காமராஜை சந்தித்தேன் – சோ

சோ எழுதிய புத்தகங்களில் காமராஜை சந்தித்தேன் என்ற புத்தகம் மிக முக்கியமானதென்று நினைக்கிறேன். காமராஜ் இறந்த கொஞ்ச காலத்தில் துக்ளக்கில் சோ எழுதிய ஒரு கட்டுரைத்தொடரும், காமராஜுடன் பழகிய சிலர் எழுதிய கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கிறது. காமராஜைப் பற்றிய மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் (சோ எழுதிய கட்டுரைத்தொடர்) ஒரு பெரிய வேறுபாடு உள்ளது. இதில் காமராஜைப் பற்றி எழுதியுள்ள விஷயங்கள், சோ காமராஜை நேரடியாக கண்டு அவருடன் உரையாடிய விஷயங்களை மட்டுமே இதில் தொகுத்து கூறியிருக்கிறார். மற்றபடி பிறர் சொல்லக் கேட்டு எதையும் எழுதவில்லை(ஒரேயொரு சம்பவத்தைத்தவிர). இது இந்த புத்தகத்தின் நம்பகத்தன்மையை அதிகரிக்கிறது என எண்ணுகிறேன் (நான் சோவை மிகவும் மதிப்பதால் & நம்புவதால்)

சோவுக்கும், காமராஜுக்கும் இடையிலான முதல் சந்திப்பு சண்டையுடன் தொடங்கியதாம். அந்த சம்பவம் இதில் இடம்பெறவில்லை. சோ எழுதிய அவரது சுயசரிதையான “அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்” என்ற புத்தகத்தில் அந்நிகழ்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது. சோ எழுதிய ஒரு நாடகத்திற்கு அப்போது இருந்த காங்கிரஸ் அரசு (பக்தவச்சலம் முதலமைச்சர்) ஸ்கிரிப்டிற்கு லைசென்ஸ் கொடுத்து ஆனால் நாடகத்திற்கு சில தடைகள் விதித்துள்ளது. அதைப்பற்றி காமராஜ் சோவிடம் (இன்னொரு மேடை நிகழ்ச்சியில்) கேட்கப்போக, விவாதம் முற்றி, சோ எழுந்து மேடையிலேயே உரக்க கத்தியிருக்கிறார். காமராஜ் பதிலுக்கு கோபமாக உரக்க “ஓஹோ” என்று மட்டும் சொல்லியிருக்கிறார். பதிலுக்கு சோ அதேபோன்ற தொனியில் “ஆஹா” என்று சப்தமிட, விரக்தியுற்ற காமராஜ் மேடையிலிருந்து இறங்கி சென்றுவிட்டார். பின் பல மாதங்கள் கழித்து சந்தித்தபோது அதைப்பற்றியெதுவும் சொல்லாமல் சாதாரணமாக பேசத்தொடங்கிவிட்டார். இப்படி முதல் சந்திப்பு கோணலாக ஆரம்பித்தாலும், மற்றவை நேராகவே சென்று முடிந்திருக்கின்றன.

இந்தப்புத்தகத்தில் காமராஜைப்பற்றி நாம் அறிந்திராத தகவல்களும் உள்ளன. அவரது எளிமை பற்றி கேள்விப்பட்டிருப்போம். உண்மையில், தம் வீட்டிற்கு வருபவர்களுக்கு காஃபி முதலியவற்றை கொடுத்து உபசரிக்கக்கூட முடியாத அளவு ஏழ்மையில் இருந்தவர் அவர். மேலும் அவருடைய கட்சியிலிருந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீதான அவருடைய நம்பிக்கையையும் இந்த புத்தகத்தின்மூலம் அறியமுடியும். உண்மையில் இந்த இருபகுதிகளையும் நான் படிக்கும்போது கண்ணீர் வருவதை தடுக்கமுடியவில்லை.

இதிலுள்ள சோவின் எழுத்துநடையும் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று. காமராஜ் இறந்த நேரத்தையொட்டி எழுதப்பட்ட தொடர் என்பதால் அவருடைய தாங்கமுடியாத துக்கத்தை இதில் காணலாம். மேலும் காமராஜை வாழும்போது தூற்றியவர்கள் மீதும், அவருக்கு தொல்லை கொடுத்தவர்கள் மீதும் சோவுக்கு உள்ள கோபத்தையும் இதில் காணலாம். காமராஜைப் புரிந்துகொள்ளாமல் விட்ட தமிழ்நாட்டு மக்கள்மீதான கோபத்தையும் இதில் காணலாம். ரொம்பவே கூர்மையான எழுத்துநடை, கடுமையான சொற்கள் என்று நேர்மைப் பிழம்பாக மாறி எழுதியிருக்கிறார்.

ஒரு விஷயம் : காமராஜ் இறந்தபோது அவரது அலமாரியில் சிறிதளவு பணம் மட்டுமே இருந்ததாக படித்திருப்போம். அதனுடன் ஒரு துக்ளக் இதழும் இருந்ததாக சோ ஒருமுறை துக்ளக் ஆண்டுவிழாவில் சொல்லிக்கேட்டிருக்கிறேன்!

ஒரு நல்லவரைப் பற்றி இன்னொரு நல்லவர் எழுதிய புத்தகம். முடியும்போது அவசியம் படியுங்கள்.

பெயர் : காமராஜை சந்தித்தேன்
ஆசிரியர் : சோ
வெளியீடு : அல்லயன்ஸ் பதிப்பகம்
விலை : ரூ.33 /- (நான் வாங்கியபோது. இப்போது ரூ.60 என்று உடுமலை சொல்கிறது)