சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்தல்

தனிப்பட்ட முறையில் நானும் ஃபேஸ்புக்கில் நெடுநாளாக நிறைய நேரத்தை செலவிட்டு வந்தவன். அதைக் குறைக்கவேண்டும் என்று நினைத்தாலும் முடிந்ததில்லை. இருமுறை எனது கணக்கை நானே சில நாட்களுக்கு முடக்கி வைத்திருந்துவிட்டு பின்னர் இயலாமல் மீண்டும் தொடங்கியிருக்கிறேன். எழுத்தாளர் ஜெயமோகனின் சில பதிவுகளைப் படித்துவிட்டு அவ்வப்போது கொள்ளும் உற்சாக மனநிலையில் “இனி ஃபேஸ்புக் பக்கம் வரக்கூடாது” என்று முடிவு செய்து, பின்னர் “அவ்வப்போது வரலாம், ஆனால் நிறைய நேரத்தை செலவழிக்க வேண்டாம்” என்ற முடிவுக்கு வந்து, மீண்டும் பழைய நிலைக்கே சென்றுவிட்டேன் என்பதையே சிறிது காலம் கழித்தே உணர்ந்து வந்தேன்.

இது ஒருபுறமிருக்க, எனது நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று நிறைய பேர் ஃபேஸ்புக்கிலிருந்து விலகியும் பின் சிலர் மீண்டும் சேர்ந்தும் இருக்கிறார்கள். 99 நாட்களில் ஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுகிறேன் என்ற அறிவிப்பையும் அவ்வப்போது சிலரிடமிருந்து பார்க்கிறேன். சமீபத்தில் கூட ஞாநி விலகிவிட்டு திரும்பவும் வந்திருக்கிறார். ஆக இது எனக்கு மட்டுமான பிரச்சனையில்லை, பிரபலமானவர்கள் முதற்கொண்டு என்னைவிட நேர மேலாண்மையில் சிறந்தவர்கள் என்று நான் நினைத்த பலருக்கும் இப்பிரச்சனை உள்ளது என்பதை அறிந்தேன்.

மேலும், கடந்த வருட இறுதியிலிருந்து ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள், ஜல்லிக்கட்டு ஆகியவை ஃபேஸ்புக் பக்கம் வருவதையே வெறுக்கவைத்தன. வதந்திகள், கற்பனைக் கதைகள், இந்திய எதிர்ப்பு பதிவுகள், தொட்டு ஷேர் செய்யும் கடவுளரின் படங்கள் என எரிச்சலூட்டும் ஒன்றாக எனது ஃபேஸ்புக் பக்கம் மாறிப்போனது.

இதனிடையே, ஃபேஸ்புக் ஸீரோ என்ற ஒரு பதிவை ஃபேஸ்புக்கிலேயே பார்த்தேன். யாரோ ஒருவர், “எல்லா நண்பர்களையும் பின் தொடர்வதிலிருந்து விலக்கிவிட்டால், உங்கள் நியூஸ்ஃபீட் எப்படியிருக்கும்” என்ற யோசனையை தெரிவித்திருந்தார். அதைப் பின்பற்றி, நான் பின் தொடரும், ஆனால் எனக்கு எரிச்சலூட்டும் பதிவுகளை இடும் நபர்கள் ஒவ்வொருவரையாக அப்பட்டியலிலிருந்து நீக்க ஆரம்பித்தேன். இது தற்போது நல்ல பலனை அளித்து வருகிறது. எனது நியூஸ்ஃபீட் பக்கமானது மிகவும் சுருங்கிவிட்டது. அறிவு சார்ந்த பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். அறிவுடையோரின் பதிவுகளை மட்டுமே பார்க்கிறேன். ஆகமொத்தம் மன அழுத்தமின்றி பொழுது நன்றாகப் போகிறது. என் நண்பர்கள் உட்பட நான் மதிக்கும் நிறைய பேரை இப்பட்டியலிலிருந்து விலக்க வேண்டியிருந்தது. அப்போதைக்கு அது சங்கடமளித்தாலும், எனது தனிப்பட்ட நேரம் அவர்களைவிட முக்கியமானது என்பதால் தயங்காமல் நீக்கிவிட்டேன். இப்போது அவர்கள் அனைவரும் என் நண்பர்களாகத் தொடர்கிறார்கள். ஆனால் அவர்கள் பகிரும் குப்பைகளை நான் பார்க்கவேண்டும் என்ற அவசியமுமில்லை. நானும் எந்தக் குப்பைகளையும் இப்போதெல்லாம் பகிர்வதில்லை என்பதால் “அவர்களின் நேரத்தைக் கெடுக்கிறோம்” என்ற சங்கடமும் எனக்கில்லை. நீங்களும் இதை முயன்று பாருங்கள்.