மகளிடம் ஒரு பேட்டி

கடந்த இருநாட்களாக, பாரிஸிற்கு ஒரு சிறிய சுற்றுலாவாக சென்றிருந்தோம். திரும்பி வரும் வழியில் ஹரிணிக்கு (எட்டு வயது) மிகவும் போரடிக்க, “என்னிடம் ஏதாவது கஷ்டமானதாக கேள், பதில் சொல்ல முடிகிறதா என பார்க்கிறேன்” என்றாள். பொதுவாக அவள் ஏதாவது கேட்டு நான் பதில் சொல்வதாகத்தான் செல்லும். அப்படிப்பட்ட நேரங்களில் பதில் சொல்ல சோம்பல்பட்டு, அப்புறம் சொல்றேன் என்று தவிர்த்து விடுவதுண்டு. ஆனால் இம்முறை கேள்வி கேட்பதுதான் எளிதாயிற்றே என்று ஆரம்பித்தேன். கைபேசியில் ‘பேட்டியை’ பதிவுசெய்து எழுத்தில் கொண்டுவர முடிகிறதா என பார்ப்போம் என்று. இதுபோன்று மற்ற சிலரை பேட்டியெடுக்க வேண்டும் என வைத்திருக்கிறேன். இவளிடமிருந்து ஆரம்பிப்போமே என நினைத்துக் கொண்டேன். அவளிடம் எனக்கு இருந்த சில சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும் இது ஒரு வாய்ப்பாக இருந்தது. ஓரளவு எழுத்தில் கொண்டு வந்திருக்கிறேன். படித்துவிட்டு கருத்துக்களை (ஏதேனும் இருந்தால்) ganesh.periasamy@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

 கணேஷ் : ஏன் உனக்கு பார்பியை ரொம்ப பிடிக்குது?


ஹரிணி :
(தீவிரமான குரலில்) ஏன்னா, சில பார்பி பார்த்தீன்னா அழகா இருக்கும். அதே சமயத்தில வேற பார்பீஸ்லாம் பார்த்தீன்னா அதுக்கு நெறைய தலைமுடி இருக்கும். அதை நாம நல்லா வாரி வச்சிக்கிட்டே இருந்தோம்னா அந்த தலைமுடி அழகா படியும். அதுனாலதான் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதோட அழகும் சூப்பரா இருக்கும்.

க : ஆனா, இந்தியாவுல இருக்கும்போதும் வாங்குவே இல்ல. ஆனா இந்தியாவுல இருக்கிற பார்பிலாம் தலைமுடி ஒழுங்கா இருந்ததில்ல இல்லையா? ஆனா அப்பவும் வாங்கிக்கிட்டுதான இருந்த? ஏன் அப்படி?

ஹ : (சில நொடிகள் யோசித்தபின்) அங்கே நான் முடி வாராம என்னோட டாய்ஸ் பாக்ஸ்ல வச்சிருந்தேன். வாராம வச்சிருந்ததால அது மோசமாயிடுச்சு.

க : இன்னைக்கு போய் உனக்கு பொம்மை ஏதாவது வாங்கணும்னு உன்னைய கடைக்கு கூட்டிக்கிட்டு போனா என்ன பொம்மை வாங்குவ நீ?

ஹ : (சிறிது வெட்கத்துடன்) பார்பி

க : பார்பிதான் வாங்குவியா?

ஹ : ஆமா.

க : ஏற்கனவே இப்போ எவ்வளவு இருக்கு உன்கிட்ட? ரெண்டு இருக்குல்ல?

ஹ : ஒண்ணுதான் இருக்கு எனக்கு ஜெனிவாவுல. இந்தியாவுக்கு போயிட்டா ரெண்டு ஆயிடும்.

க : அப்போ ஏன் மறுபடியும் பார்பியே வாங்குற, வேற ஏதாவது வாங்கலாம்ல?

ஹ : ம்ஹும். எனக்கு பார்பிய ரொம்ப பிடிக்கும். பார்பிதான்.

க : நீ இன்னைக்கு லீவுல இருக்க, ஸ்கூலுக்கு போகவேண்டாம், வீட்டிலதான் இருக்கப்போற. ஆனா வெளிலயும் எங்கயும் போகவும் முடியாது. வீட்டிலேயேதான் உட்கார்ந்திருக்கணும். இப்போ உன் கையில்,

ஒரு பார்பி இல்ல ஒரு நெமோ மூவி இருக்கு,

ரெண்டாவது, ரைம்ஸ் இல்ல பாட்டு அந்த மாதிரி காதுல மட்டும் கேக்குற மாதிரி இருக்கு, விஷுவல் இல்ல, வெறும் ஆடியோ மட்டும் இருக்கு.

இன்னொன்னு, காமிக்ஸ் ஸ்டோரி அல்லது பார்பி புக் மாதிரி ஏதாவது இருக்கு.

     இப்போ இது மூணுல எதை நீ தேர்ந்தெடுப்ப? ஏதாவது ஒண்ணுதான் எடுக்கணும்.

ஹ : (இன்னொரு முறை மூன்றையும் உறுதிப்படுத்திக் கொள்கிறாள், பின்னர் விளையாட்டுக்குரலில்) பார்பி மூவி

க : ஏன் அப்படி?

ஹ : (விளையாட்டுக் குரலில் பதில் தொடர்கிறது)பார்பி எனக்கு பிடிச்சிருக்கு. அதான் பார்பி மூவி.

க : சரி, பார்பி மூவி இல்ல, ஆனா நெமோ இல்ல டோரி மூவி இருக்குன்னு வச்சுக்கோ, அப்போ?

ஹ : (சில நொடிகள் யோசித்து) ஃபைன்டிங் நெமோ.

க : அப்பவும் படம்தான் எடுப்பியா? படம்தான் பார்க்கணுமா உனக்கு?

ஹ : ஆமா

க : ஏன் அப்படி? பாட்டு கேக்கலாம் இல்ல புக் படிக்கலாம்ல?

ஹ : ம்ஹூம். எனக்கு புக் ரொம்ப ரேர்தான், பாட்டும் எனக்கு ரொம்ப ரேர்தான்.

க : ஆனா பனிமனிதன்லாம் படிச்சப்போ நல்லாதானே இருந்தது? என்ஜாய் பண்ணத்தானே செஞ்ச?

ஹ : அது வேற கதை, இது வேற கதை.

க : அந்த, பனிமனிதன் மாதிரி புத்தகமா இருந்ததுன்னா?

ஹ : இல்ல. அத அப்புறம்தான் படிப்பேன்.

க : அதுவும் படிக்கமாட்டே?

ஹ : ஆமா

(நான் சற்று ஏமாற்றமடைந்தேன்)

க : சரி நீ வளர்ந்து படிச்சு என்ன ஆகப்போற?

ஹ : ஒரு டாக்டர், இல்ல டாக்டர் இல்ல, டீச்சர்.

க : (ஆச்சரியத்துடன்) டீச்சர்?

ஹ : எனக்கு ரெண்டு கெஸ் இருக்கு, டாக்டர் இல்ல டீச்சர்.

க : அப்படியா? டாக்டர் ஏன் ஆகணும்?

ஹ : டாக்டர்னா எல்லாரையும் செக் பண்ணலாம், எனக்கு செக் பண்ணுறதுனா ரொம்ப பிடிக்கும். கேம்ல விளையாடும்போதும் நெறைய செக்தான் பண்ணுவேன் பொம்மைக்கெல்லாம். ஆனா அதே சமயம் டீச்சரும் பார்த்தீன்னா, லெஸன் எடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதான்.

க : ம்ம். இந்த மஹிலா மேம் பார்த்துட்டு உனக்கு ரொம்ப பிடிச்சுபோச்சோ?

ஹ : (சிறிது வெட்கத்துடன்) ஆமா

க : ம்ம்.. என்ன டீச்சர் ஆகணும்னு ஆசைப்படுற?

ஹ : எப்படி?

க : சயின்ஸ் அதெல்லாம் கத்துக்கொடுக்கிற மாதிரியா? இல்ல லாங்குவேஜ் கத்துக் கொடுக்கிற மாதிரியா? இல்ல ஸ்போர்ட்ஸ் கத்துக் கொடுக்கிற மாதிரியா?

ஹ : (இடைமறித்து) லாங்குவேஜ் கத்துக் கொடுக்கிற மாதிரி.

க : என்னென்ன லாங்குவேஜ்?

ஹ : (யோசிக்கிறாள்) ஜெர்மன்!

க : ஜெர்மனா?

ஹ : ஆமா, ஜெர்மனும் எஸ்பேனியலும் (ஸ்பானிஷ் மொழியை ஜெனிவா வந்தபின் இப்படித்தான் சொல்கிறாள்).

க : அது ரெண்டுமா?

ஹ : ஆமா.

க : தமிழ்?

ஹ : (அரைமனதாக) ம்ம்.. கத்து தருவேனே! தமிழும் இங்கிலீஷும் எஸ்பேனியலும் ஜெர்மனும் கத்து தரலாம்னு இருக்கேன்.

க : உனக்கு இங்கே ஜெனிவாவுல இருக்கிறது பிடிக்கிதா? இல்ல இந்தியாவுல இருக்கிறது பிடிக்கிதா?

ஹ : (சற்று யோசனைக்குப் பின்) எனக்கு ஜெனிவாவுல இருக்கிறது பிடிச்சிருக்கு.

க : ஏன் அப்படி?

ஹ : ஏன்னா இங்க வந்து (யோசிக்கிறாள்), ஸ்கூல்ஸ்லாம் சூப்பரா இருக்கு. நடக்குறது இங்கே கஷ்டப்படுறேன். ஆனா நடக்குறதும் சூப்பராத்தான் இருக்கு. ஷூஸ் இங்கே போட்டுக்கலாம், ஷூஸ் போட்டுக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனா அதே சமயம் எனக்கு இங்கே ரொம்ப நடந்தாலும் பிடிக்காது, நடக்காம இருந்தாலும் பிடிக்காது. இங்கே எனக்கு வெட்னஸ்டேவும் லீவு விடுவாங்க. அதுனால எனக்கு ஜெனிவா ரொம்ப பிடிச்சிருக்கு.

க : ஆனா, இந்தியாவுல இருந்தா, ராஜம் பாட்டி, கௌரி பாட்டி எல்லாம் இருக்காங்க இல்லையா?

ஹ : (இடைமறித்து) ஆமா, அப்போ எனக்கு இந்தியாவும் பிடிக்குது. ஜெனிவாவும் பிடிக்கிது. ஆனா எனக்கு அதிகமா ஜெனிவாதான் பிடிக்குது.

க : ஒருவேளை, ராஜம் பாட்டி கௌரி பாட்டிலாம் இங்கே இருந்தா சூப்பரா இருக்கும்ல?

ஹ : ஆமா

க : பக்கத்துல பக்கத்துல போய் பார்த்துட்டும் வரலாம்

ஹ : (இடைமறித்து) சஞ்சனாவும் இருக்கணும் (இந்தியாவில் அவளது நெருங்கிய தோழி)

க : அவளுமா?

ஹ : ஆமா, நம்ம வீட்டு பக்கத்துலேயே அடுத்த வீட்டிலேயே இருக்கணும்.

க : சரி, உனக்கு ஜெயமோகனோட பனிமனிதன் புக் ரொம்ப பிடிக்கும்ல. அந்த நாவல் படிச்சீல்ல?

ஹ : ஆமா பாதிதான் படிச்சேன்.

க : ஓ பாதிதான் படிச்சியா ஃபுல்லா படிக்கலையா?

ஹ : ஆமா.

க : சரி (வெள்ளி நிலம் புத்தகத்தை மனதில் வைத்துக் கொண்டு)இப்போ அதுமாதிரி இன்னொரு புக் கொடுத்தா படிப்பியா?

ஹ : ம்ம். படிப்பேன்.

க : ஆனா நீ தமிழே வர வர படிக்க மாட்டேங்குறியே?

ஹ : ஆனா எனக்கு தமிழ் இங்கே ஜெனிவா வந்துட்டு கஷ்டமாயிடுச்சு. அந்த லெட்டர்ஸ்லாம் மறந்துட்டேன். ஏன்னா இங்கே ஃப்ரென்ச் இல்ல இங்கிலீஷ்ல தானே எழுதுறோம், அந்த மாதிரிதான் இருக்கும் இங்கே எல்லாம். அதனால மறந்துபோயிட்டேன் சிலதை. சிலதுதான் ஞாபகம் இருக்கு இப்போ.

க : சரி, நம்ம காந்தி தாத்தா இருக்காரில்ல. அவர பத்தி உனக்கு தெரிஞ்சதெல்லாம் சொல்லு. என்னென்னெல்லாம் தெரியும் உனக்கு?

ஹ : அவர்.. எனக்கு பணத்துல அவரோட ஃபேஸை ப்ரின்ட் பண்ணிருப்பாங்க, அது தெரியும் எனக்கு, வேற அவர பத்தி, அவர் இந்த துணி தைக்கிறதுக்கு பதிலா வீல்ல துணிய மென் (ஆண்கள்) (ஏன் இப்படி சொல்கிறாள் என எனக்குத் தெரியவில்லை) மாதிரி பண்ணுவாங்க, அது எனக்குத் தெரியும். அப்புறம் வேற (யோசிக்கிறாள், பின்னர் சற்று நாணி) அவ்வளவுதான் தெரியும் எனக்கு.

க : அவ்வளவுதான் தெரியுமா உனக்கு?

ஹ : அவரைப் பத்தி கதை… சிலதுதான் தெரியும் எனக்கு.

க : என்ன தெரியும்னு சொல்லு

ஹ : (சுதாரித்து) அது பாதிதான் படிச்சிருக்கேன் இந்தியாவுல, இங்கே புக் எடுத்துட்டு வர மறந்துட்டேன். அதுனால தெரியாது.

க : சரி, நரேந்திர மோடின்னா யாரு?

ஹ : (யார் என்று இன்னொருமுறை கேட்டுத் தெளிவு படுத்திக் கொள்கிறாள். பின்னர்) தெரியாதே.

க : கேள்விப்பட்டதில்லையா அந்த பெயரை?

ஹ : ம்ஹூம்.

க : ஜெயலலிதா?

ஹ : (உடனே)ம்ம் தெரியும்.

க : யார் அது?

ஹ : அவங்கதான் முன்னாடி ப்ரைம் மினிஸ்டரா இருந்தாங்க.

க : (ஆச்சரியத்தைக் குரலில் காட்டாமல்) ப்ரைம் மினிஸ்டரா?

ஹ : ஆமா.

க : சரி. கருணாநிதி தெரியுமா?

ஹ : ம்ஹூம்.

க : சசிகலா?

ஹ : ம்ம் தெரியும். அவங்க ஜெயலலிதாவுக்கு அடுத்து ப்ரைம் மினிஸ்டரா இருந்தாரு.

க : சரி. இப்போ நீ வீட்டுல தனியா இருக்குற. உன்கிட்ட, நீ என்ன கேட்டாலும் ஒரு பட்டன் அழுத்தினா கொண்டு வந்து கொடுத்திடுவாங்கன்னு வச்சுக்கோ. அப்படி ஒரு நாள் முழுக்க இருந்தா என்னென்ன கேப்ப?

ஹ : நான் வந்து.. பார்பி மூவி கேப்பேன். நெறைய பொம்மை கேப்பேன், சாக்லேட் கேப்பேன், அப்புறம் மசாஜ் பண்ணிவிட சொல்லி கேப்பேன். நைட் தூங்குறதுக்கு ஏற்பாடு பண்ண சொல்வேன். அப்புறம் சாப்பாடு பண்ண சொல்வேன்.

க : என்னென்ன சாப்பாடு?

ஹ : பன்னீர் மட்டர், பாலக் பன்னீர் (சிரித்துக் கொள்கிறாள்), நான், தனியா வெளியில போய்ட்டு வந்தா என் ஜெர்கின்னை ஹேங்கரில் மாட்டுறதுக்கு தனியா ஆள் வச்சுக்குவேன். பாத்ரூம் தொறந்து வைக்கிறதுக்கு (சிரிப்பு தொடர்கிறது) அப்புறம் கால் பிடிச்சு விடுறதுக்கு. இவ்வளவும் கேட்டுக்கிட்டு இருப்பேன் டெய்லி.

அப்புறம் வாஷிங் மெஷின்ல துணி தோய்க்கப் போடணும், துணி தோய்ச்சாச்சுன்னா ட்ரையர்ல போடணும், ட்ரையர் முடிஞ்சதுக்கு அப்புறம் எனக்கு மடிச்சு வச்சிடணும்.

க : சுருக்கமா, அம்மா கூட இருக்கணும் உன் பக்கத்துல?

ஹ : (உடனே) ஆமா

(என் மனைவி பார்த்துக் கொண்டிருந்ததையும் அவள் சிரிப்பதையும் பார்த்தபிறகு, அடக்கமுடியாமல் சிரித்துவிட்டேன்)

(ஹரிணியும் சிரித்துக் கொண்டே) அம்மாதான் வேலைக்காரி.

க : ஆனா கம்ப்ளெயின்ட் மட்டும் பண்ணக்கூடாது அம்மா.

ஹ : ஆமா.

க : சும்மா திட்டிக்கிட்டிருக்கக் கூடாது?

ஹ : அம்மாவோட ஷூவுல வீல் ஃபிக்ஸ் பண்ணிடுவேன். அப்புறம் ஒரு பட்டன் அமுத்தினா, ஸ்கேட்டிங் மாதிரி அப்படியே கொண்டுவந்திடும். அப்புறம் அம்மா வந்து எனக்கு எல்லா வேலையும் பண்ணித் தந்திடுவாள்.

க : குட்.. அப்பாகிட்ட உனக்கு என்ன ரொம்ப பிடிக்கும்? பிடிச்ச விஷயம் அஞ்சு விஷயம் சொல்லணும், பிடிக்காதது அஞ்சு சொல்லணும்.

ஹ : ம்ம். (ஆர்வமாகிறாள்) ஃபர்ஸ்ட் பிடிச்ச விஷயம், நான் கேட்டா சில நேரம் விளையாட வந்திடுற. சில நேரத்துல கதை சொல்ற. அம்மா திட்டினான்னா நீ அழாதன்னு சொல்லுவ. அப்புறம் நீ ரொம்ப திட்டமாட்ட, அது உன்கிட்ட எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நினைச்சேன்னா… இப்போ… சைனீஸ் ஹோட்டல்னா நீ கூட்டிட்டு போயிடுற.

க : எது எதெல்லாம் பிடிக்காது அப்பாகிட்ட?

ஹ : (கிண்டலாக சிரித்துக் கொண்டே) தூங்குறது, நெறைய ரெஸ்ட் எடுக்கிறது, டீவி பாக்குறது எனக்கு கொடுக்காம (சில நேரத்துல என திருத்திக் கொள்கிறாள்), என் பெர்மிஷன் இல்லாம (சிறிது நிறுத்தி, என்கிட்ட சொல்லாம என்று திருத்திக் கொள்கிறாள்) என்னோட ஸ்நாக்ஸ் சிலத எடுத்து சாப்பிட்டுடுற,

க : (ஆச்சரியமாகி)இது எப்போடி நான் பண்ணினேன்?

ஹ : பண்ணிருக்க நீயி!

க : சரி!

ஹ : அப்புறம் (யோசிக்கிறாள்) சம் டைம்ஸ் என்மேல கோபப்பட்டுடுற, சம்டைம்ஸ், ரொம்ப ரேர்.

க : சரி அம்மாகிட்ட பிடிக்காத விஷயம்லாம் என்னென்ன?

ஹ : அம்மா டக் டக்குன்னு கோபப்படுறா. ஸம் டைம்ஸ் என்னைய ஃபோர்ஸ் பண்ணுறா ‘இதை பண்ணு பண்ணு’ன்னு. ( ‘ரெண்டுதானா’ என்று நான் ஏமாற்றத்துடன் ஆச்சரியப்பட, சற்று யோசனைக்குப் பின்) சில நேரம் சைக்கிள் எடுத்துக்கிட்டு போக வேண்டாங்கிறா, அப்போ பயங்கர கோபமா வரும். வேற.. (யோசிக்கிறாள்) அவ்வளவுதான்

க : (இன்னும் ஏமாற்றத்துடன்) மூணு விஷயம்தான்?

ஹ : ஆமா.

க : அப்போ புடிச்ச விஷயம்னா?

ஹ : கேட்ட நேரத்துல சமைச்சு தர்றா, அப்புறம் எனக்கு பிடிச்சதெலாம் பண்ணித்தர்றா, அப்புறம், எங்களை பார்த்துக்குறா

க : (இதனிடையே இறங்குமிடம் வந்ததால்) சரி, இத்துடன் இந்தப் பேட்டி முடிவடைகிறது, மீதிய நான் அப்புறம் கேட்குறேன், மிக்க நன்றி.

ஹ : ஒகேஏஏஏஏ

இதன் பின்னர் பேட்டி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என விளக்கம் அளித்துக் கொண்டே வீட்டிற்கு சென்றோம்.

இது குறித்த என் எண்ணங்கள் சிலவற்றை அடுத்து பதிகிறேன்.