குழந்தைகளுடன் சீட்டு விளையாடுதல்

எங்கள் மகள் ஹரிணிக்கு (3.5 வயது) ஆண்டு விடுமுறை தொடங்கிய சமயத்தில் அவளுக்கு பொழுதுபோவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்து சீட்டுக்கட்டு வாங்கலாம் என்று முடிவெடுத்தேன். என் அம்மாவைத் தவிர யாரும் ஆட்சேபிக்கவில்லை. ஒரு கட்டு மாத்திரம் வாங்கி ஹரிணியுடன் விளையாண்டேன் (விளையாண்டு வருகிறேன்). பின்வரும் விளையாட்டுக்களை அவள் மிகவும் ஆர்வமுடன் விளையாடுகிறாள்.

#1 Pairs

நமக்கு மிகவும் அறிமுகமான விளையாட்டுதான். சீட்டுக்களை கவிழ்த்து வைத்துவிட்டு, இரண்டிரண்டாக எடுக்கவேண்டும். இரண்டும் ஒரே எண்ணாக இருந்தால் அதை எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் திரும்ப கீழேயே வைத்துவிடவேண்டும். அவளது வசதிக்காக இவ்விளையாட்டை எளிமையாக ஆரம்பித்து படிப்படியாக விதிகளை சேர்த்து வந்தேன்.

இப்போதைக்கு A, J, Q, K மற்றும் Joker ஆகியவற்றை மட்டும் (எளிமைக்காக) பயன்படுத்தியுள்ளேன். முதல் நிலையில், இந்த எழுத்துக்களை மட்டும் கண்டுபிடித்தால் போதும், நிறமோ அல்லது பூவோ (Spade, Club முதலியவை) பிரச்சனையில்லை என்ற விதிமட்டும். கொஞ்சம் சிரமத்திற்கு பிறகு நன்றாகவே விளையாட ஆரம்பித்தாள்.

இரண்டாம் நிலையில், நிறங்களையும் சேர்த்து கண்டுபிடிக்கவேண்டும் என்ற விதியை சேர்த்தேன். அதாவது (K Spade & K Club சரியான ஜோடி. ஏனென்றால் இரண்டும் K மேலும் இரண்டும் கறுப்பு நிறம்). கொஞ்சம் தடுமாறினாள். நான் அவளை ஏமாற்றுகிறேனோ என்று ஒரு சந்தேகத்துடனேயே விளையாண்டுவந்தாள்.அப்புறம் பழகிவிட்டாள்.

அடுத்ததாக, ஒரே எண் மற்றும் ஒரே பூ இருந்தால் மட்டுமே சரியான ஜோடி என்று கருதப்படும் என்ற விதியை கொண்டுவரலாம் என்று இருக்கிறேன். இன்னமும் இதை செயல்படுத்தவில்லை. இரண்டு சீட்டுக்கட்டுகள் தேவைப்படும். அதனால் நிறுத்தி வைத்திருக்கிறேன். இவற்றை அவள் நன்கு விளையாடும் பட்சத்தில், எண்களையும் சேர்த்து பெரிய அளவில் விளையாடலாமென்றிருக்கிறேன்.

பிறகு யோசித்தபொழுது, இதை levelகளை தலைகீழாக பயன்படுத்தியிருக்க வேண்டுமோ என்று ஒரு சந்தேகம் வந்தது. உதாரணமாக ஒரே பூ, ஒரே எண் கொண்ட இரு சீட்டுக்களைத்தானே எளிதாக ஆரம்ப நிலையில் கண்டுபிடித்திருக்க முடியும்? ஆகவே இந்த லெவல்களை தலைகீழாக பயன்படுத்தினாலும் பயன் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

#2 மங்காத்தா

பதறவேண்டாம். இந்த விளையாட்டை எங்களூர் பக்கம் மங்காத்தா என்று சொல்வோம். சென்னையில் இதற்கு வேறு பெயர் இருக்கிறது என்று நினைக்கிறேன். அதாவது,

  1. இருக்கும் சீட்டுக்களை சரிசமமாக இருவரும் பிரித்துக் கொள்ளவேண்டும்.
  2. இருவரும் சீட்டுக்களை கவிழ்த்த நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது அடுத்து வரும் சீட்டு என்ன என்பது இருவருக்குமே தெரியக்கூடாது.
  3. இருவரும் ஆளுக்கொரு சீட்டை கீழே போடவேண்டும்.
  4. ஒரே எண்ணை இருவரும் போடும்வரை ஆட்டம் தொடரும்.
  5. இரண்டாவதாக ஒரே எண்ணை கீழே போடுபவருக்கு கீழே விழுந்திருக்கும் அனைத்து சீட்டுக்களும் சொந்தம்.
  6. உதாரணமாக, நானும் 4 போட்டு, அவளும் உடனடியாக அடுத்து 4 போட்டால், அதுவரை இருவரும் கீழே போட்ட அனைத்து சீட்டுக்களும் அவளுக்கே சொந்தம்.
  7. இவ்வாறு தொடரும் ஆட்டத்தில், அனைத்து சீட்டையும் முதலில் இழப்பவர், தோல்வியுறுவார்.

இதையும் ஹரிணி ரசித்து விளையாடினாள். நம்பமாட்டீர்கள், ஒரேமுறை மட்டுமே நான் ஜெயித்திருக்கிறேன். மற்ற அனைத்திலும் அவளே ஜெயித்துவிடுகிறாள். ஆரம்பத்திலாவது, அவள் ஜெயிக்கும் பொருட்டு, ஜோக்கரை அவள் சீட்டுக்கட்டுக்குள் நுழைத்துவிட்டு, அவள் அதைப் போட்டால், உடனே கீழே கிடக்கும் அனைத்து சீட்டுக்களையும் அவளுக்கே கொடுத்துக் கொண்டிருந்தேன். ஆனால் போகப்போக ஜோக்கர் இல்லாமலேயே அவள் ஜெயிக்க ஆரம்பித்துவிட்டாள்! இதையும் முயன்று பாருங்கள்.

இதில் இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம், இம்மாதிரி விளையாட்டுக்கள் மட்டுமின்றி, இது தொடர்பான செயல்களிலும் அவளுக்கு ஆர்வம் இயல்பாக பிறக்கிறது. உதாரணமாக, இருவருக்கும் சீட்டு போடுதல், சீட்டுக்களை கலக்குதல்.

அவளால் அனைத்து சீட்டுக்களையும் தன் கையில் வைத்துக்கொள்ள முடியவில்லை. எனவே, கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து, கவிழ்ந்த நிலையில் விரித்து வைத்து கொடுத்தால், அதை எடுத்து சரிசமமாக போடுகிறாள். ஒரு சீட்டையும் தவற விடுவதில்லை. இவை போன்ற செயல்கள் அவளுக்கு மற்ற பொருட்களை எளிதாக கையாள்வதில் மிகவுமே உதவியாய் இருக்கின்றன என்று நினைக்கிறேன்.

இதுகுறித்து எனக்கு ஒரு கேள்வி வந்தது. நிகழ்தகவு (probability) அடிப்படையிலான இந்த மாதிரி விளையாட்டுக்கள் எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கு உதவியாய் இருக்கும்?

இதுகுறித்து மாண்டிஸோரி கல்விமுறை குறித்து கற்ற ஒரு தோழியின் பதில்கள் (தமிழ்ப்”படுத்த”ப்பட்டது)

நீ செய்வது சரிதான், தொடர்ந்து இதுபோல் விளையாடு. இம்மாதிரி விளையாட்டுக்கள் (குறிப்பாக pairs) அவளுக்கு பொருட்களின் இயல்புகளையும், அவற்றின் வேறுபாடுகளையும் தெரிந்துகொள்ள உதவும். இந்த வயதில் வெற்றி தோல்விகளைப் பற்றிய எண்ணங்கள் அவளுக்கு இருக்காது ஆகவே அதை ரொம்பவும் பெரிதுபடுத்தாத வண்ணம் பார்த்துக்கொள். அவள் தோல்வியால் துன்புறுவதாக எண்ணினால் அவளுக்கு மறைமுகமாக உதவுவதும் ஆரம்ப நிலையில் சரிதான்.

சீட்டுக்களை வரிசைப்படி அடுக்கி விளையாடுவதும் (இதை ஹரிணி இப்போது விளையாடுகிறாள்), சீட்டுக்கட்டு மாளிகைகள் எழுப்புவதும்கூட விளையாடலாம் என்றும் கூறினார். எனது இந்த யோசனையையும் பாராட்டினார்!

ஒரு தேர்ச்சி பெற்ற மாண்டிஸோரி ஆசிரியையின் பாராட்டு பெற்றதை பகிர்ந்துகொள்ளாமல் விடுவேனா?