அக்குபிரஷர் அனுபவங்கள் – 1

முதல் தாக்குதல்

கடந்த 2014ம் ஆண்டின் கோடைக்காலத்தில் வீடு மாற்றியதிலிருந்து எல்லாம் ஆரம்பித்தது. எனக்கு சிறு வயதிலிருந்து மூச்சிரைப்பு நோய் இருந்துவந்தது. அதாவது ஜலதோஷம் வந்தால் சளியாக மாறி மூச்சிரைப்பில் கொண்டுபோய் விடும். எனக்கு பதினைந்து வயதாகும்போது, அலோபதி மருத்துவமுறைகள் பயனளிக்காததால், ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பித்தேன். மூன்று மாதங்களில் முழுமையான தீர்வு கிடைத்தது. அதன்பிறகு பலமுறை சளி பிடித்தாலும் மூச்சிரைப்பு மட்டும் வந்ததேயில்லை. முப்பத்துமூன்றாம் வயதில் ஒருமுறை கழிவறையை அமிலம் வைத்து கழுவி விட முனைந்தபோது அந்த நெடி தாங்காமல் மறுபடியும் சிறு அளவில் இரைப்பு வந்தது. பின் அந்த வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு குடி பெயரும்போது,  தூசியில் உழன்றதால், திரும்பவும் சளிபிடித்து, நன்றாகவே மூச்சிரைப்பு கிளம்பியது. அலோபதி மருந்துகள் எடுத்தும் சரியாகவில்லை. அருகிலிருந்த மருத்துவர், காச நோய்க்கான மாண்டாக்ஸ் சோதனை செய்துபார்த்து “உங்களுக்கு காசநோய் இருப்பதுபோல் தோன்றுகிறது” என்று சொல்லி நுரையீரல் மருத்துவர் ஒருவரை கலந்தாலோசிக்குமாறு சொன்னார்.

அதன்படி நானும் சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற மருத்துவமனையில், நுரையீரல் மருத்துவரை (Pulmanologist) சந்தித்தேன். அவர் முதலிலேயே இது காசநோய் இல்லை என்று தீர்மானமாக சொன்னார். ஒவ்வாமை காரணமாக வரும் பிரச்சனை இது என்றார். ஒவ்வாமையின் அளவை அறிந்துகொள்ள சில சோதனைகளை மட்டும் செய்துவிட்டு மருந்துகள் கொடுத்தார். மேலும் ரத்தத்தில் சக்கரையின் அளவை பார்க்குமாறும் சொன்னார். அதை சோதிக்க சென்றதிலிருந்து எனக்கு சோதனை ஆரம்பித்தது. நானூறுக்கும் மேல் சக்கரையின் அளவு இருந்ததால், ‘இதனால்தான் சளி தீரவில்லை. முதலில் சென்று ஒரு சக்கரை மருத்துவரை பார்த்து மருந்துகளை எடுத்துக்கொள்’ என்றார். பின்னர் என் அம்மாவுக்கு பார்த்துக்கொண்டிருந்த சக்கரை மருத்துவரிடமே நானும் சென்று காண்பித்தேன். அவர் ‘இதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை. இந்த மருந்துகளை எடுத்துக்கொள், நான் சொல்வதுபோல் உணவுக்கட்டுப்பாட்டை மேற்கொள், எளிதாக “கட்டுக்குள்” கொண்டு வந்துவிடலாம்’ என்றார். தீர்க்கமுடியும் என்று சொல்லவில்லை! சுமார் ஒரு மாதம் கழித்து வந்து பாருங்கள் என்றும் சொன்னார்.

நானும் அவர் சொன்னபடி கடும் உணவுக்கட்டுப்பாட்டோடு மருந்துகளும் எடுத்துக்கொண்டு வந்தேன். ஒரு மாதம் கழித்து சக்கரை சோதனை (காலை சாப்பாட்டிற்கு முன்னும், பின்னும்) முடிவுகளை எடுத்துக்கொண்டு அவரிடம் சென்றேன். சக்கரை நல்ல கட்டுக்குள் வந்திருந்தது. சளியும் மூச்சிரைப்பும்கூட குறைந்திருந்தது.  அவரும் பாராட்டிவிட்டு ‘இதே மருந்துகளை இன்னொரு மாதம் எடுத்துக்கொண்டுவிட்டு மறுபடியும் வந்து காட்டுங்கள்’ என்று சொல்லி அனுப்பிவைத்தார்.

அந்த சமயத்தில், எங்களுக்கு இரண்டாம் குழந்தை பிறந்ததையொட்டி அலைச்சல், வெளியில் உணவகங்களில் சாப்பிடுதல் என்று இருக்க நேரிட்டது. இதற்கு நடுவில் என் இரு நண்பர்களுடன் அலோபதி மருத்துவ முறைகளை குறித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த உரையாடல் மூலம் நிறைய புரிதல்கள் கிடைத்தன. அலோபதி மருத்துவத்தின் போதாமைகள் குறித்து நிறைய விவாதித்தோம். என் நண்பர்கள் இருவரும், அலோபதி மாத்திரைகள் எடுத்து கொள்வதால் எந்த பயனுமில்லை என்று பலமுறை வலியுறுத்தினர். பசி வந்தபின்னரே சாப்பிடுவது, பால், பாலிலிருந்து பெறப்பட்ட வெண்ணைய் முதலிய பொருட்கள், இவை இரண்டிலிருந்தும் தயாரிக்கப்பட்ட பொருட்கள் (இனிப்புகள் முதலியன) ஆகியவற்றை தவிர்த்தல் இவற்றின் மூலமாகவே சக்கரை நோய் என்று அலோபதிக்காரர்கள் அழைக்கும் தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று கூறினார்கள்.

எனக்கும் கொஞ்சம் ஆர்வம் வந்தது. ஆகவே ‘இவற்றை பின்பற்றி பார்க்கலாம். அதே சமயம், அந்த சக்கரை மருத்துவரிடமும் ஒரு மாதம் கழித்து பரிசோதனைக்கு செல்லலாம். சர்க்கரை அளவு கட்டுக்குள் வரவில்லையென்றால், அவர் தரும் மாத்திரைகளை மீண்டும் எடுத்துக்கொள்வது’ என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் அது அவ்வளவு எளிதானதாக இல்லை. பசி வரும்வரை காத்திருப்பது என்பது (இன்றுவரை) முழுக்க சாத்தியமாகவில்லை. முதல் சிறிது நாட்கள் வயிறு காலியாக இருந்தாலே அதை பசி என நினைத்துக்கொண்டு உணவை உட்கொண்டுவிடுவேன். பிறகுதான் காலியான வயிறு என்பதும் பசிக்கும் வயிறு என்பதும் இருவேறு விஷயங்கள் என்று புரிந்தது. ஆனாலும் எல்லா நாட்களிலும் பசித்தபின் தான் சாப்பிட்டேனா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

ஆனால் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்ந்தது. சக்கரை நோயின் அறிகுறிகளாக எனக்கு சாப்பிட்டவுடன் எனக்கு கடுமையான உடற்சோர்வு ஏற்படும். ஒரு படபடப்பும் இருக்கும். இவையிரண்டும், நான் அலோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டும், உணவுக்கட்டுப்பாட்டை அனுசரித்து வந்தபோதும் முழுமையாக இல்லாமலிருந்தது. அந்த விடுதலை உணர்வு நான் இவ்வாறு மாத்திரைகள் எடுத்துக்கொள்ளாமல் (முடிந்தவரை) பசித்து உணவு உட்கொண்டபோதும் கிடைத்தது. இதற்கிடையில் அந்த சக்கரை மருத்துவர் சொன்ன ஒரு மாதக்கெடுவும் முடிவுக்கு வந்தது. சக்கரைக்கான பரிசோதனையையும் மருத்துவரின் ஆலோசனையையும் அவர் மருத்துவமனையிலேயே செய்துகொள்ளலாமென்று அங்கே சென்றேன். நான் அவ்வப்போது குறுகிய தூர சைக்கிள் பயணங்கள் மேற்கொண்டிருந்த காலம் அது. மிகுந்த தன்னம்பிக்கையோடு சைக்கிளை எடுத்துக்கொண்டு பதினேழு கிலோமீட்டர் தொலைவிலிருந்த அவரது மருத்துவமனைக்கு காலை வேளையில் சென்றேன்.

சாப்பிடுவதற்கு முன்னுள்ள சோதனைக்கான ரத்த மாதிரியை கொடுத்து விட்டு அருகிலிருந்த உணவகத்தில் இட்லி வடை தோசை ஆகியவற்றை உண்டேன். பின்னர் சாப்பிட்டபின் இரண்டு மணி நேரம் கழித்து கொடுக்க வேண்டிய ரத்த மாதிரிக்கு காத்திருக்கும் வேளையில், சும்மா இருக்காமல், அருகிலிருந்த ஒரு கோவிலுக்கு (2கிமீ தூரம், போகவர 4கிமீ) சென்று வந்தேன். பின்னர் இரு சோதனைகளின் முடிவுகளையும் கிடைக்கப்பெற்றேன். இடி விழுந்தது. சென்றமுறை 110 என கட்டுக்குள் வந்த சக்கரையின் அளவு இம்முறை 197ஐ எட்டியிருந்தது. பேயறைந்த முகத்துடன் மருத்துவரை சந்திக்க காத்திருந்தேன்.

– தொடரும்

(அடுத்த பகுதி)