அக்குபிரஷர் அனுபவங்கள் – 7

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

முன்குறிப்பு : தேவையான அளவு ஓய்வு எடுத்துவிட்டதால் இப்பதிவுத் தொடரில் மிச்சம் வைத்தவற்றை முடித்துவிடலாம் என்றிருக்கிறேன். இடையில் ஏற்பட்ட தொய்வுக்கு மன்னிக்கவும்.

மறுதாக்குதல்
இத்தொடரின் முந்தைய பதிவின் இறுதியில் எழுதியிருந்தது போல இனி வாழ்வில் இன்பம் மட்டும்தான் என்று சுற்றிக்கொண்டிருந்தேன். முந்தைய வருடம் சளி மற்றும் மூச்சிரைப்பு தொந்தரவு ஏற்பட்ட அதே மே மாதத்தில் 2015லும் அதே தொந்தரவு ஏற்பட்டது. ஆனால் இம்முறை அந்த தொந்தரவை நன்றாகவே எதிர்கொண்டேன். எந்த மருந்தும் உட்கொள்ளவில்லை. ஆனால் நான் செய்த ஒரு தவறு, நாமே இப்போது அரை அக்குஹீலர்தானே? எதற்காக ஏங்கல்ஸ் ராஜாவிடமோ மற்றவர்களிடமோ செல்லவேண்டும் என்று நினைத்துக்கொண்டு சும்மாவே இருந்தேன். மேலும் உணவுக் கட்டுப்பாட்டையும் அவ்வளவாக கடைபிடிக்கவேயில்லை. அளவுக்கு மீறிய தன்னம்பிக்கைதான் காரணம். நோய் சரியாவதுபோல் தோன்றவில்லை. இருமல் அதிகமாகிக்கொண்டே சென்றது. வெளிவரும் சளியின் அளவும் கொஞ்சம் அச்சமயத்தில் ஊட்டுவதாக இருந்தது. உடலே மருத்துவர் என்ற தத்துவத்தின் அடிப்படைகள் நன்கு விளங்கியிருந்ததால் அலோபதி குறித்து புத்திசொல்ல வருவோரை நன்றாகவே எதிர்கொள்ள முடிந்தது. சுமார் மூன்று வாரங்கள் சென்றபின்னர் மூச்சிரைப்பும் வந்து சேர்ந்தது. கூடுதலாக காதடைப்பும். வலப்புற காது நன்றாகவே அடைத்துக்கொண்டது. பேசுவோரிடம் முகத்தை வலப்புறமாக திருப்பி வைத்துக்கொண்டு இடப்புற காதை உபயோகித்து சமாளிக்க வேண்டியதாயிற்று மற்ற தொந்தரவுகள் எற்கனவே இருந்தமையால் அச்சப்படவில்லை. ஆனால் இந்த காதடைப்பு கொஞ்சம் என் மன உறுதியை அசைத்துப் பார்த்தது. ஏங்கல்ஸ் ராஜாவிடம் சென்றேன். முதல்வாரத்தில் சளியும் மூச்சிரைப்பும் குறைந்திருப்பதை உணரமுடிந்தது. ஆனால் காதடைப்பு இரண்டு வாரங்கள் சென்றும் நீங்கவில்லை. மூன்றாவது முறை சென்றபோது “பசிவந்து இனிமேல் தாங்கமுடியாது என்ற நிலை வரும்போது மட்டும் சாப்பிடுங்கள். அதேபோல் முடித்துவிட்டு எழும்போதும் வயிற்றில் பசியிருக்கவேண்டும்” என்றார். இதைப் பின்பற்ற ஆரம்பித்த இரண்டாம் நாளில் காதடைப்பு நீங்கியது! நோய் ஆரம்பித்த ஒருமாத காலத்தில் படிப்படியாக குறைந்து முழுவதும் குணமானது! சென்றமுறை அலோபதிக்கு எடுத்துக்கொண்ட கால அளவைவிட குறைவு. அதைவிட முக்கியமாக மருந்து என்று எதுவும் உள்ளே செல்லவில்லை என்பது!

சமீப காலங்களில்
முதுகுவலிக்கு இந்த சிகிச்சையை கொண்டு மீண்டு வருகிறேன். இன்னமும் முதுகுவலி இருக்கிறதுதான். ஆனால் எவ்வாறு முதுகுவலியில்லாமல் பார்த்துக்கொள்வது என்று ஒரு யோசனை கிடைத்திருக்கிறது
2008ம் வருடத்தையொட்டி தினமும் சுமார் நாற்பத்தியெட்டு கிலோமீட்டர்கள் இருசக்கர வாகனத்தை ஓட்டியதே முதுகுவலிக்குக் காரணம் என்று நினைத்திருந்தேன். ஏனென்றால் அப்போதுதான் வலி அதிகமாகியிருந்தது. அதற்கு முன்னர் வலியிருந்தாலும் அவ்வளவு மோசமாக இல்லை. அப்போதைய வலிக்கு காரணம் அதிக உடல் எடைதான் என்று எனக்கு சொல்லப்பட்டிருந்தது. இருசக்கர வாகனம் ஓட்டாமல் இருப்பது சாத்தியமில்லை என்பதால் சரி வலோடு வாழ பழகிக்கொள்ளவேண்டியதுதான் என்று நானும் நினைத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன். சமீபத்தில் ஒரு பிஸியோதெரபிஸ்ட்டை பார்த்து பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்ன சில அறிவுரைகள் ஒரு திறப்பை அளித்தன. எந்த வேளையாக இருந்தாலும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குள் படுத்துக்கொள்வது உணவை குடலுக்குள் இறுகச் செய்யும். அது முதுகுவலிக்கு மிக முக்கிய காரணம். மேலும் இரவு வேளையில் இவ்வாறு சாப்பிட்டவுடன் படுப்பதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். மேலும் இரவு உணவை முடிந்தவரை குறைவாகவும் எளிமையானதாகவும் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். உணவுக்கும் தூங்கச்செல்லும் நேரத்திற்குமான நேரம் குறைந்தது இரண்டு மணி நேரமாவது இருக்கவேண்டும் என்றார். இவையனைத்தும் அக்குஹீலர்கள் சொல்லும் அறிவுரைகளுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளன. இரவு உணவாக பழங்கள், சூப் ஆகியவற்றையே எடுத்துக்கொள்ளவேண்டும். ஆறு மணிக்கு மேல் சமைத்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது. ஒன்பது மணிக்குள் தூங்க செல்லவேண்டும் என்று அவர்கள் எப்போதும்.சொல்வார்கள்.

என்னை பொறுத்தவரை இரவு உணவு என்பது நிச்சயம் கனமானதாகத்தான் கடந்த பதினைந்து வருடங்களில் இருந்து வந்துள்ளது. மேலும் சாப்பிட்டவுடன் தூங்க செல்வதும் எனக்கு பிரியமான ஒன்று. இவற்றினால் ஏற்கனவே முதுகுவலி ஓரளவு இருந்துவந்துள்ளதை சமீபத்தில் உணர்ந்தேன். ஆக இரவு உணவை கட்டுக்குள் கொண்டுவந்து, சாப்பிட்டவுடன் படுக்கும் பழக்கத்தையும் ஒழித்தால் நிவாரணம் கிடைக்கும் என்றே தோன்றுகிறது. செயல்படுத்தி பார்த்து சொல்கிறேன். நடுவில் ஒருமுறை காலில் ரத்ககாயம் பட்டு சில வாரங்கள் அவதிப்பட்டேன். அது குறித்து தனியாக எழுதுகிறேன்.

என் குடும்ப உறுப்பினர்களும் அக்கு பிரஷரும்
எற்கனவே கூறியதுபோல் என் தாயார் (67 வயது) இந்த சிகிச்சை முறையை மேற்கொண்டு நன்றாகவே தேறியுள்ளார். கடந்த ஒன்றரை வருடங்களாக எவ்விதமான மருந்துகளும் உட்கொள்ளவில்லை. என் மனைவியும் சில பிரச்சினைகளுக்கு இச்சிகிச்சையை மேற்கொண்டது நன்கு பயனளித்து வருகிறது. சமீப காலமாக என் மகள்கள் இருவருக்கும் இச்சிகிச்சையை மேற்கொண்டு வருகிறோம்! முறையே ஐந்து வயது மற்றும் ஒன்றரை வயது குழந்தைகள். இருந்த பிரச்சனைகள் நீங்கி ஆரோக்கியமாக சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்!!

இப்பதிவுத் தொடரின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறேன். ஆரம்பத்தில் அலோபதியின் போதாமை குறித்து சில விஷயங்களை ஆராய்ந்து எழுதலாம் என்று ஒரு எண்ணம் இருந்தது. ஆனால் அது நிறைய நேரத்தையும் உழைப்பையும் கோரும் விஷயமாக இருப்பதால் இப்போது முடியவில்லை. மேலும் இவ்வருடத்தின் பிற்பகுதியில் அக்குபுரஷர் தொடர்பான டிப்ளமோ படிப்பை மேற்கொள்ள இருக்கிறேன். அப்போது இவை குறித்து எழுத முயற்சிக்கிறேன்.

அடுத்த பதிவுடன் இத்தொடர் முடியும்.