வாட்ஸாப்பிலிருந்து ஃபேஸ்புக்கிற்கு…

இரண்டு மாதங்களுக்கு முன்பு ஃபேஸ்புக்கிலிருந்து விலகுவதாக முடிவு செய்தேன். எனது நேரத்தை அது மிகவும் கொல்வதாக எண்ணியதால் அந்த முடிவு. மேலும் ஃபேஸ்புக்கிற்கென எழுத ஆரம்பித்து ஒற்றைவரிகளாக சிந்திப்பதற்கு மட்டுமே மனம் பழகிவிட்டதாக ஓர் எண்ணம். நாம் சிந்திப்பவற்றைத் தொகுத்து கட்டுரைகளாக எழுத முடிந்தால் சரி, இல்லையென்றால் அவையெல்லாம் அப்படியே அவையெல்லாம் போய்த் தொலையட்டும் என்று முடிவு செய்தேன். ஏற்கனவே ஃபேஸ்புக்கை விட்டு பலமுறை விலகிச் செல்ல முயன்று தோற்றிருந்ததனால் இம்முறை சிறியதாக ஒரு குறிப்பை மட்டும் ஃபேஸ்புக்கில் நிலைத் தகவலாக இட்டுவிட்டு அமைதியாக வெளியேறினேன். சிலகாலம் எவரிடமும் எதுவும் சொல்லிக்கொள்ளவில்லை. மனம் அடிக்கடி ஃபேஸ்புக்கைப் பார்க்க ஆசைப்பட்டாலும் இம்முறை முழுமனதுடன் அடக்கி வைக்கமுடிந்தது. அதன்பிறகு சில ஆக்கப்பூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு சிறிய அளவு வெற்றியும் ஈட்டினேன். எனினும் எனது ஓய்வு நேரத்தை முழுவதும் பயன்படுத்தினேனா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். இதற்கிடையில் மெதுவாக வாட்ஸாப் பக்கம் என் கவனம் திரும்பியது. என் உறவினர் குழு ஒன்றிலும், நண்பர்கள் குழு ஒன்றிலுமாக ஏற்கனவே இருந்தாலும் அவற்றில் வரும் செய்திகளை அவ்வளவாக பார்ப்பதில்லை. ஏதாவது அரட்டை அடிக்க மட்டும் அவ்வப்போது செல்வதுண்டு.

ஆனால் இம்முறை ஃபேஸ்புக்கை விட்டதனால் கிடைத்த நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாக வாட்ஸாப்பில் செலவிட ஆரம்பித்தேன். நான் ஆரம்பித்த ஆக்கப்பூர்வமான முயற்சிகள் சிறிது சிறிதாக நின்றுவிட்டன. இப்போது எதையுமே செய்வதில்லை. புதிய செய்திகள் வந்துள்ளன என்று வாட்ஸாப் அறிவிக்கும்போதெல்லாம் கை தானாக சென்று அதை எடுத்துப் பார்க்கிறது. இதன் நடுவில் என் தலைமுறை உறவினர்களெல்லாம் சேர்ந்து ஒரு குழு ஆரம்பித்தோம். அவர்களில் பலருடனும் என்னால் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஆனால் அதிலும் குப்பைகளாக செய்திகள் வர ஆரம்பித்தன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தடுக்க முயற்சி செய்தோம். ஆனால் “எந்த செய்தியுமே யாரும் அனுப்ப மாட்டேன் என்கிறார்கள். அதற்கு இம்மாதிரி ஏதேனும் செய்திகள் வருவது நல்லதுதான் இல்லையா?” என்று மற்றவர்களால் பதிலளிக்கப்பட்டது. சரி நாமும் ஒரேயடியாக தீவிர முகத்தோடு இருக்கவேண்டாம் என்று அதை அப்படியே விட்டுவிட்டேன்.

சிறிது காலத்திலேயே என்னால் தாங்கமுடியாத அளவுக்கு மொக்கை செய்திகள் அந்தக் குழுவில் வர ஆரம்பித்தன. வரும் எந்த செய்தியையுமே “என்று சொல்லி சிரித்தார் மஹா பெரியவர் (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரர்)” என்று முடிப்பார்களோ என்ற பீதியுடனேயே படிக்க வேண்டியிருந்தது. அதில் வரும் ஒரு பத்து செய்திகளைப் படித்தாலே பின்வரும் முடிவுகளுக்குத்தான் வரவேண்டியிருக்கும்.

1. ஹிந்துக்கள் ரொம்ப சாது. மற்ற மதத்தினர் அவர்களை அழிப்பதற்காகவே திரிகிறார்கள்.
2. ஹிந்துக்கள் கலவரம் செய்தால்கூட அவை எல்லாம் சரிதான்.
3. ஹிந்துக்களில் பல முனிவர்கள் இன்னமும் உண்டு. அவர்கள் சபித்தால் கட்டாயம் பலிக்கும்.
4. மஹா பெரியவரால் முடியாததில்லை. ஒருவருக்கு ஏன் தலை அரிக்கிறது என்பதைக்கூட சொல்லத் தெரிந்தவர். இதை இப்போது எழுதும்போது எனக்கு தலை அரிக்கிறது. “பார் பெரியவரின் அதிசயத்தை” என்று இதை ஸ்க்ரீன்ஷாட் எடுத்தே உங்களுக்கு வாட்ஸாப்பில் வரும் பாருங்களேன்!

இப்படியாக, கடும் மனச்சோர்வுக்கு உள்ளாக்கும் பதிவுகளாகப் படித்து படித்து சலித்துவிட்டேன். முழுக்க படிப்பதுகூட இல்லை. பார்த்துவிட்டு தாண்டிச் செல்வதே இவ்வளவு சோர்வளிக்கிறது. மேலும் ஒரே செய்தி பல குழுக்களில் வருவதும் கொடுமை. சரி இவர்கள் நம் உறவினர்கள்தானே, இவையெல்லாம் கட்டுக்கதைகள்தான் என்று குறைந்த பட்ச அளவில் நிருபித்தாலே ஏற்றுக்கொள்வார்களே என்று குறைத்து மதிப்பிட்டு அவ்வாறான இருபதிவுகளை எடுத்து அவை குறித்த என் கருத்துக்களை எழுதினேன். விவாதம் விதண்டாவாதமாகி குதர்க்கவாதமாகி நின்றதுதான் மிச்சம். என்னுடையது உட்பட மனித மனதிற்குள் இருக்கும் அழுக்கு அளவின் பிரம்மாண்டம் என்னை அச்சுறுத்தியது! எவ்வளவு கீழ்த்தரமான வசைகள்! வம்புப் பேச்சுக்கள்! விவாதம் ஆரம்பித்த சிறிது நேரத்திற்குள்ளேயே என் தரமும் கீழறங்கிச் சென்றது. எனக்கு எதிர்த் தரப்பில் இருந்தவர்களின் தரம் அதைவிட பலமடங்கு கீழிறங்கிச் சென்றதை நினைத்து சமாதானப்படுத்திக் கொண்டாலும், நான் ஏன் அவ்வளவு தரம் தாழ்ந்து சென்றேன் என்று இன்னமும் ஆச்சரியப்படுகிறேன்.

ஒருவழியாக வேறு சில உறவினர்கள் தனி உரையாடலிலும் குழுவிலும் இந்த அபத்தத்தைச் சுட்டிக் காட்டிய பின்னர் நான் பேசுவதை நிறுத்திக் கொண்டேன். ஆனாலும் “அதற்கு இப்படி பதிலளித்திருக்கவேண்டும். இப்படி சொன்னபோது அதை இப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்” என்றெல்லாம் தோன்றிக்கொண்டே இருந்தது. அதிலிருந்து வெளிவர சில முழு நாட்கள் தேவைப்பட்டன! இதில் செலவான நேரத்தில் நான் ஈடுபட்டிருந்த ஆக்கப்பூர்வமான முயற்சிகளைத் தொடர்ந்திருந்திருக்கலாம். என் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டிருக்கலாம். அல்லது வேலை தொடர்பான் விஷயங்களில் என் கவனத்தை செலுத்தியிருக்கலாம். எதையும் நான் செய்யவில்லை. ஏதோ இந்த மட்டுக்கு இதோடு நிறுத்திக் கொண்டோமே என்று திருப்தி படுத்திக் கொள்ளத்தான் முடிந்தது.

மேலும் ஒன்றை கவனித்தேன். ஜெயமோகனின் எழுத்துக்களில் படித்தவைதான் என்றாலும் நேரடியாக அவற்றை அனுபவிப்பதற்கு இப்போதுதான் முடிந்தது. ஒருவருக்கு புரியாதாகவோ பிடிக்காததாகவோ உள்ள விஷயங்களை எவரும் கவனித்துப் படிக்கவேயில்லை. என்னதான் விளக்கங்கள் எழுதினாலும் அதிலுள்ள ஒற்றை வரியையோ வார்த்தையையோ மட்டும் பிடித்துக்கொண்டு கலாய்ப்பாகவோ வசையாகவோ மட்டும் பதிலளித்துக் கொண்டிருந்தார்கள். ஒருமுறை வேறொரு குழுவில் ஜெயமோகன் அவர்களின் எழுத்துப் பாணியைப் பின்பற்றி ஒரு நீண்ட பதிவை இட்டேன். இத்தனைக்கும் அது பொதுவான பதிவுகூட இல்லை. சில நண்பர்களை அவர்கள் எழுதும் முறைகளைக் கிண்டலடித்து அவர்களின் பெயெரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டது. “என்ன சொல்ல வர்றே? ரெண்டு வரில சொல்லு” அல்லது “இதைத்தானே சொல்லவர்றே” என்று இருவரி பதில்தான் வந்தது. இத்தனைக்கும் தமிழில்தான் அதை எழுதியிருந்தேன். அங்குள்ள அனைவருமே தமிழ் வழி படித்தவர்கள்தான். “இது எப்படியிருக்குன்னா, வால்மிகிகிட்டையோ கம்பர் கிட்டயோ போயி, அடுத்தவன் மனைவி மேல ஆசைப்படக்கூடாதுன்னுதானே சொல்லவர்றீங்கன்னு சொல்ற மாதிரி இருக்கு” என்று மட்டும் பதிலளித்துவிட்டு நிறுத்திக் கொண்டேன்.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முகநூலை ஒரு கலங்கிய ஏரி என்று கொண்டால் வாட்ஸாப்பை கலங்கிய குட்டை என்றே கொள்ளவேண்டும். ஏரியிலாவது தெளிந்த நீர் எங்காவது இருக்க வாய்ப்புண்டு, ஆனால் குட்டையில் என்று சகதியே மிஞ்சும் என்று தோன்றுகிறது. முகநூலை கைவிட்ட வகையில் நான் மதிக்கும் நிறைய மனிதர்களின் செய்திகளைத் தவற விட்டதுதான் மிச்சம்.

முக்கியமானதாக நான் கருதும் ஒன்று. பொதுவாக தமிழில் எழுதும்போது ஜெயமோகன் அவர்களிடம் கடன்வாங்கியோ அல்லது நானே யோசித்தோ, தமிழ் வார்த்தைகளை மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தி எழுதும் முறையை சிரமப்பட்டு கற்றிருந்தேன். இம்மாதிரி வாட்ஸாப்பில் எழுதுவதற்காக, ஆங்கிலம் கலந்தும் தமிழை பேச்சுவழக்கிலும் எழுதப்போய் அந்த எழுத்து நடையை சற்று இழக்க நேரிட்டது. இது எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் இழப்பாகப் பட்டது. கடந்த 7 வருடங்களாக சிரமப்பட்டு அடைந்ததை இவ்வளவு எளிதாகத் தவறவிடுகிறோமே என்ற குன்றிப்போனேன்.

சமீபத்தில் உறவினர் ஒருவரின் திருமணத்தில் “ஏன் ஃபேஸ்புக் பக்கம் இப்போது வருவதேயில்லை?” என்று என்னுடைய ஃபேஸ்புக் விசிறிகள் (!?) மூன்று நான்கு பேர் கேட்டார்கள். எனக்கே ஆச்சரியமாக இருந்தது. இவர்கள் இரண்டு மாதம் கழித்தும் இவ்வளவு ஞாபகம் வைத்துக் கேட்கிறார்கள் என்றால் நான் ஏன் ஃபேஸ்புக்கிற்கே திரும்பக் கூடாது என்று எண்ண ஆரம்பித்தேன். ஆகவே, இதற்கு மேலும் இம்மாதிரி குழுக்களில் அசட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருப்பதற்குப் பதில் கீழ்க்கண்டவாறு செய்யலாம் என்றிருக்கிறேன்.

1. முடிந்தவரை கட்டுரைகளாக என்னுடைய இணையதளத்திலேயே எழுதுவது. அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்வது.
2. கட்டுரைகளளவிற்கு வளராதவற்றை ஃபேஸ்புக்கில் எழுதுவது. சில சமயம் சில சிந்தனைத் தெறிப்புகள் தோன்றும். அவை உடனடியாக கட்டுரை அளவிற்கு வளராது என்பதால் அவற்றை ஃபேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளலாம்.
3. மேலும் விசித்திரமானவற்றைப் பார்க்கும்போது அவற்றைப் பகிர்ந்து கொள்ளவும் முகநூலைப் பயன்படுத்திக் கொள்வது.
4. இவை தவிர, முகநூலில் நான் நேசிக்கும், மதிக்கும் மனிதர்களின் இடுகைகளை மட்டும் வாசிப்பது
5. ஆனால் எங்குமே ஒரு வரிக்கு மேல் எழுதும்போது தூய தமிழிலோ அல்லது தூய ஆங்கிலத்திலோ மட்டுமே எழுதுவது.
6. உருப்படியான விவாதங்களன்றி வேறு எதிலும் பங்கேற்கக்கூடாது.
7. வாட்ஸாப்பில் இப்போது இருக்கும் குழுக்களில் தொடரலாம். ஆனால் எதுவானாலும் விதி 5ன் படி மட்டுமே மறுமொழிகள் இருக்கவேண்டும்.
8. நானும் எனது இரு முக்கிய நண்பர்களுமாக சேர்ந்து ஒரு கூகிள் சாட் குழுவை சிலகாலமாக வைத்திருக்கிறோம். அரட்டைகள் என்றால் இனிமேல் அதில் மட்டுமே!

ஆக, முகநூலே!! இதோ மீண்டும் வருகிறேன்!!!