நியூஸ்ஹண்ட் மற்றும் மாக்ஸ்டர் செயலிகளில் “காலம் – ஜெயமோகன் சிறப்பிதழ்”

image

காலம் பத்திரிக்கையின் ஜூன் மாத இதழ், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் சிறப்பிதழாக வந்துள்ளது. துரதிருஷ்டவசமாக இந்த பத்திரிக்கையைப் பற்றி இப்போதுதான் முதன்முதலில் கேள்விப்படுகிறேன். எழுத்தாளர் நாஞ்சில்நாடனின் பதிவுகளை சமீபகாலமாக தொடர்ந்து படித்து வருகிறேன். அவ்வகையில் இவ்விதழில் ஜெயமோகன் குறித்து அவர் எழுதியுள்ள கட்டுரையின் பகுதியை அவரது இணையதளத்தில் பதிந்திருந்ததார். அதை படித்தபோது, அவ்விதழ் நியூஸ்ஹண்ட் (newshunt) மற்றும் மாக்ஸ்டர் (magzter) செயலிகளில் கிடைக்கிறது என தெரியவந்தது.

சரி, ஜெயமோகனுக்காக ரூ.75/- செலவழிக்கமாட்டோமா என்று நியூஸ்ஹண்ட்செயலிக்கு சென்றபோது, அங்கே அதன்விலை ரூ.19/- மட்டுமே என தெரியவந்தது. அடடே என்று வாங்கப்போனால் தள்ளுபடிகள் போக ரூ.5/- மட்டுமே செலவானது! இப்போது கொஞ்சம் குற்றவுணர்ச்சி கொள்கிறேன். கொஞ்சம் அலைந்து அந்த இதழை ரூ.75/-க்கே வாங்கியிருக்கலாம்.

அவரைப்பற்றி பலரும் எழுதியிருந்த கட்டுரைகள் மிக நன்றாக இருந்தன. வழக்கம்போல், அவர் சாதித்தவற்றில் ஒரு சிறு பகுதியையாவது நம்மால் செய்ய முடியுமா என்ற ஏக்கமும், செய்யவேண்டும் என்ற உணர்ச்சியும் தோன்றின.

இதற்கிடையில் நியூஸ்ஹண்ட் செயலியில் கிடைக்கும் மற்ற புத்தகங்களை சற்று துழாவினேன். நிறைய புத்தகங்கள் மலிவாகவும், இலவசமாகவும் கிடைக்கின்றன. குறிப்பாக பகவத்கீதைக்கு பாரதியாரின் உரை இலவசமாக கிடைக்கிறது. ஜெயமோகன் இதை பரிந்துரைத்திருக்கிறார். வெகுகாலம் முன்பு இதை படித்திருந்தேன். மீண்டும் படிக்கும்பொருட்டு தரவிறக்கி வைத்திருக்கிறேன். மற்றபடி, கல்கியின் நாவல்கள் (சோலைமலை இளவரசி) இலவசமாக கிடைக்கின்றன. நிறைய பெரியார் புத்தகங்கள் மலிவுவிலைக்கு கிடைக்கின்றன. ஆனந்தவிகடன், ஜூனியர் விகடன் போன்ற பத்திரிக்கைகளும் மலிவு விலையில் (ரூ. 5/-) கிடைக்கின்றன. நிறைய சிறுவர் புத்தகங்களும் உண்டு. பணத்தை வங்கி கடன் அட்டை மூலமாகவும் செலுத்தலாம். அல்லது நமது அலைபேசி கணக்கிலிருந்தும் செலுத்தலாம். போஸ்ட்பெய்ட் இணைப்பாக இருப்பின் வரிகள் சேரும்! 😉

இப்புத்தகங்களை இதன் செயலி வழியாக மட்டுமே படிக்கமுடியும் என்பது ஒரு பலவீனம். கணினியில் படிக்கமுடியாது. அதே நேரம், நாம் வாங்கிய புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல கருவிகளில் (நமது நியூஸ்ஹண்ட் கணக்கில் உள்நுழையும்பட்சத்தில்) இலவசமாக தரவிறக்கிக்கொள்ளலாம் என்பது இதன் கூடுதல் வசதி. உதாரணமாக பத்திரிக்கைகளை குடும்பத்தில் ஒருவர் வாங்கி அனைவரும் தத்தம் கருவிகளில் படிப்பது இதில் சாத்தியம். டேப்லட் வகை கருவிகள் இவற்றை படிப்பதற்கு மிகவும் உதவியாக இருக்கும் என்பது என் எண்ணம். எனினும் என் அலைபேசியில் என்னால் எளிதாகவே படிக்கமுடிந்தது. நூற்குறிப்பு வசதியும் இந்த செயலியில் உண்டு என்பதால் ஏற்கனவே விட்ட இடத்திலிருந்து நம்மால் எளிதாக படிப்பதை தொடரமுடியும்.

இது  என் தனிப்பட்ட அனுபவம் மட்டுமே. மாக்ஸ்டரை பொறுத்தவரையில் நியூஸ்ஹண்ட்டில் கிடைக்கும் சலுகைகள் இதில் இல்லை. மேலும் என் அலைபேசியில் எழுத்துரு பிரச்சனை இருக்கிறது. செய்திகளின் உள்ளே சென்று பார்க்கும்போது சரியாக இருந்தாலும், தலைப்பு செய்திகள் இவ்வாறு இருப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருக்கிறது. கொஞ்சம் முயன்றால் இதையும் நம்மால் வேகமாக படித்துவிடமுடியும் என்பது நம் மூளையின் சிறப்பம்சம்.

Screenshot_2015-08-02-07-43-32

உடையும் (!?) செய்திகளை உடனுக்குடன் தரும் வசதி மாக்ஸ்டரில் இருக்கிறது. ஆகவே இதை இன்னும் என் அலைபேசியில் விட்டு வைத்திருக்கிறேன்.

தொடர்புடைய இணைப்புகள்.

1. எழுத்தாளர் நாஞ்சில் நாடனின் பதிவு.
2. பாரதியாரின் கீதை உரை குறிப்பிடப்பட்டுள்ள ஜெயமோகனின் பதிவு.
3. நியூஸ்ஹண்ட் இணையதளம்.
4. மாக்ஸ்டர் இணையதளம்.