விளையாட்டில்லா விளையாட்டு

“மன அழுத்தத்துடன் இருக்கிறேன்” என்று ஒருமுறை சொன்னபோது என் நண்பர் ஒருவர் “சலிப்புற்றிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். மன அழுத்தம் என்பதெல்லாம் பெரிய வார்த்தை. அவ்வாறு உணர்வதற்கான கனமான விஷயங்கள் எதுவும் நடக்க வாய்ப்பில்லாத ஒரு சராசரி வாழ்க்கையைத்தான் நாமெல்லாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்று சொன்னார். அதை சொல்லும்போது அவர் குரலில் சலிப்பிருந்ததா என்பதை இப்போது யூகிக்கமுடியவில்லை. என்றாலும் அதன்பின்னர் நான் அவ்வாறு சொல்வதில்லை, அதாவது வெளிப்படையாக. உள்ளூர அடிக்கடி அம்மாதிரி ஒரு உணர்வை நான் அடைவது நடந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, நான் விரும்பிய விஷயங்கள் தொலைதூரத்தில் தெரிய ஆரம்பித்து, ஆனால் நான் விரும்பும் வேகத்தில் என்னை நெருங்காமல் மெதுவாக வந்துகொண்டிருக்கும்போது அவ்வித உணர்வை அடைகிறேன்.

இம்மாதிரி ஒரு நேரத்தில், இவ்வகை உணர்வை வெல்லும் கைபேசிச் செயலிகள் ஏதேனும் இருக்குமா என்று கூகிளின் ப்ளே ஸ்டோரில் தேடியபோது ஆன்டிஸ்ட்ரெஸ் என்னும் செயலி கிடைத்தது. எவ்வித இலக்குகளும் இல்லாத செயல்கள் அடங்கிய ஒரு செயலி. அந்தச் செயலியில் நான் வைத்திருக்கும் பதிப்பில் உள்ள செயல்கள் பின்வருமாறு. (# என்னும் குறியிடப்பட்டிருக்கும் இடங்களில் “இஷ்டம்போல” என்ற வார்த்தையை இஷ்டம்போல இட்டுக்கொள்ளலாம். உதாரணமாக, இஷ்டம்போல அடுக்குதல்…)

1. மரத்தாலான தோற்றம் கொண்ட கனச்சதுரங்களை # அடுக்குதல்.
2. மூன்றுவிதமான ஸ்விட்சுகளை # இயக்குதல்.
3. இலைமேல் மலர்ந்து நீரில் மிதக்கும் பூக்களை அங்குமிங்கும் # தள்ளிவிடுதல். கூடுதலாக ஆங்காங்கே மிதக்கும் சருகுகளையும்.
4. புவியீர்ப்பு விசைக்கேற்ப உருளும் உலோக பந்துகளை, கைபேசியை # திருப்பி அதன்மூலம் அப்பந்துகளை உருளச் செய்தல்.# தள்ளியும் விடுதல்.
5. விரல்களால் திரையை # மீட்டி, பாம்பின் உடல்போன்ற தோற்றங்களை உருவாக்குதல். பாம்பு சீறும் ஒலியும் கேட்பதால் நான் இதை அவ்வளவாக பயன்படுத்துவதில்லை!
6. சாக் பீஸால் கரும்பலகையில் # வரைதல், அழித்தல்
7. ஏற்கனவே மென்காற்றிலாடிக்கொண்டிருக்கும் மூங்கில் குழாய்களை # அசைத்து # இசையைக் கொண்டுவருதல்
8. ஒன்று முதல் பதினைந்து வரை எண்ணிடப்பட்ட மரத்தாலான கனச்சதுரங்களை வரிசைப்படி அடுக்குதல்.
9. ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட பற்சக்கரங்களை ஒரு லீவரின் உதவியுடன் # சுற்றுதல்.
10. மூடுபனியால் மூடப்பட்டிருக்கும் கண்ணாடி ஜன்னலை # துடைத்து அதன்வழியாக இயற்கைக் காட்சிகளைக் காணுதல்.
11. எடை பார்க்கும் கருவியை பல விரல்களால் # அழுத்தி எடையைக் கூட்டவும் குறைக்கவும் செய்தல்.
12. ஒன்றோடொன்று உரசிக்கொண்டிருக்கும் வகையில் தொங்கவிடப்பட்ட பெண்டுலம் போன்ற குண்டுகளை # இழுத்து மற்றவற்றுடன் மோதவிட்டு இயற்பியலின் விதிகளை நேரில் தரிசித்தல்.
13. நுணுக்கமாக வரையப்பட்ட கோட்டோவியங்களின் இடைவெளிகளில் # வண்ணம் தீட்டுதல்.
14. மனவசியக்காரர் ஒருவர் ஆட்டும் கறுப்பு வெள்ளை வட்டத்தை தொடர்ந்து பார்த்து மயங்குதல்
15. எண் 1ல் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்றே ஆனால் தலையணை போன்ற மென்மையான பொருட்களை # தூக்கிப் போடுதல்.
16. விட்கெட் ஸ்பின்னரை # நகர்த்தி சுழற்றுதல்.
17. மேலிருந்து தொங்கிக்கொண்டிருக்கும் ரப்பராலான விளையாட்டுப் பொருளை # இழுத்து விட்டு அதன் விரிந்து சுருங்கும் தன்மையை சோதித்தல்.
18. கடற்கரையின் பிண்ணனியில் வைக்கப்பட்டிருக்கும் கண்ணாடிக் கோப்பையில் உள்ள பனிக்கட்டிகளையும் எலுமிச்சைத் துண்டையும் # தூக்கிப் போடுதல்
19. நீரில் நீந்தும் மீன்களை விரலால் தொட்டு # விரைய வைத்தல். மீண்டும் மீண்டும் வரும் மீன்களையும் அதே சோதனைக்கு உட்படுத்தி நம்மனதினுள் உறையும் குரூரத்தை வெளிக்கொணர்தல். அவ்வப்போது மேலிருக்கும் குடுவையை அசைத்து அவற்றிற்கு உணவளித்து நமது கருணையுணர்வையும் மீட்டுக்கொள்ளுதல். கீழே அசைவின்றி படுத்திருக்கும் நட்சத்திர மீனை அதேபோன்ற சோதனைக்கு உட்படுத்தி, அது எப்போதும் அசையாமலேயே இருப்பதைக் கண்டு குழம்புதல்
20. எண்களிடப்பட்ட வட்டமான மரப்பலகையில் சிறிய அம்புகளை எறிந்து அதன் மையத்தைத் தாக்க முயற்சி செய்தல். குறி பிழைக்காதபோது கைதட்டலைப் பெறுதல்.
21. புதிர்ப்பாதையினூடாக உலோகக்குண்டு ஒன்றை, கைபேசியை # திருப்புவதன்மூலம் மேலிருந்து கீழே கொண்டுவந்து அடிப்பகுதியிலுள்ள குழிக்குள் கொண்டு சேர்த்தல். முடித்தவுடன்? அடுத்த குண்டு அடுத்த புதிர்ப்பாதையுடன் தயாராக இருக்கும்! நான்கே நான்கு கைதட்டலைத் தவிர வேறு எதுவும் கிடையாது.
22. உலோகத்தாலான கிண்ணத்தை மரத்தாலான சிறுகழி கொண்டு # தட்டி இனிய ஒலியைக் கொண்டுவருதல். அனைத்துப் பக்கங்களிலும் ஒரே ஒலிதான் எழுகிறது என்பதை சிறிது நேரம் கழித்து உணர்ந்து கொள்ளல்.
23. பொருட்கள் சேதமாவதைத் தடுக்க சுற்றப்படும் ப்ளாஸ்டிக் தாளின் காற்றடைக்கப்பட்ட சிறு குமிழிகளை # உடைத்தல். அனைத்தையும் உடைத்தபின் அடுத்த ப்ளாஸ்டிக் தாளைப் பெறுதல்.
24. இவை போன்ற மற்ற செயல்களை, மனமிருந்தால், பைசா கொடுத்து வாங்குதல்.

மேற்குறிப்பிட்டுள்ளவற்றில் 8, 10, 13, 20, 21, 23 ஆகியவையே சிறிய அளவிலேனும் ஒரு இலக்கைக் கொண்டிருக்கும் செயல்கள். அவ்விலக்குகளும் அடையப்பெறும்போது அடுத்த இலக்கு தானாகவே வந்துவிடும். இவைதவிர மற்றவை எவ்வித இலக்குமின்றி செய்யப்படுபவை. ஆகவே முடிவில்லாத சுழற்சிப் பாதையில் செல்லும் வகையிலானவை. நம் மனம் விலக்கம் கொள்ளும்வரை செய்துகொண்டே இருக்கவேண்டியதுதான். அனைத்துமே, யாருக்கேனும் எதற்கேனும் காத்துக்கொண்டேயிருக்கும்போது செய்துகொண்டிருக்க ஏற்றவை. 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு கோட்டைச் சுவரில் பொருத்தப்பட்ட துளையை மூடும் வட்டமான மறைப்பை சுழற்றிக்கொண்டே இருப்பதுபோல. இச்செயல்களுக்காக நாம் கைபேசியைச் சுழற்றி சாய்த்து திருப்பி தேய்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைத்தான் அறுதியிட்டுக் கூறமுடியவில்லை.

இதை என் கைபேசியில் நிறுவியபின் சில நாட்களுக்குள், ஹரிணியின் (என் ஏழுமுக்கால் வயது மகள்) கைகளில் இச்செயலி சிக்கியபின் நடந்துதான் சுவாரஸ்யம். அவளால் இச்செயல்களை செய்யமுடிந்தாலும் இச்செயலியின் ஒட்டுமொத்த பயனைப் புரிந்துகொள்ள முடியவில்லை. இலக்குகளில்லாமல் ஒரு விஷயத்தை செய்யவேண்டும் என்பது அவளைக் குழப்புகிறது. பள்ளிக்கல்வியின் தாக்கம் என்று நினைக்கிறேன். உதாரணமாக, “மரத்தாலான கனச்சதுரங்களை ஒன்றன்மீது ஒன்று அடுக்கினால் ஒரு மார்க்‍=ஆ?” என்று கேட்கிறாள். “அதெல்லாமில்லை, சும்மா அடுக்கு” என்றால் வினோதமாக பார்க்கிறாள். அதேபோல் “எல்லா மீன்களையும் துரத்திவிட்டால், கேம் முடிந்ததா?” என்று கேட்கிறாள். “இல்லை, தொடர்ந்து மீன்கள் வந்துகொண்டே இருக்கும்” என்றால் “என்னப்பா இது? முடியவே முடியாதா?” என்று கேட்கிறாள். “சுத்திக்கிட்டே / தட்டிக்கிட்டே / உருட்டிக்கிட்டே இருக்கவேண்டியதுதானா?” என்ற கேள்விகளுடன் அமைகிறாள். ஆனால் என் இரண்டாம் மகள் அதிதிக்கு (மூன்றேமுக்கால் வயது), இவ்வாறு இலக்கற்ற, முடிவற்ற விஷயங்கள் ஒரு பிரச்சனையாக இருக்கவில்லை. அவள் பாட்டுக்கு செய்துகொண்டே செல்கிறாள். சலிப்புறும்போது வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க சென்றுவிடுகிறாள்.

யோசித்துப் பார்த்தால், ஏதேனும் ஒரு இலக்கை நோக்கி, ஒரு குறிப்பிட்ட நேரம் சென்று முடிவடையும் விஷயங்களை மட்டுமே நம் பள்ளிகள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கின்றன என்று தோன்றுகிறது. இவையன்றி தொடர்ச்சியாக செய்துவரும் எந்த விஷயமும் ஒருவித மனநெருக்கடிக்கு அவர்களைத் தள்ளுகின்றன. உங்கள் மகளிடமோ, மகனிடமோ முடிவற்றதாகத் தோற்றமளிக்கும் ஒரு செயலைச் செய்யச் சொல்லுங்கள். அவர்களால் நிச்சயம் அதைச் செய்ய முடியாது. யோசித்துப் பார்த்தால் நாமுமே அப்படித்தான். அவர்களைவிட சற்று அதிக நேரம் தாக்குப்பிடிப்போமாக இருக்கும். உதாரணமாக, ஒரு கிலோ எடையுள்ள முட்டை கோஸை பொடிப்பொடியாக நறுக்கமுடியுமாக இருக்கும். அது உணவுக்குப் பயன்படும் என்று நமக்கு தெரிவதால். ஆனால் ஒரு நூற்கண்டை முழுக்க பிரித்து இன்னொன்றில் சுற்றி வைத்தல் போன்ற செயல்களை நம்மாலும் செய்யமுடியாது. அதிலுள்ள பொருளின்மையை கண்டுகொண்டு அவற்றைத் தவிர்த்துவிடுகிறோம். “சும்மா ஒரு நான்கு மணி நேரம் இரு. டிவி, மொபைல் என்றில்லை, வேறு எதுவுமே செய்யக்கூடாது. யாரிடமும் பேசக்கூடாது. அங்கிங்கு நகரவும் கூடாது. படிக்கக்கூட கூடாது” என்று குழந்தைகளிடம் மட்டுமல்ல, பெரியவர்களிடமும் சொல்லி இருக்கவைக்க முடியாது. பொருள் தராத விஷயங்களை செய்யக்கூடாது என்பதை இளமையிலிருந்தே கற்றுவருகிறோம். என் முதல் மகள் ஒன்றாம் வகுப்பு வரை மட்டும் பள்ளிக்கு சென்றவள். தற்போது வீட்டிலிருந்தே கற்பிக்கப்பட்டு வருகிறாள். இளையவளுக்கு பள்ளி என்பது கார்ட்டூன் தொடர்களில் வரும் ஒரு விளையாட்டு மட்டுமே. அதனாலேயே இரண்டாமவளுக்கு இதுபோன்ற இலக்கற்ற செயல்களைச் செய்வதில் எந்த மனத்தடையும் இல்லை என்று நினைக்கிறேன். “சும்மா இருப்பது என்பது ஒரு குற்றவுணர்ச்சியைக் கிளப்பி விடுகிறது என்பதாலேயே, அதை தவிர்ப்பதற்காக மட்டுமே, ஏதேனும் ஒரு செயலில் நம்மை நுழைத்துக் கொள்கிறோம். அதுவும் தீங்கானதுதான்” என்ற வகையிலான ஒரு கட்டுரையை சமீபத்தில் படித்தேன். அதை மீட்டெடுக்க முடிந்தால் இங்கு பின்னர் பகிர்கிறேன்.

பொருளின்மை கொண்ட செயல்களை நாம் தவிர்ப்பதில் தவறில்லை. ஆனால் அதிலுள்ள பொருளின்மை உண்மையிலேயே பொருளின்மைதானா என்பதை யார் சொல்வது? இப்படியே சென்றால், ஆரம்பநிலையில் பொருளின்மை கொண்டதாக தோற்றமளிக்கும் எந்த பெரிய செயலையும் நாம் எளிதாகத் தவிர்த்துவிடுமோ? துரிதமாக அனைத்தையும் செய்து, துரித உணவை உண்டு, துரிதமாக பயணம் செய்து, துரிதமாக மருந்துகளை உட்கொண்டு, துரிதமாக நோய்களிலிருந்து மீண்டு, துரிதமாக வாழ்ந்து முடித்தும் விடுவோம் போல.