ஹரிணி வாசித்த கதை குறித்த ஓர் உரையாடல்

சமீபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியிட்ட சிறுவர்களுக்கான புத்தகங்களில் ஒரு கொத்தை என் ஏழு வயது மகள் (ஹரிணி) வாசிப்பதற்காக வாங்கினேன். அதிலொரு புத்தகத்தை (தமிழ்) அவளை விட்டு தானாக வாசிக்க சொன்னேன். எழுத்துக்கூட்டி படித்தாளென்றாலும் புரியவில்லை என்று சிறிது நேரத்தில் மூடிவைத்து விட்டாள். பின்னர் நான் அவளுக்கு அதை வாசித்து வாசித்து கதை சொல்ல முற்பட்டேன். அதுவும் சரியாக வரவில்லை. பின்னர், நான் அந்த புத்தகத்தை முதலில் முழுக்க படித்து கதையை மனதில் இருத்திக் கொண்டேன். அதை வாய்மொழியாக அவளுக்கு கதையாக சொன்னேன். பின்னர் அவளை அக்கதையை தானாக படிக்க சொன்னபோது நல்ல பலன் கிடைத்தது. வாசிக்க சிரமப்பட்டாளே தவிர கதையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. 

பின்னர் அதில் அவளுக்கு புரிந்தவற்றை ஒரு நோட்டில் எழுத சொன்னேன். தொடர் வற்புறுத்தலின் பேரில் இன்று காலை மூன்று நான்கு வரிகள் மட்டும் எழுதினாள். படித்துப் பார்த்தபோதுதான் அவள் அதை மனப்பாடம் செய்து எழுத முயன்றிருக்கிறாள் என்று தெரிய வந்தது. பள்ளிக்கல்வியின் தாக்கம்!  சரி, எழுதவேண்டாம், அக்கதையிலிருந்து என்ன புரிந்து கொண்டாய் என்பதை கைபேசியில் உன் குரலில் பதிவு செய் என்றேன். அதிலும் கிட்டத்தட்ட அதையே செய்தாள். அதாவது அக்கதையில் உள்ள வரிகளை அதே போன்று சொல்ல முற்பட்டிருந்தாள். சில வரிகளுக்கு மேல் ஞாபகமில்லாததால் அவளால் மேற்கொண்டு சொல்லமுடியவில்லை. சற்று எரிச்சலும் சலிப்பும் கொண்ட நான் இப்போதைக்கு பேசாமல் விட்டுவிடலாம் என்ற முடிவுக்கு ஏறத்தாழ வந்துவிட்டேன். 

பின்னர் பொறுமையாக அவளை அழைத்து, அவளுடன் அக்கதை குறித்து ஒரு உரையாடலை ஆரம்பித்து அதை கைபேசியில் பதிவு செய்ய ஆரம்பித்தேன். பின்னர் கேட்டபோது கொஞ்சம் செயற்கையாக இருப்பதாக தோன்றியது. எனக்கும் இதுதான் முதல் அனுபவம் என்பதால் அவ்வளவு இயல்பாக பேசமுடியவில்லை. அடுத்து வரும் பதிவுகளில் இன்னும் மேம்படுத்த முயற்சி செய்கிறேன். ஆனால் இம்மாதிரி உரையாடல் வடிவில் பேசும்போது அவளும் சற்று இலகுவாகி பேசினாள். பதிவு செய்யப்படுவது குறித்த கவனம் இருந்தாலும் பெரும்பாலும் சாதாரணமாக பேசினாள் என்றுதான் சொல்லவேண்டும். அவள் எழுதுவதற்கான பயிற்சியை இன்னமும் நன்றாக பெற்றபின் இவற்றை எழுத்தில் பதிவு செய்யலாம் என்று யோசிக்கிறேன். 

கதையை நன்றாக உள்வாங்கியிருக்கிறாள் என்பது தெரிகிறது. பதில் சொல்லும்போது அக்கதையில் உள்ள வாக்கியங்களையும், வார்த்தைகளையுமே பயன்படுத்துகிறாள். அது மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதன்மூலம் புது வார்த்தைகளை தெரிந்து கொள்ளவும் பயன்படுத்தவும் அவளால் முடிகிறது. இம்மாதிரி செய்வது எந்த தேர்வுக்காகவும் இல்லை, இதற்கு மதிப்பெண்களும் இல்லை, எதுவும் பிழையாக சொன்னால் நான் கோபித்துக்கொள்ளவும் மாட்டேன் என்றெல்லாம் பலமுறை முன்னரே நான் உறுதியளித்தாலும், எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரு சிறு படபடப்பு அவளிடம் இருந்தது என்றுதான் தோன்றுகிறது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அவளால் இதிலிருந்து விடுபடமுடியும் என்று நினைக்கிறேன்.

பதிவு செய்த ஒலிக்கோப்பை சவுண்ட் க்ளவுடில் ஏற்றியுள்ளேன். ஆர்வமிருந்தால் கேட்டுப் பாருங்கள். நடுநடுவில் என் குரலும் வரும். சகித்துக் கொள்ளுங்கள்.

https://soundcloud.com/ganesh-periasamy-1/story-by-harini-m4a