கின்டில் மஹாத்மியம்

அமேசானின் கின்டில் பற்றி ஐந்து வருடங்களாகவே தெரியும் என்றாலும், வாங்குமளவுக்கு தைரியம் வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான். மற்ற பலரை ஒப்பிடும்போது நான் நிறையவே படிப்பவன் என்றாலும், ஆங்கில நூல்களை அவ்வளவு எளிதாகவோ, அடிக்கடியோ என்னால் இன்னமும் படித்துவிட முடிவதில்லை. கின்டிலில் அந்த நேரத்தில் ஆங்கில நூல்களே அதிகமும் கிடைத்துக்கொண்டிருந்தன. ஆகவே வாங்கிவிட்டு படிக்கமுடியாமல் போனால் என்ன செய்வது என்ற தயக்கத்தில் வாங்காமலே இருந்தேன்.

வெளிநாடுவாழ் நண்பர் ஒருவர் அப்போதெல்லாம் என்னை கின்டில் வாங்கச்சொல்லி சிலமுறை வற்புறுத்தினார். ஆனால் நானோ ஏதாவது சாக்குகள் சொல்லி தட்டிக்கழித்துக்கொண்டிருந்தேன். பின்னர் அவர் தனக்கு புதிய கின்டில் (பேப்பர் ஒயிட்) வாங்க இருந்ததால், தன்னுடைய பழைய கின்டிலை இரண்டாயிரம் ரூபாய்க்கு என்னிடம் விற்க முன்வந்தார். “அப்பாடா, சீப்பா முடிஞ்சுது” என்று நானும் வாங்கிவிட்டேன். அமேசானின் தளத்திலேயும், மற்ற சில இணையதளங்களிலும் நிறைய இலவச புத்தகங்கள் கிடைக்கும் என்பதால் எனது கின்டில் புத்தகங்களால் நிரம்பி வழிந்தது என்பதை சொல்லத்தேவையில்லை. ஆனால் படித்தது என்று கறாராக பார்த்தால் மூன்று அல்லது நான்கு புத்தகங்கள்தான்.

இந்நிலையில் வீடு மாறவேண்டி வந்தது. புது வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு பஸ்ஸில் போகவர இரண்டரை மணிநேரம் செலவிட வேண்டியிருந்தது. சரி இந்த நேரத்தில் கின்டில் பயன்படுமே என்று தேடினால் கின்டிலைக் காணோம்! எப்போது எங்கு தொலைந்தது என்று தெரியவில்லை. வீட்டையே கிட்டத்தட்ட மூன்று முறை அலசிவிட்டேன், கிடைக்கவில்லை. ஒருமுறை மின்னூட்டமிட்டால் வாரக்கணக்கில் தாங்கும் சக்தியுடைய மின்கலத்தை கொண்ட கின்டிலை, தானாகவே தன்னை அணைத்துக்கொள்ளுமளவிற்கு அதை பல நாட்கள் தொடாமலிருந்ததற்கு எனக்கு இந்த தண்டனை தேவைதான். சரி புதிதாக கின்டில் வாங்கலாம் என்று வீட்டில் நச்சரிக்க ஆரம்பித்தேன். பெற்றோரோ மனைவியோ கண்டுகொள்வதாக இல்லை.

சமீபத்தில் அமெரிக்காவில் வசிக்கும் என்னுடைய ஒரு நண்பன் இந்தியாவிற்கு வந்திருக்கிறான். வரும்முன்னார், “என்ன வாங்கிவரட்டும்?” என்று கேட்டுக்கொண்டேயிருந்தான். நானும் “கின்டில் வாங்கிவாடா” என்று சொன்னேன். அவன் அதற்கு “அவ்வளவு நேரமில்லைடா” என்று சொன்னதால் நானும் விட்டுவிட்டேன். இங்கு வந்து பார்த்து பேசிக்கொண்டிருந்தபோது, அவன் “கின்டில் எல்லாம் வேஸ்ட்டுடா. என்னோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேரு வாங்கிட்டு இப்போ என்ன பண்ணுறதுன்னு தெரியாம‌ சும்மா வச்சுருக்காங்க” என்றான். “அடப்பாவி அவங்ககிட்டேயிருந்து செகென்ஸ்லயாவது வாங்கிட்டு வந்திருக்கலாமே”ன்னு நொந்துகொண்டேன். கூட வேலைபார்க்கும் ஒருவர் “அது அப்படி ஒண்ணும் நல்லாயில்லை ஜி. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் அமேசான்ல வேலை பாக்குறான். டெஸ்ட்டிங்குக்காக ஆளுக்கு ஒரு கின்டில் கொடுத்தாங்க. அப்போ பாத்துருக்கேன். மொக்கையாத்தான் இருக்கும்” என்றார். ஆஹா இதற்காகவாவது அமேசானில் சேர்ந்துவிடலாம் போலிருக்கிறதே என்று நினைத்துக்கொண்டேன்.

பிறகு ஒருவழியா வீட்டில் கெஞ்சி கூத்தாடி (வெக்கத்த விட்டு கேக்குறேன். தயவு செஞ்சு வாங்கி கொடுத்திருங்க :)) கின்டிலை அமேசானின் இணையதளத்தில் ஆர்டர் செய்துவிட்டேன். அது கையில் வந்துசேர்வதற்கு நான்குநாட்கள் ஆயிற்று. அதுவரைக்கும் இருந்த அந்த உணர்வு மறக்கவே முடியாதது. அமேசானின் இணையதளத்தில் மணிக்கொருமுறை அது எந்த இடத்திற்கு வந்துகொண்டிருக்கிறது என்று பார்ப்பதும், கைபேசி அழைப்புகள் வரும்போது “அமேசானின் ஆட்கள்தான் கூப்பிடுகிறார்களோ” என்று பரவசம் அடைவதும், தினமும் “இன்னைக்கு கின்டில் வந்துடும், இனிமே நான் அறிவாளியாகுறத யாரும் தடுக்கமுடியாது” என்று வீட்டில் சலம்புவதும் என்று நேரம் நன்றாக போயிற்று. ஒருவழியாக பத்துநாட்கள் முன்பு கின்டில் வந்து சேர்ந்தது. ஆச்சரியப்படும் வகையில், அதுவரை இருந்த பரவசம், அதை கையில் வாங்கும்பொழுது நீங்கிவிட்டது. தேவையில்லாமல் செலவு செய்கிறோமோ என்று தோன்றியது. சரி வாங்கிவிட்டோம், இதையாவது ஒழுங்காக பயன்படுத்துவோம் என்று சமாதானம் செய்துகொண்டேன். பின்னர் அந்த பரவசம் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது.

இந்த பத்துநாட்களில் ஒரு புத்தகத்தை (In the wonderland of Numbers – Sakundala Devi) படித்துமுடித்திருக்கிறேன். பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோ பயணங்களில் படிப்பது மிகவும் சுகமாக இருக்கிறது. பொழுது போவதே தெரியவில்லை. உண்மையில் சொல்லப்போனால் கடந்த சில மாதங்களாக படிப்பதற்கு ஏற்றவாறு பிரயாணங்களை அமைத்துக்கொள்ள ஆரம்பித்திருக்கிறேன். வீட்டிலிருக்கும்போது தனிமை கிடைக்கும் நேரங்களைத் தவிர புத்தகங்களை தொடாமல் பார்த்துக்கொள்கிறேன். ஆகவே வீட்டிலுள்ளோரும் சலித்துக்கொள்வதில்லை. இந்த கின்டில் பேப்பர் ஒயிட்டில் காமிக்ஸ் மற்றும் ம‌ங்கா வகை புத்தகங்களை படிப்பது எளிதாக உள்ளது. ஆகவே சிறுவர்களுக்கும் இது பயனுள்ளதாக இருக்கும். எனது ஆறு வயது மகளுக்கும் இதில் படிப்பதில் சிறிதளவு ஆர்வம் வந்திருக்கிறது. மேலும் அமேசான் நிறுவனம் தமிழ் நூல்களை கின்டிலில் கொண்டுவருவது குறித்து தமிழக பதிப்பாளர்களிடம் பேசிக்கொண்டிருப்பதாக கேள்விப்பட்டேன். அது நிறைவேறும் பட்சத்தில், தமிழ் நூல்கள் குறைந்தவிலையில் கின்டிலில் கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த வருட இறுதியில் தெரியவரும். பார்க்கலாம்.

அமேசானின் கின்டில் ஸ்டோர் தவிர, கிரியேட்டிவ் காமன்ஸ் லைசென்ஸ் முறையில் freetamilebooks.com ல் நிறைய புத்தகங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ப்ராஜெக்ட் மதுரை இணையதளமும் பழைய நூல்களை கின்டிலுக்கு ஏற்றவகையில் இலவசமாகக் கொடுக்கிறது. ஏறத்தாழ காந்தியின் அனைத்து நூல்களையும் http://www.mkgandhi.org என்னும் இணையதளம் இலவசமாகக் கொடுக்கின்றது. மேலும் வலைப்பூக்களை எளிதாக படிக்கும் வசதியும் கின்டிலில் இருக்கிறது. வரும் காலத்திலும் நிறைய தமிழ் புத்தகங்கள் கின்டிலில் கிடைக்கும் என்பதால் கின்டில் வாங்குவது ஒரு நல்லமுடிவாகவே இருக்கும்.