கிருத்திகா–இந்திய நாட்காட்டி

அறிமுகம்

இந்திய நாட்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ள பலவிதமான முக்கிய தினங்களை, விஷயங்களை நமக்கு நினைவு படுத்துவதற்காக செய்யப்பட்ட ஒரு எளிய, சிறிய முயற்சி இது. கீழே காணப்படும் தகவல்களை மாத நாட்காட்டிகளில் இருந்தும், பஞ்சாங்கங்களில் இருந்தும் எடுத்து அவற்றை ஒரு கூகிள் காலண்டரின் வழியாக பகிர்வதே இதன் நோக்கம்.

என்னென்ன விவரங்கள் இந்த நாட்காட்டியில் கிடைக்கின்றன?

 • முக்கிய தினங்கள் (தலைவர்களின் பிறந்த நாள் / நினைவு நாள் முதலியன)
 • அரசு விடுமுறை தினங்கள்
 • ஹிந்து மதம் தொடர்பான விவரங்கள்.
  • பண்டிகைகள்.
  • விரத தினங்கள்.
  • முக்கிய நாட்கள்
   • பிரதோஷம், சுபமுகூர்த்த நாள்
   • அமாவாசை, பௌர்ணமி
   • அஷ்டமி, கரிநாள்
   • மாத, வருட பிறப்புகள்
  • முக்கிய நேரங்கள்
   • நல்ல நேரம், ராகு காலம், குளிகை, எமகண்டம்
 • மற்ற மத பண்டிகைகள் (இப்போதைக்கு பெரிய பண்டிகைகள் மட்டுமே இதுவரை இணைத்துள்ளேன். கூடிய விரைவில் இவற்றை மேம்படுத்த முனைகிறேன்)

இதை எப்படி பயன்படுத்துவது?

இணையத்தில் நேரடியாக இந்த நாட்காட்டியை பின்வரும் இணைப்பை பயன்படுத்தி பார்க்கலாம்.

http://bit.ly/Krithika-IndianCalendar

ஒரு குறிப்பிட்ட நாளுக்குரிய தகவல்களையோ அல்லது ஒரு வாரத்திற்கான தகவல்களையோ காட்டுமாறு மாற்றிக்கொள்ளலாம்.

இந்த நாட்காட்டியை உங்களது தனிப்பட்ட நாட்காட்டி மென்பொருளிலும் இணைத்துக்கொள்ளலாம். இதையே நானும் பரிந்துரைக்கிறேன். இதற்கான முக்கியமான காரணமாக நான் கருதுவது – ஒருமுறை இணைத்துக்கொண்டபின், என்னுடைய இந்த நாட்காட்டியிலுள்ள அனைத்து விவரங்களும் உங்களது நாட்காட்டி மென்பொருளில் வந்து சேர்ந்துவிடும். அதன்பின்னர் நீங்கள் இணைய இணைப்பில் இல்லாதபோதும் இதை பயன்படுத்தலாம்.

ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், நான் ஏதேனும் கூடுதல் விவரங்களை (புதிய விஷயங்களையோ, அல்லது ஏற்கனவே இருக்கும் விஷயங்களில் கூடுதல் தகவல்களையோ இணைக்கும் பட்சத்தில்) உங்களால் திரும்ப இணைய இணைப்புக்கு வரும்வரை பெறமுடியாது. ஆகவே, அவ்வப்போது மட்டும் இணைய இணைப்பிற்கு வந்து செல்வது நல்லது. ஏதேனும் புதிய விவரங்கள் இந்த நாட்காட்டியில் சேர்க்கப்படும்போது மின்னஞ்சலில் அந்த செய்திகளை பெறும் வசதியை உருவாக்க இருக்கிறேன். ஆனால் இப்போது வேறு வழியில்லை.

மேலும் இந்த நாட்காட்டியை நீங்கள் ஸ்மார்ட் ஃபோன் வைத்திருக்கும் பட்சத்தில், அதிலுள்ள காலண்டர் ஆப்பில் இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம், விவரங்களுக்கான நினைவூட்டலை எளிதாக பெறலாம் (இணைய இணைப்பிலில்லாதபோதும்!). உண்மையில் இதை மனதில் வைத்துதான் இந்த முயற்சியை தொடங்கியிருக்கிறேன். கூகிள் காலண்டர் அல்லது அவுட்லுக் ஆப்புகளில் இதை இணைத்துக்கொள்ளலாம்.

நமது தனிப்பட்ட கூகிள் கணக்கிலுள்ள காலண்டரில் எப்படி சேர்த்துக்கொள்வது என்பதை இங்கே (https://support.google.com/calendar/answer/37100?hl=en) விளக்கியிருக்கிறார்கள். “Add using a link” என்ற பகுதியை பார்க்கவும். இந்த நாட்காட்டிக்கான ICAL link இதோ – http://bit.ly/Krithika-IndianCalendar-ics-File

எவ்வெப்போது தகவல்கள் புதுப்பிக்கப்படும்?

மாத நாட்காட்டிகள் மற்றும் பஞ்சாங்கங்களிலிருந்து இந்த தகவல்கள் பெறப்படுவதால், ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் வரைக்குமான தகவல்கள் முந்தைய வருடத்தின் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புதுப்பிக்கப்படும். ஏப்ரல் முதல் டிசம்பர் வரைக்குமான தகவல்கள் முந்தைய வருடத்தின் நவம்பர், டிசம்பர் மாதங்களில் புதுப்பிக்கப்படும். ஆகவே இந்த மாதங்களில் ஒருமுறை இணைய இணைப்புக்குள் வந்தால் கூட போதுமானது. இது குறித்த அறிவிப்புகள் நல்லேந்தலில் டிவிட்டர் பக்கதில் வெளியிடப்படும் (இப்பதிவின் கடைசி பகுதியை பார்க்கவும்). உதாரணமாக தற்போது 15 ஏப்ரல் 2016 வரைக்குமான தகவல்கள் ஏற்றப்பட்டிருக்கின்றன. 15 ஏப்ரல் 2016 முதல் டிசம்பர் 2016 வரைக்குமான தகவல்கள் இன்னும் 15, 20 நாட்களுக்குள் ஏற்றப்படும்.

நினைவூட்டல்களை (Notifications) எப்படி உருவாக்குவது?

நீங்கள் இந்த நாட்காட்டியை உங்கள் மென்பொருள்/செயலிகளில் இணைத்தபின், இந்த நாட்காட்டியிலுள்ள விவரங்களை உங்களுக்கு தேவைப்படும் விதத்தில் நினைவூட்டுவதற்கு உங்கள் செயலியை மாற்றியமைத்துக் கொள்ளலாம். இந்த விஷயத்தில் தற்போது இருக்கும் வசதிகள் எனக்கு அவ்வளவாக திருப்தியில்லை. கொஞ்சம் கூடுதல் சௌகரியங்கள் தேவைப்படுகின்றன. ஆனாலும் இப்போதைக்கு இவற்றுக்கு வழியில்லை என்பதால் இருக்கும் வசதிகளைத்தான் பயன்படுத்திக்கொள்ளவேண்டியிருக்கிறது.

உதாரணமாக, ஒரு பண்டிகையோ அல்லது ஒரு விரத தினத்தையோ, ஒரு வாரத்திற்கு முன்னர் ஒருமுறையும், இரண்டு நாட்களுக்கு முன் ஒரு முறையும், முந்தைய நாள் இரவு ஒருமுறையும் நினைவூட்ட வேண்டும் வகையில் இந்த நாட்காட்டியை அமைக்கவேண்டுமென்று விரும்புகிறேன். ஆனால் உங்கள் கருவிகளிலுள்ள செயலியை என்னால் இந்த நாட்காட்டி மூலம் என்னால் கட்டுப்படுத்த முடியாது. ஆகவே நீங்கள் உங்கள் செயலியில் இந்த விவரங்களை 1 மணி நேரத்திற்கு முன் நினைவூட்டுமாறு வைத்துக்கொள்ளுங்கள். மற்ற விவரங்களை அவ்வப்போது உங்கள் நாட்காட்டியை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த கட்டுப்பாடு உண்மையில் எனக்கு எரிச்சலை தருகிறது. வரும் காலங்களில் ஏதாவது முன்னேற்றம் நிகழ்கிறதா என்று பார்க்கலாம்.

என்னென்ன வசதிகள் வரவிருக்கின்றன?

குறிப்பிட்ட தமிழ் மாதங்களில் வரும் நட்சத்திரங்கள் அல்லது திதிகளை மின்னஞ்சல் மூலம் நினைவூட்டுதல். இதன் மூலம் நட்சத்திர அடிப்படையிலான பிறந்த நாட்கள் மற்றும் திதி அடிப்படையில் திவசத்திற்கான நாட்கள் ஆகியவற்றை தானாக தெரிந்துகொள்ளலாம்.

தர்ப்பணத்திற்கான அல்லது விரதங்களுக்கான நாட்களை மின்னஞ்சலில் பெறுதல்.

தனிப்பட்ட நினைவூட்டல்களை இந்த நாட்காட்டியிலிருந்து பெறுதல்.

விடுமுறையை திட்டமிடுவதற்கான உதவிகள்.

குறிப்பு : இவை எல்லாம் எனது விருப்பங்கள் மட்டுமே. மேலோட்டமாக அலசிப்பார்த்ததில் இவை சாத்தியமென்றே தோன்றுகிறது. எனினும், தொழில்நுட்ப சாத்தியங்கள், இவ்வசதிகள் கொடுக்கபோகும் உண்மையான பயன்கள், என்னுடைய சுறுசுறுப்பு , ஆர்வம் போன்ற காரணிகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு இவை உட்பட்டவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னென்ன புறக்கட்டுப்பாடுகள் உள்ளன?

இந்த நாட்காட்டி, கூகிளில் உருவாக்கப்பட்டுள்ளதால், நாட்காட்டி குறித்த அந்த நிறுவனத்தின் அனைத்து வசதிகளும் கிடைப்பதுபோல், கட்டுப்பாடுகளும் வந்து சேர்கின்றன! உதாரணமாக சமீப காலம் வரை குறுஞ்செய்திகள் மூலமாக நினைவூட்டல்களை அனுப்பும் வசதியை கூகிள் வைத்திருந்தது. இப்போது அது நிறுத்தப்பட்டுவிட்டதால் நம்மாலும் அதை பெறமுடியவில்லை. இம்மாதிரி கட்டுப்பாடுகள் உள்ளன. கூடுமானவரை இவற்றை கவனித்து களைய அல்லது மாற்று ஏற்பாடுகள் செய்ய முயற்சி செய்கிறேன். மற்றபடி கடவுள் சித்தம்!

மேற்கொண்டு தகவல்களை பெற…

முக்கிய தகவல்களை இந்த வலைப்பூவில் தொடர்ந்து பதிவிடுவேன். ஆகவே இங்கேயே தெரிந்து கொள்ளலாம்.