கதினரின் கடைகளும் இருந்தன. ஹரே கிருஷ்ணா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் என்னை படாதபாடு படுத்திவிட்டார்.

நிறைய அனாதை ஆசிரமங்களும் கடைகள் வைத்திருந்தனர். அங்கு கிடைக்கும் வருமானம் முழுவதும் அனாதை குழந்தைகளின் வளர்ச்சிக்காக பயன்படுவதாக சொல்லிக்கொண்டிருந்தனர். சில விசித்திரமான கடைகளையும் பார்த்தேன். பலவருடங்களாக அனாதை பிணங்களுக்கு இறுதி காரியங்களை செய்துவரும் ஒரு அமைப்பு, வாள், சிலம்பம் ஆகியவற்றை கற்றுத்தரும் ஒரு அமைப்பு, சமஸ்கிருதம் சொல்லித்தரும் ஒரு கல்லூரி மற்றும் ஒரு அமைப்பு என பலர் கடைகளை அமைத்திருந்தனர்.

ஒரு கனத்த உருத்திராட்ச மாலையை நான்கு சுற்றுக்களாக சுற்றி ஒருவர் அமர்ந்திருதார். ஆண்கள் போல் திருநீறை பட்டையாக அணிந்திருந்த பெண்மணி, குடும்ப சகிதமாக அமர்ந்து ஏதோ பொருட்களை விற்றுக் கொண்டிருந்த ஒரு பிராமண பெண்மணி, உட்கார்ந்த இடத்திலேயே ஆட்களை கூப்பிட்டு நோட்டிஸை திணித்த நபர்கள், ஹிந்து மதத்தினர் கேவலமாக நடத்தப்படுகின்றனர் என்று ஆதாரங்களை காட்டி முழங்கிய ஒருவர் என இடமே ரகளையாக இருந்தது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரபல ஆடிட்டர் திரு. எஸ். குருமூர்த்தி (அபிஷேக் பச்சான் நடித்த குரு திரைப்படத்தில் வரும் மாதவனுடைய பாத்திரம் குறிப்பது இவரைத்தான்!) என குமுதத்தின் மூலம் அறிந்தேன். ஞாயிற்றுக்கிழமையாக இருக்கிறது பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைக்குமா என்று நப்பாசையுடன் தேடிக்கொண்டிருந்தேன். கிடைக்கவில்லை.

ஒரு கடையில் அனைவருக்கும் மினரல் வாட்டர் கேன்களில் கொண்டுவந்த தண்ணீரை இலவசமாக கொடுத்தார்கள். வந்த அனைவருக்கும் எல்லா கடைகளிலும் கை நிறைய நோட்டிஸ்கள் கொடுத்தார்கள். ஒரு சில கடைகளில் ஒவ்வொருவருக்கும் இரண்டு வேறு. சில குழந்தைகள்கூட நோட்டிஸுடன் அலைந்தன. மற்றபடி சாப்பிடுமிடம் முதற்கொண்டு ஓரளவு சுத்தமாகவே பராமரித்திருந்தார்கள்.  நாங்கள் போன அன்று சீனிவாச திருக்கல்யாணம் நடத்தினார்கள். பாப்கார்ன், மிளகு தட்டை சகிதம் கண்டுகளித்தோம்.

ஒரேயொரு மிகக்கசப்பான விஷயம். தேய்வழக்காக எழுதவில்லை. நிஜமாகவே எரிச்சலாகவும், சோகமாகவும் இருந்தது. நிறைய ஜாதி சங்கங்கள் கடைகள் போட்டிருந்தார்கள். ஏறத்தாழ எல்லா ஜாதிகளுமே நீக்கமற நிறைந்திருந்தார்கள். வடநாட்டு, தென்னாட்டு ஜாதிகளும் அடக்கம். நான் பார்த்த கடைகளில், அந்தந்த சமூகங்களின் சிறப்பு, வாழ்க்கை வரலாறு, வகையறா புத்தகங்கள். மேலும் அந்த சமூகங்களை சேர்ந்தவர்கள் என்று பிரபலமானவர்கள் நிறைய பேரை முத்திரை குத்தி புகைப்படத்துடன் பேனர் வைத்திருந்தனர். ஜாதியின் தீமைகளைப் பற்றி படம் எடுத்த ஒர் இயக்குனரும் அடக்கம். அவர்களிடமெல்லாம் ஒப்புதல் வாங்கினார்களோ இல்லையோ தெரியவில்லை.

ஹிந்து மதத்திலும் இம்மாதிரி சேவை அமைப்புகள் நிறைய உள்ளன என்று தெரியும். இருப்பினும் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பார்க்கும்போது சந்தோஷமாகவே இருந்தது. அடுத்த வருட கண்காட்சியை ஆவலுடன் எதிர்நோகியிருக்கிறேன்.

நான் பார்த்தவற்றில் பயனுள்ளதாக தோன்றிய இரண்டு கடைகள்.

1. ஆர்.எஸ்.எஸ்ஸின் கடை. சங்கத்தில் சேர வருபவர்களுக்கும் ஏற்பாடுகள் செய்திருந்தனர். சேர விரும்புவோர் அதன் இணையதளத்தில் சென்று உங்களுடைய தகவல்களை கொடுத்தால், அவர்களே உங்களை தொடர்புகொண்டு சேர்த்துக் கொள்வார்களாம்.

2. மயிலாப்பூர் சமஸ்கிருத கல்லூரி. சமஸ்கிருத வகுப்புகள் எடுக்கிறார்கள். வரும் ஆகஸ்ட்டில் ஒரு கோர்ஸ் ஆரம்பிக்கிறார்கள். ஏப்ரல் வரை செல்லும் அதன் மொத்த செலவு ரூ.7000. சனி மற்றும் ஞாயிறுகளில் மாலை வகுப்புகள் நடைபெறும். தேர்வு செலவுகள் தனி. இதில் படிப்பதன்மூலம் சமஸ்கிருதம் எழுத, படிக்க, புரிந்துகொள்ள முடியுமாம்.