தமிழில் எழுதுவது குறித்து…

தமிழில் எழுதுவது குறித்து…

முன்குறிப்பு #0 : மீண்டும் அக்குபிரஷர் பதிவுகளுக்கு ஒரு சிறு ஓய்வு கொடுக்கிறேன்.

முன்குறிப்பு #1 :இதெல்லாம் ஒரு பதிவாக எழுதவேண்டுமா என நானுமே நினைத்ததுண்டு. ஆனால் யதார்த்தத்தில், நிறைய பேர் இன்னமும் இது குறித்த தகவல்கள் அறியாமல் இருக்கிறார்கள் என்ற ஞானம் எனக்கு சமீபத்தில் கிடைத்ததால் இதை எழுதுகிறேன்.

முன்குறிப்பு #2 : கணினி, கைபேசி மற்றும் டேப்லட் போன்ற இதர சாதனங்களில் தமிழில் எழுத விரும்புபவர்களுக்கும், முயற்சிப்பவர்களுக்கும் இந்தப் பதிவு உதவியாக இருக்குமென்று நினைக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டிருக்கும் செயலிகள்/வசதிகள் அனைத்தையுமே அவ்வப்போது நான் உபயோகப்படுத்தி வருகிறேன். ஆகவே இந்தப் பதிவு முழுக்க முழுக்க என் சொந்த அனுபவத்திலிருந்து எழுதுவது மட்டுமே! எந்தவிதமான விளம்பரப்படுத்துதலும் இதிலில்லை. மேலும் ஒரு விஷயம். இந்த பதிவு, இந்த செயலிகள் அளிக்கும் வசதிகளையோ அல்லது அவற்றின் குறைகளையோ இந்தப் பதிவு முழுவதுமாக பட்டியலிட்டுவிடவில்லை. அந்த வகையில் இது ஒரு அறிமுகப்பதிவு மட்டுமே. ஆகவே நீங்கள் உங்கள் அனுபவத்தில் இவற்றை பயன்படுத்தி பார்த்தோ அல்லது இவை வழங்கும் ஆவணங்களை படித்துப்பார்த்தோ சரிபார்த்துக்கொள்வது உத்தமம்.

செயலிகளும் இணையதளங்களும்:

1. NHM Writer   – செயலி

எனக்கு மிகவும் விருப்பமான செயலி இது. New Horizon Media நிறுவனத்தின் படைப்பு இது. நானறிந்தவரை, இது கணிப்பொறிகளை மட்டுமே இலக்காக்கி உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற சாதனங்களுக்கு இன்னமும் வரவில்லை. கொண்டுவரும் எண்ணமும் இல்லை போல. ஆனால் என்னைப் பொறுத்தவரை இது விண்டோஸ் தளத்தில் மிகவும் உதவியாக இருக்கிறது. உதாரணமாக, நீங்கள் உங்கள் வீட்டு கணினியிலிருந்து ஏதேனும் தகவல்களை தமிழில் பகிர்ந்து கொள்ளும் பட்சத்தில் இது மிகவும் உதவியாக இருக்கும். இந்தப்பதிவையே இச்செயலியை கொண்டே எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மாறி மாறி எழுதுவோர்க்கு இது மிகவும் உதவியாக இருக்கும். சில சமயம் தமிழ் மொழிக்கு மாறாமல் முரண்டு பிடிக்கும். ஆனால் விண்டோஸ் மரபுப்படி, “புனர்ஜென்மத்தில்” நன்கு வேலை செய்கிறது.  உபுண்டு லினக்ஸில் முன்பு ஒருமுறை முயற்சித்துப் பார்த்தேன். சரிவரவில்லை. மற்ற தளங்களில் எவ்வாறு என்று தெரியவில்லை. கூகுளில் NHM Writer  என்று தேடினாலே இணையதள முகவரி கிடைக்கிறது.

2. http://tamileditor.org

நீங்கள் வேறு ஏதேனும் கணினியிலிருந்து, குறிப்பாக NHM Writer போன்ற செயலிகளை நிறுவுவதற்கு தடை செய்யப்பட்டிருக்கும் கணினியிலிருந்து (உதாரணமாக அலுவலகக் கணினி) தகவல்களை தமிழில் எழுதும் பட்சத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். டேட்டாவும் குறைவாகவே தேவைப்படும். இது ஆண்ட்ராய்ட் கைபேசியில் வேலை செய்யவில்லை. கணிப்பொறியில் நன்றாக வேலை செய்கிறது. முன்பு இந்த இணையதளத்தில் சில குறைபாடுகளை கவனித்துள்ளேன். ஆனால் இப்போது மிகவும் நன்றாக உள்ளது. தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் இடையில் மாறி மாறி எழுதுவது இப்போது நன்றாக வேலை செய்கிறது.

இணைப்பு : http://tamileditor.org/

3.  Google Transliterate

இதுவும் ஏறத்தாழ tamil editor.org போன்ற‌தே. இதைக்கொண்டுதான் தமிழில் முதன்முதலில் கணினியில் எழுத ஆரம்பித்தேன். எனினும் மேற்கூறிய மற்ற இரு வழிகளை ஒப்பிட்டு பார்க்கும்போது, இது அவ்வளவு வசதியான ஒன்றாக தோன்றவில்லை. ஆகவே மேற்கூறிய இரு வழிகளும் இல்லாத நிலையில் மட்டுமே இதை நான் பயன்படுத்துகிறேன். இது ஜிமெயிலிலும் முன்பு இணைக்கப்பட்டு இருந்தது. நடுவில் ஏனோ வேலை செய்யவில்லை. இப்போது மறுபடியும் கிடைக்கிறது என்றே நினைக்கிறேன்.

இணைப்பு : http://www.google.com/intl/ta/inputtools/cloud/try/

4. செல்லினம் (Sellinam)

நீங்கள் கைபேசியில் தமிழில் எழுத வேண்டுமென்றால் Google Transliterate தவிர மேற்கூறிய மற்ற இரண்டும் ஒத்துவராது. Google Transliterate, ஆண்ட்ராய்டில் Chrome extension இருந்தால் வேலை செய்யும்போல தோன்றுகிறது. இவ்வளவும் செய்வதற்கு பதில் செல்லினம் செயலியை உங்கள் கைபேசியில் நிறுவிக்கொள்ளலாம். இது ப்ரௌஸர் மட்டுமின்றி எந்த செயலியிலும் தமிழில் எழுத உதவுகிறது. சில சிக்கல்கள் தவிர பெரும்பாலும் நன்றாகவே வேலை செய்கிறது. நான் அக்குபிரஷர் அனுபவங்கள் குறித்த ஆரம்ப பகுதிகளை இந்த செயலி மூலம் கைபேசியில் தான் எழுதினேன். சரளமாக உபயோகப்படுத்த முடிந்தது.

செல்லினம் என்ற இந்த பெயரை மிகவும் ரசனையோடு இட்டிருக்கிறார்கள் 🙂 மேலும் இச்செயலி ஏதாவது நோட்டிஃபிகேஷன் தரும்போது வரும் மிருதங்க ஒலி மிகவும் வித்தியாசமாகவும் இனிமையாகவும் உள்ளது.

NHM Converter :

இந்த செயலிக்கும் மேற்கூறிய செயலிகளுக்கும் பயன்படுத்தும் முறையில் எந்த தொடர்பும் இல்லை. ஆனால் ஒரு முழுமைக்காக இதைப்பற்றியும் இங்கு எழுத எண்ணுகிறேன். Unicode எழுத்துரு வருவதற்கு முன்பு தமிழில் ஒவ்வொரு இணையதளமும் தனக்கென ஒரு எழுத்துருவை பயன்படுத்தி வந்தன / வருகின்றன. இவற்றை யுனிகோடிற்கு மாற்றவோ அல்லது யுனிகோடில் இருப்பதை
வேறு எழுத்துருவிற்கு மாற்றவோ இந்த செயலி மிகவும் உதவிகரமாக இருக்கிறது. இதுவும் New Horizon Mediaவிலிருந்து வெளிவருகிறது.

தட்டச்சிடும் முறை:

இப்போது இவற்றில் தட்டச்சிடும் முறை பற்றி சிறிது பார்க்கலாம். தமிழ் எடிட்டரிலும் மற்றும் கூகிள் ட்ரான்ஸ்லிட்டரேட்டரிலும் Phonetic முறையிலான தட்டச்சு முறைதான் சாத்தியம். உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது அம்மா என்று எழுதுவதற்கு ammaa அல்லது ammA என்று தட்டச்சிடவேண்டும். பெரும்பாலும் எல்லா வார்த்தைகளுக்கும் சற்று அதிகப்படியாக ஆங்கில எழுத்துக்களை தட்டச்சிட வேண்டியிருக்கும். இருந்தாலும், ஆரம்ப கால பயனர்களுக்கு இந்த முறையே உதவிகரமாக இருக்குமென்று நினைக்கிறேன். கொஞ்சம் பயிற்சி இருந்தால் விரைவாகவே எழுதலாம். பெரிய அளவிலும் கட்டுரைகள் எழுதலாம். நான் இந்த முறையையே பயன்படுத்துகிறேன்.

இது தவிர tamil99 என்ற வழியும் உண்டு. இது NHM Writer மற்றும் செல்லினம் ஆகிய இரண்டிலும் உண்டு. இவை நேரடியாக தமிழ் எழுத்துக்களையே கொண்டிருக்கின்றன. ஆகவே இதில் தட்டச்சிடுவது ஒப்பு நோக்க எளிதானது. ஆனால் நல்ல பயிற்சி வேண்டும். நீங்கள் Phonetic முறையில் ஏற்கனவே பழகிவிட்டீர்கள் என்றால் இதற்கு மாறுவது சற்று கடினம் என்று நினைக்கிறேன். என் அனுபவம் 🙂 ஆனால் செல்லினம் கைபேசியில் இயங்குவதால் இதில் tamil99ல் எழுதுவது சற்று எளிது. என் நண்பர் ஒருவர், tamil99 மிகவும் எளிமையாக இருப்பதாக சொன்னார். tamil99 முறை குறித்து இணையத்தில் ஒருவர் ஏறத்தாழ பின்வருமாறு எழுதியிருந்தார்.

”Phonetic முறையில் எழுதவது சரிதான். ஆனால் அது ஆங்கில எழுத்துக்களை முதன்மையாக கொண்டிருக்கிறது. ஆகவே நாம் அதை பயன்படுத்துவதென்பது நாம் இன்னமும் ஆங்கில மோகத்திலேயே, ஆங்கிலத்திற்கு அடிமையாகவே இருக்கிறோம் என்று அர்த்தமாகிறது. எனவே tamil99க்கு மாறுங்கள். அதுவே தமிழை உண்மையாக விரும்புபவர்கள் பயன்படுத்தவேண்டியது”

எப்படியெல்லாம் யோசிக்கிறார்கள்! ஆனால் இதில் சிறிது உண்மையும் உண்டு.  Phonetic முறையில் எழுத குறைந்த பட்ச ஆங்கில அறிவு தேவைப்படும். ஆனால் இப்போதுள்ள இளையவர்களும் நடுத்தர வயதினரும் பெரும்பாலும் ஆங்கில அறிமுகத்துடன்தான் இருக்கிறார்கள். ஆகவே Phonetic முறையில் எழுதுவது அவர்களுக்கு பெரிய தொந்தரவாக இருக்காது. ஆனால் ஆரம்பக் கல்வியை தமிழில் பயில்பவர்களுக்கு ஆங்கிலத்திற்கு முன்பாக தமிழ் அறிமுகமாகியிருக்கும். அவர்களுக்கு tamil99-ஏ சிறந்த முறை என்று எனக்கு தோன்றுகிறது. மேலும் தட்டச்சிடும் எழுத்துக்களின் எண்ணிக்கை Phoneticல் அதிகம் என்பதால் தொடர் உபயோகத்திற்கும், பெரிய அளவில் தமிழில் தட்டச்சிட நினைப்பவர்களுக்கும் tamil99 முறையே சிறந்தது என்பது என் எண்ணம். (நான் இப்போதைக்கு tamil99க்கு மாறுவதாக இல்லை!)

மேலும் ஒரு விஷயம். தமிழில் தட்டச்சிடும்போது முடிந்தவரை தமிழ் வார்த்தைகளையே பயன்படுத்துங்கள். ஆங்கில வார்த்தைகளைத்தான் உபயோகப்படுத்த வேண்டுமென்றால், நேரடியாக ஆங்கிலத்திலேயே எழுதிவிடுங்கள். சரியான தமிழ் வார்த்தைகள் கிடைக்கவில்லையென்றால் பின்வரும் எதாவது ஒரு வழியில் மொழிமாற்றம் செய்து எழுதுங்கள். ஆங்கில வார்த்தைகளை தமிழில் எழுத வேண்டாம்! உதாரணமாக Machine என்பதை தமிழில் இயந்திரம் என்று எழுதுவது நல்லது. இல்லையென்றால் machine என்றே எழுதிவிடுங்கள். மாறாக, மெஷின் என்று எழுத ஆரம்பித்தீர்களானால், பின்னர் ஆங்கிலத்தில் தட்டச்சிடும்போது meshin என்று எழுத முற்படுவீர்கள்! பெயர்களை எழுதும்போதும் இதே பிரச்சனை வரத்தான் செய்யும். அதை ஒன்றும் செய்வதற்கில்லை.

ஆங்கில வார்த்தைகளுக்கு ஏற்ற தமிழ் வார்த்தைகளை கண்டடைய நான் விக்‌ஷனரி (http://ta.wiktionary.org) இணையதளத்தையும் Google translate-யும் பயன்படுத்துகிறேன். விக்‌ஷனரியைத்தான் முதன்மையாக பயன்படுத்துகிறேன் என்றாலும் இரண்டுமே பல சமயங்களில் தேவைப்படுகிறது. எழுதியவற்றில் பிழைகளை திருத்த நாவியை (http://dev.neechalkaran.com/p/naavi.html) பயன்படுத்துகிறேன். இது எழுத்துப்பிழை, ஒற்றுப்பிழை, மரபுப்பிழை என பலவற்றை திருத்துகிறது. பெரும்பாலும் சரியாக செய்வதாக சொல்கிறார்கள். விக்‌ஷனரியும், நாவியும் எழுத்தாளர் ஜெயமோகனால் பரிந்துரைக்கப்பட்டவை!