ஹரிணியின் Pattern photography

வீட்டிலிருந்து கல்வி என ஆரம்பித்த பிறகு ஹரிணி (எங்கள் 9 வயது மகள்) தானாக எதையாவது எடுத்து செய்வது ஒரு வழக்கமாகிற்று. இது எவ்வாறு நடைமுறைக்கு வந்தது என்பதை தனியாக எழுதுகிறேன். ஆனால் இதன் பயனாக பல்வேறு புதிய, நாங்களுமே எதிர்பார்க்காத விஷயங்களை அவள் செய்ய ஆரம்பித்தாள். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் அவளது உபயோகத்துக்கு(!?) என இருக்கும் கைபேசியைக் கொண்டு வீட்டிற்குள்ளேயே படங்களாக எடுத்துக் கொண்டிருந்தாள். முன்னரும் இம்மாதிரி அவள் படங்களை எடுத்திருப்பதை பார்த்ததினால் முதலில் எதுவும் வித்தியாசமாகத் தோன்றவில்லை. ஆனால் அவள் பின்னர் அப்படங்களை காட்டியபோதுதான் அவற்றில் இருந்த ஒற்றுமையை கவனித்தேன். குறிப்பிட்ட பொருட்களை மிக அருகில் நெருங்கி சென்று படமாக எடுத்திருந்தாள். பொருட்களை அவற்றில் திரும்ப திரும்ப வரும் Patternகளை மட்டும் ஃபோகஸ் செய்து எடுப்பது Pattern photography என்ற பெயரில் புகைப்படத்துறையில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக கால்மிதியில் உள்ள கட்டங்களை மட்டும் நெருங்கிச் சென்று எடுப்பது. மரச்சட்டங்களில் உள்ள வரிகளை, சுவர்களில் உள்ள சிறிய மேடுபள்ளங்களை என இந்த மாதிரி. ஆனால் அவளிடம் அந்த ஒற்றுமையை சுட்டிக்காட்டியபோது, அவள் அந்த Patternகளை நினைத்து அப்படங்களை எடுக்கவில்லை என சொன்னாள். அவற்றை எங்களிடம் காட்டி அவை என்ன பொருட்கள் என எங்களல் கண்டுபிடிக்க முடிகிறதா என்ற விளையாட்டுக்காக அவற்றை எடுத்திருந்தாள். சிலவற்றை கணிக்க முடிந்தாலும், எங்களால் கண்டுபிடிக்க முடியாதவையும் இருந்தன. அவள் அந்த பொருட்களை எடுத்த கோணமும் அழகாக இருந்தது.

அவளிடம் இந்த pattern photography என்ற பெயரை மட்டும் சொன்னேன். அதைப் பற்றி ரொம்ப விளக்கவில்லை. அதிலுள்ள விளையாட்டுத் தன்மை போய்விடும் என்ற எண்ணம். முன்னர் சிலமுறை எனது (பழைய) டி.எஸ்.எல்.ஆர் கேமராவில் சிலமுறை அவளை படங்களை எடுக்க அனுமதித்திருக்கிறேன். ஆனால் உண்மையில் கேமராவை அவள் கையில் கொடுக்க நான் கொஞ்சம் பயப்படுவேன். அதை வாங்கி ஏழு வருடம் ஆகியிருந்தாலும் அது உடைந்தால் இன்னொரு கேமராவை வாங்கும் மனநிலையில் நான் இல்லை. ஆகவே அவளின் முழுப் பொறுப்பில் இதுவரை கேமராவை விட்டதில்லை. இந்த சந்தர்ப்பத்தை முன்னிட்டு அவளை அந்த கேமராவில் படங்களை எடுக்க ஊக்குவிக்கலாமே என நினைத்து பொதுவாக பேச்சுக் கொடுத்தேன். “படங்கள் நன்றாக வந்திருக்கின்றன. கைபேசியில் எடுத்ததால் அவற்றின் தரம் சுமாராகத்தான் இருக்கிறது இல்லயா?” என்றேன். அவளும் ஆமோதித்தாள். “கேமராவில் எடுத்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்” என்றேன். அவள் உற்சாகமாகி “கேமராவில் எடுக்கட்டுமா?” என்றாள். “சரி. ஆனால் இப்போது வேண்டாம். ஒரு விடுமுறை நாளில் காலையிலிருந்து மாலை வரை இம்மாதிரி படங்களை கேமராவில் எடு. அந்த நாளுக்கு ‘ஃபோட்டோகிராஃபி டே’ என பெயர் வைக்கலாம்” என்றேன். வெகு உற்சாகமடைந்தாள். அதாவது, காலையில் எழுந்து காலைக் கடன்களை முடித்துவிட்டு படம் எடுக்கத் தொடங்கினால் உணவு இடைவேளைகள் மட்டும்தான். மீதி நேரம் முழுக்க படமெடுப்பதில் அவள் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது என் திட்டம். அந்த நாளும் வந்தது. காலையில் அவளை எழுப்பும்போதே அதை நினைவூட்டி எழுப்பினேன். உடனடியாக எழுந்து தயாரானாள். கேமரவை கொடுப்பது பற்றி அன்றும் கொஞ்சம் தயங்கினாலும், சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மட்டும் தீவிரமான குரலில் அழுந்த சொல்லிவிட்டு கொடுத்தேன்.

  1. கேமராவை எப்போதும் கழுத்தில் மாட்டியிருக்க வேண்டும். இல்லாதபோது எடுத்து அதன் பையில் வைத்துவிடவேண்டும்.
  2. அதை தொங்கவிட்டுக் கொண்டு சுற்றக்கூடாது. கழுத்தில் மாட்டியிருந்தாலும் படமெடுக்காத வேளைகளைல் அதை ஒரு கையால் அதை தாங்கி பிடித்திருக்க வேண்டும்.
  3. சூரியனையோ மற்ற ஒளிமூலங்களையோ நோக்கி படமெடுக்கக்கூடாது.

இவை போன்ற அறிவுறுத்தல்களையும் மேலும் கேமராவை படமெடுக்கும்போதும், எடுக்காதபோதும் பிடித்திருக்க வேண்டிய விதம் ஆகியவை பற்றிய அறிவுரைகளையும் கண்டிப்பான குரலில் சொல்லிவிட்டு, அவற்றை அவள் மனதில் ஏற்றிக்கொண்டாளா என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டு கேமராவை அவள் கையில் கொடுத்தேன். பின்னர் வேண்டுமென்றே அவள் படமெடுக்காத பகுதியாக பார்த்து உட்கார்ந்து கொண்டு மற்ற வேலைகளில் ஈடுபட்டேன். அதாவது, அவள் படமெடுப்பதை பார்த்தால் ஏதாவது அறிவுரைகளை வாரி வழங்குவேன் என்பதனால் அதை முடிந்தவரை தவிர்த்துவிடவேண்டும் என எண்ணினேன். திட்டம் நன்றாகவே நிறைவேறியது. ஒரேயொரு முறை லென்ஸை மாற்றவேண்டி என்னிடம் வந்தாள். மற்றபடி என்னிடம் எந்த பேச்சும் இல்லை. வீட்டிற்குள்ளேயே சுற்றி சுற்றி படங்களை எடுத்திருந்தாள். ஜன்னலுக்கு வெளியேயும் சிலவற்றை. ஆனால் ஒட்டுமொத்தமாக பார்த்தால் முப்பதிலிருந்து நாற்பத்தைந்து நிமிடங்கள் எடுத்திருப்பாளாக இருக்கும். “எல்லாம் எடுத்து முடிச்சிட்டேன்” என கொண்டுவந்து கொடுத்துவிட்டாள். “என்னடி அவ்வளோதானா” என்றால், “ஆமா வீட்டுக்குள்ள இன்னும் எவ்வளோ எடுக்கிறது” என்றாள். “வீட்டுக்குள்ளே மட்டுமே படங்கள் எடுப்பதற்கு ஒருநாள் பொழுதெல்லாம் கொஞ்சம் அதிகம்தான்” என நானும் நினைத்துக் கொண்டு கேமராவை வாங்கி வைத்துவிட்டேன். பின்னர் பார்த்தபோது 90க்கும் அதிகமான படங்களை எடுத்திருந்தாள்! முன்னர் கைபேசியில் எடுத்தவற்றையே பெரும்பாலும் எடுத்திருந்தாள் என்றாலும் அவற்றை நன்றாக எடுத்திருந்தாள். இம்மாதிரி ஒருநாள் வெளியே கூட்டிச் சென்று இவ்வகைப் படங்களை எடுக்கச் சொல்லவேண்டும் என நினைத்துக் கொண்டேன். படங்கள் நன்றாக வந்ததிலும், அவளுக்கும் உற்சாகமாக பொழுது போனதிலும், கேமராவுக்கும் எதுவும் சேதமாகாததிலும் எனக்கு நிம்மதி.

அவள் எடுத்தவற்றில் குறிப்பிடத்தக்க படங்கள் உங்கள் பார்வைக்கு பின்வரும் இணைப்பில்.

https://photos.app.goo.gl/LYScATk5rJAQscsaA

எதற்கும் இருக்கட்டும் என அப்பொருட்களின் பெயர்களையும் கொடுத்துள்ளேன். படங்களைவிட அவற்றுக்கு நான் இட்டிருக்கும் தமிழ்ப் பெயர்கள் உங்களுக்கு கூடுதல் சிரமத்தைக் கொடுக்கலாம்.