QuickDraw with Google

தொடுதிரை வசதி கொண்ட ஒரு மடிக்கணினியை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறேன். ஒருமுறை சில வரைபடங்களை வரைய வேண்டியிருந்தது. “நம்மிடம்தான் தொடுதிரை வசதி இருக்கிறதே? அதனால் எளிதாக வரைந்துவிடலாமே” என்று பார்த்தால், கையிருப்பில் இருந்த மென்பொருட்கள் எவையும் தொடுதிரையில் விரல்களால் ஓட்டி வரைவதற்கு ஒத்துவரவில்லை, அல்லது எனக்கு சரியாக உபயோகிக்கத் தெரியவில்லை.

இணையத்தில் அவ்வாறான மென்பொருட்கள் ஏதேனும் கிடைக்கிறதா என்று பார்த்தபோது “https://quickdraw.withgoogle.com/” என்ற இணையதளத்தை சென்றடைந்தேன். செயற்கை நுண்ணறிவு சார்ந்து கூகிள் செய்துவரும் பல்வேறு சோதனை முயற்சிகளில் இதுவும் ஒன்று. ஏதேனும் ஒரு பொருளை குறிப்பிடுகிறார்கள். அதை நம்மால் இயன்றவரையில் இருபது நொடிகளுக்குள் அவர்கள் காட்டும் வெண்திரையில் வரையவேண்டும். நாம் வரைவதை உடனுக்குடன் கூகிளுக்கு அனுப்பி அதன் கணினி நாம் வரைந்ததை எவ்விதம் புரிந்துகொண்டிருக்கிறது என்பதை நமக்கு திரும்ப சொல்கிறார்கள். அவர்கள் சொல்லும் பொருளை ஒட்டி ஒன்றை வரைந்துவிட்டால் பெரும்பாலும் அதை சரியான விடையாக ஏற்றுக்கொள்கிறார்கள். அடுத்த‌டுத்தாக‌ ஆறு பொருட்களை இவ்வாறு வரையவேண்டும்.

உதாரணமாக, ஒரு கரடியை வரைய சொன்னார்கள். நான் கரடியின் முகம் மற்றும் உடலை குண்டாக வரைய முற்பட, கூகிள் பின்னூடாக அதை முதலில் ஒரு வட்டம் என்றும் பின்னர் கண் வாய் ஆகியவற்றை வரையும்போது அதை ஒரு ரொட்டி என்றும் அடுத்து உடலை வரைய ஆரம்பிக்கும்போது அதை முகம் என்றும் இறுதியாக கரடி என்றும் கண்டுகொண்டது. விளையாட ஆரம்பித்தபோது, இருபது நொடிகளுக்குள் வரைய வேண்டும் என்பது ஒரு சவாலாக இருந்தது, ஆனால் பழகப்பழக அவர்கள் சொல்வதை பெரும்பாலும் ஐந்து முதல் பத்து நொடிகளுக்குள் வரைந்துவிட முடிகிறது.

அதே சமயம் எல்லாவற்றையும் வரைந்துவிடுகிறேன் என்றும் சொல்லிவிட முடியாது. எவ்வளவு முயன்றும் சொதப்பலில் சென்று முடியும் பொருட்களும் உண்டு. ஒரு வாத்தை வரைந்து அது வாத்துதான் என்று கூகிளை ஏற்றுக்கொள்ள வைப்பதற்கு நான் பட்ட பாடு! ஒருமுறை படகு ஒன்றை வரையப்போய், இல்லை அது பாத் டப் தான் என்று பிடிவாதம் பிடித்தது. ஆனால் இவ்வாறு நாம் சொதப்பும் பொருட்களை ஒழுங்காக வரைந்து கூகிளுக்கு புரியவைத்த மற்றவர்களின் முயற்சிகளையும் கூகிள் பின்னர் காட்டுகிறது. உதாரணமாக, யோகா என்று சொன்னதற்கு, நான் ஒரு மனிதன் சம்மணமிட்டு அமர்ந்து தியானம் செய்வதைப் போல் வரைந்து கூகிளைக் குழப்ப, மற்றவர்கள் உடற்பயிற்சி செய்வதைப் போல் வரைந்து வெற்றி பெற்றிருந்தனர்.

மேலும் நாம் வரைந்தவற்றை ஏன் கூகிள் பலவிதமாக நினைத்தது என்பதையும் (கரடியை, வட்டம், ரொட்டி முகம் என்று கண்டுபிடித்து வந்ததைப் போல) கூகிள் பின்னர் காட்டுகிறது. உண்மையில் இது விளையாட்டு போல தோன்றினாலும், நாம் கூகிளுக்கு வரைந்ததை புரிந்துகொள்ள கற்றுக்கொடுக்கிறோம் என்பதுதான் உண்மை. நாம் வரைவதையெல்லாம் பரிசீலித்து அது தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டு வருகிறது.

நாம் வரைந்து கொண்டிருக்கும்போதே, அது தன்னுடைய சிந்தனைப் போக்கை கீழேயே வார்த்தைகளாகவும், ஒலித் துணுக்குகளாகவும் ஆங்கிலத்தில் நம்முடன் பகிர்ந்துகொள்கிறது. கேட்பதற்கும் பார்ப்பதற்கும் சுவாரஸ்யமாகவும் சில சமயம் பகீர் என்றும் இருக்கிறது. “நான் ஒரு வட்டத்தைப் பார்க்கிறேன், ஒரு ரொட்டியை, ஒரு முகத்தை… ஓ இப்போது அதை ஒரு கரடி என்று கண்டுகொண்டேன்” என்றெல்லாம் சொல்கிறது. சில சமயம் “நான் திணறிவிட்டேன்.. மன்னிக்கவும் என்னால் யூகிக்க முடியவில்லை” என்று நின்றும் விடுகிறது.

இரவு நேரத்தில் தூக்கக்கலக்கத்தில் காரை ஓட்டிச் செல்லும் அனுபவமற்ற ஓட்டுநரைப் போன்று கூகிள் அந்நேரங்களில் தோற்றமளிக்கிறது. தானியங்கி ஓட்டுநராக இந்த இணையதளம் இருந்தால் எப்படியிருக்கும் என்று யோசிக்கிறேன். “நான் ஒரு புள்ளியைக் காண்கிறேன். இரு புள்ளிகளை, அவை இரு கண்கள், ஒரு மல்லாந்த 8, இரு ஒளிவட்டங்கள். அவை வேகமாக வளர்கின்றன, அவை இரு இருசக்கர வாகனங்கள், ஓ இப்போது அதை நான் ஒரு லாரி என்று கண்டுகொண்டேன்…. டமால் என்று ஒலியை என்னால் கேட்க முடிகிறது”

நாம் வரைந்தவற்றை அழித்து மீண்டும் வரையவும் முடியும், ஆனால் எதுவாக இருந்தாலும் இருபது நொடிகளுக்குள் மட்டுமே. நாம் வரைந்தவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்ளும் வசதியும் உண்டு. தொடுதிரைக் கணினியில் மட்டுமன்றி கைபேசியிலும் இந்த இணையதளம் நன்கு வேலை செய்கிறது. இணைய இணைப்பு அவசியம். இதை நான் மற்ற நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அவர்களும் எளிதாக இதற்கு வசப்பட்டுவிட்டார்கள். பின்னர் என் குடும்பத்தினரும். இதில் எனக்கு மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால், நான் நன்றாக வரைகிறேன் என்று நண்பர்களும், குடும்பத்தினரும்கூட சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ என் மூத்த மகளுக்கு மட்டும் கூகிள் சிறப்பு சலுகை கொடுக்கிறதோ என்று ஒரு சந்தேகம். நானெல்லாம் ஒரு வட்டம் வரைந்து அதை கூகிளை நம்பவைக்க திணறும்போது, என் மகள் உத்தேசமாக ஒரு கோட்டை இழுத்தாலே “ஓ! அது ஒரு அரண்மனை என்று கண்டுகொண்டேன்” என கூகிள் சொல்கிறது.

குழந்தைகளுக்கு இது மிகவும் பயனுள்ள பொழுதுபோக்காக இருக்கிறது. பொருட்களை வரைந்து பழகிக் கொள்வது ஒன்று. கூகிள் அதன் சிந்தனைப் போக்கை சொல்லிச் செல்லும் வகையில் பல புதிய சொற்களும் குழந்தைகளுக்கு (சரி சரி எனக்கும்தான்) அறிமுகமாகின்றன. விதவிதமான பொருட்களை மிகக்குறுகிய நேரத்திற்குள் வரைவது சவாலாகவே இருக்கிறது. முக்கியமாக, ஒரு பொருளை நாம் சரியாக புரிந்துகொள்வதற்கு என்னென்ன விஷயங்களை நோக்குகிறோம் என்பதை தெரிந்து வைத்திருப்பதுதான் இதன் தந்திரமே.

ஒரு குதிரையை அதன் வாலை வைத்தே நாம் அறிந்துகொள்கிறோம். இல்லையென்றால் அது ஒரு கழுதையாக, ஒரு பசுவாக, ஒரு ஆடாகக்கூட தெரிய வாய்ப்பிருக்கிறது. புலியை அதன் உடலிலுள்ள கோடுகளை, பூனையை அதன் மீசை மற்றும் அதன் வாலை வைத்து. பொதுவாகவே ஒரு மிருகத்தின் வாலையும் வாய் அமைப்பையும் வைத்தே அது என்ன மிருகம் என்று நாம் புரிந்துகொள்கிறோம் என்று நினைக்கிறேன். மேலே சொல்லப்பட்ட மிருகங்கள் மட்டுமின்றி நாய் கழுதை, குரங்கு என்று பலவற்றிற்கும் இது பொருந்துகிறது. ஆனால் இது பொதுவிதி என்றும் சொல்லிவிட முடியாது.  ஒரு ஒட்டகச் சிவிங்கியை அதன் கழுத்து உடலுடன் சேருமிடத்தில் உள்ள கோணத்தை வைத்துதான் புரிந்து கொள்கிறோம், இல்லையென்றால் அது டைனோசராகிவிட அதிக வாய்ப்பிருக்கிறது.  ஒரு மருத்துவமனையை வரையச்சொன்னபோது என்னென்னவோ முக்கி, கடைசியில் நான் வரைந்த கட்டிடத்தின் மீது ஹாஸ்பிட்டல் என்று ஆங்கிலத்திலேயே எழுதியபின்னர்தான் விட்டது. ஆனால் இந்த தந்திரம் அடுத்தடுத்த முயற்சிகளில் செல்லுபடியாகவில்லை.

ஒரு பொருளை நாம் என்னென்ன கோணத்தில் பார்த்திருந்திருக்கிறோம் என்பதும் அதை வரைவதிலும் புரிந்துகொள்வதிலும் முக்கிய பங்களிக்கிறது. உதாரணமாக ஒரு கரடியை நான் முதலில் பக்கவாட்டில் நிற்கும் கோணத்தில் வரைய முற்பட்டு தோல்வியடைந்தேன். பின்னர் வெற்றியடைந்த முயற்சிகளை பார்த்தபோது, டெட்டி பியர் வகையிலான முகத்தை நேருக்கு நேராக பார்க்கும் கோணம் வரையவும் புரிந்துகொள்ளவும் எளிதாக இருக்கிறது என்பதைக் கண்டுகொண்டேன். ஆனால் திமிங்கலம் பக்கவாட்டில் மட்டுமே வேலைக்கு ஆகும். அதே சமயம் ஒரு சுறாவை அதன் உடலுக்கு கீழே இருந்து அதை மேலே நோக்கும் கோணமே உதவும். டால்ஃபின் தான் இன்னமும் எனக்கு வசப்படவில்லை.

இதைப்போன்று வேறுபல முயற்சிகளையும் கூகிள் செய்துவருகிறது. அவற்றையும் பயன்படுத்திப் பார்க்கவேண்டும்.

இணையதள முகவரி : https://quickdraw.withgoogle.com/
மற்ற முயற்சிகளை அறிய withgoogle என்று கூகிளில் தேடவும். withgoogle.com/ கூகிளுக்குத்தான் கொண்டு செல்கிறது.