சில மாற்றங்களுடன் மீண்டும்…

கடந்த சில மாதங்களாகவே இந்தத் தளத்தில் பல பிரச்சனைகள். நடுவில் கொஞ்சம் பொருளாதார நெருக்கடி காரணமாக, வேறொரு முறையில் இத்தளத்தை நிறுவி இதன் பதிவுகளை இணையத்தில் வைத்திருந்தேன். ஆனால் அதிலும் ஒரு பிரச்சனை தோன்றவே, மீண்டும் பழைய முறைப்படி மாற்றியுள்ளேன். இப்பதிவுகள் narayani.nallenthal.in என்னும் தளத்தில் முன்னர் இருந்தன. வலையுலகத்தில் புனைப்பெயரிலேயே இயங்குவோம் என எப்போதோ எடுத்த முடிவின்படி, என் முதல் மகளின் பெயரான ஹரிணியைக் குறிக்கும் வகையில் நாராயணி என இத்தளத்திற்கு பெயரிட்டிருந்தேன். பின்னர் என் பெயருடனேயே பதிவுகளை வெளியிட ஆரம்பித்ததும் அப்பெயருக்கு தகுந்த காரணம் என்று இல்லாமல் போய்விட்டது. ஆகவே இப்போது “தைரியமாக” என் பெயருடனேயே இத்தளம் வருகிறது. இன்னமும் மூன்று வருடங்களுக்கு சேர்த்து பணம் கட்டியுள்ளதால், புது பதிவுகள் வருகிறதோ இல்லையோ, இருக்கும் பதிவுகள் 2021 வரை இதிலேயே இருக்கும்.

பதிவுகளை முந்தைய தளத்திலிருந்து மீட்டு, இதில் சேர்த்து, லிங்க்குகளை புதுப்பித்து என இதற்கே ஒரு குறிப்பிட்ட அளவு நேரத்தை ஒதுக்க வேண்டியதாயிற்று. இனிமேல்தான் புதுப்பதிவுகளை எழுதவேண்டும். கடந்த வருடங்களில் என் ஆர்வம் பின்வரும் துறைகளில் தொடர்ந்து இருந்து வருவதைக் காண்கிறேன். ஆகவே அவை குறித்த பதிவுகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கலாம்.

  1. குழந்தை வளர்ப்பு
  2. புகைப்படங்கள் எடுத்தல்
  3. நூல்வாசிப்பு
  4. மென்பொருள் துறை
  5. உடல்நலம்

சில வேடிக்கை பதிவுகளை முன்பெல்லாம் எழுதி வருவேன். அவற்றை இனிமேல் தவிர்த்துவிடலாம் என எண்ணுகிறேன். ஏதேனும் ஒன்றை எழுத விரும்பினால் அதை ஆழமாக எழுதமுடியும் என்றால் மட்டுமே எழுதவேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.