மகளுடனான என் பேட்டி குறித்து சில எண்ணங்கள்

மகளுடனான என் பேட்டி

 • ஏற்கனவே சிலமுறை இம்மாதிரி உரையாடல்கள் எனக்கும் அவளுக்கும் நடந்திருக்கின்றன. எழுத்தில் கொண்டுவரலாம் என முயன்றது இதுதான் முதல் முறை.
 • அவளிடம் எனக்கு இருந்த / இருக்கிற சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறலாம் என முயன்றிருந்தேன். ஆனால் முன்தயாரிப்புகள் ஏதும் இல்லாமல் திடீரென பேட்டி ஆரம்பித்ததால் கேள்விகளை உடனடியாக தெளிவாக கேட்கமுடியவில்லை. இன்னும் சில விஷயங்கள் குறித்து அவளின் எண்ணங்களை அறிய வேண்டும் என நினைத்திருக்கிறேன். இன்னொருமுறை சரியான தயாரிப்புடன் பேட்டி எடுக்க முடிகிறதா என பார்க்கலாம்.
 • இம்மாதிரி பேட்டிகளை, குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்து எடுக்கவேண்டும் என்பது என் நெடுநாள் திட்டம். சில வருடங்களுக்கு முன்பு, ஒருமுறை முயன்று தோற்றுவிட்டேன். இம்முறை மீண்டும் முயற்சி செய்யவிருக்கிறேன்.
 • பார்பி குறித்த என் கேள்விக்கு காரணம், அவளுக்கும் சரி என் இரண்டாவது மகளுக்கும் சரி, பார்பி பொம்மை என்றால் கொள்ளை பிரியம். அவளே பேட்டியில் சொல்லியிருப்பதுபோல, எவ்வளவு முறை பொம்மை கடைக்கு சென்றாலும் பார்பி பொம்மையைத்தான் இருவரும் கேட்பார்கள். காரணம் நமக்கு புரிகிறது என்றாலும் அவள் உண்மையில் என்ன நினைத்து வாங்குகிறாள் என்று அறிய எண்ணினேன். அவள் சொல்வது உண்மைதான். அந்த பொம்மைக்கு தலைவாரி விடுவதென்ன, முடியை பலவிதமாக சிகையலங்காரம் செய்து பார்ப்பதென்ன.. மகளைப் போல சீராட்டுகிறார்கள். நேற்றுகூட என் இளையமகள் வேகமாக என்னிடம் வந்து தன் கையிலிருந்த பார்பி பொம்மையை என் மடியிலிருந்த தலையணையில் வைத்து “பத்திரமா பார்த்துக்கோ, அது தூங்கிட்டிருக்கு, தொல்லை பண்ணாம வச்சுக்கோ” என்று தீவிரமான குரலில் சொல்லிவிட்டு சென்றாள்!

மேலும் அப்பேட்டியில் குறிப்பிட்டதுபோல், இந்தியாவில் கிடைக்கும் பார்பி பொம்மையைவிட இங்கு (ஜெனிவாவில்) இன்னமும் தரமான பொம்மைகள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. தலைமுடிகள் நிஜ தலைமுடியை ஒத்திருக்கும். ஆக, தலைமுடி வாரிவிடுவது அலங்கரிப்பது போன்றவற்றை அனுபவித்து செய்கிறார்கள்.

 • ஒரு திரைப்படம், ஒரு இசைத்தட்டு, ஒரு புத்தகம் இவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க சொன்னது குறித்து ஒரு பின்புலம் உண்டு. என் நண்பர்கள் சிலரிடம் அவ்வப்போது இந்தக் கேள்வியை கேட்பதுண்டு. அவர்கள் “புத்தகம்” என்று சொன்னால், மனதிற்குள் அவர்களுக்கு மேலும் நல்ல இடத்தைக் கொடுத்துக் கொள்வது என்று ஒரு வினோதமான பழக்கம் என்னிடம் உண்டு. அடுத்த நிலையில் இசைத்தட்டு, கடைசியாகத்தான் படம் பார்ப்பவர்களை வைத்துக் கொள்வது. அவ்வகையில் ஹரிணி படத்தை தேர்ந்தெடுத்தது எனக்கு சற்று ஏமாற்றம்தான். உண்மையில் படம் பார்க்கும் நேரத்தைவிட அவள் வயதுக்கான கதை புத்தகங்களில் நேரம் செலவழிக்கிறாள் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் அவளது தேர்வாக படமே இருக்கிறது என்பது எனக்கு சற்று ஆச்சரியம்தான். சில வருடங்கள் கழித்து இக்கேள்வியை மறுபடியும் அவளிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

இந்த வினோத பழக்கத்தின் வழி நண்பர்களை தரவரிசைப் படுத்திக்கொள்வதை கறாராக பின்பற்றுகிறேனா என்றால் இல்லைதான். படம் மட்டுமே பார்க்கும் நெருங்கிய நண்பர்களும் உண்டு. புத்தகத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் சிலரை சற்று தள்ளியே வைத்திருப்பதும் உண்டு. படம் மட்டுமே பார்க்கும் ஒரு நண்பர் ஹரிணியின் இந்த பதிலை படித்துவிட்டு “பார்த்தியாலே, அவள் எங்க சாதிலே” என்று கிண்டலடித்தார்.

 • இந்த “வளர்ந்து என்ன ஆகப்போற” என்னும் கேள்வியை இதுவரை சிலமுறை அவளிடம் கேட்டிருக்கிறேன். ஒரு தடவை எழுத்தாளர் என்றாள். பின்பொருமுறை புகைப்படக்காரராக ஆகப்போவதாக சொன்னாள். ஆனால் இந்த தடவைதான் ஆசிரியராக வேண்டும் என்று சொல்லியிருக்கிறாள். என் தாய்வழியில் குடும்பத்தில் நிறைய ஆசிரியர்கள் உண்டு. நான்கு பேர் ஆசிரியர்களாக இருந்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஐந்து பேர் சிலகாலம் மட்டும் ஆசிரியர்களாக இருந்திருக்கிறார்கள்.இருவர் இப்போது ஆசிரியர்களாக ஆகியிருக்கிறார்கள். நானே ஒரு ஆறுமாத காலம் ஆசிரியர் என்று சொல்லத்தக்க வேலையில் இருந்திருக்கிறேன். ஆக இந்த சூழலில் வந்தவள் ஆசிரியராகப் போகிறேன் என்று சொல்வதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஆனால் அவளுக்கு ஆசிரியர்கள்மேல் ஈடுபாடு இருந்ததில்லை என்று சொல்லமுடியும். உள்ளூர மதிப்பதுமில்லை என்று நினைக்கிறேன். இந்தியாவில் வெவ்வேறு பள்ளிகளில் படித்து வந்திருக்கிறாள். ஆனால் அவள் படித்த பள்ளிகள் அவளுக்கு என்றுமே பெரிய ஈடுபாட்டை கொடுத்ததில்லை. உள்ளூர ஒரு தயக்கத்தோடுதான் சென்றுவருவாள். இதனிடையே இந்திய பள்ளிக் கல்வியின்மீது வெறுப்புற்று அவளை வீட்டில் வைத்தே ஒன்றரை வருடம் நானும் என் மனைவியுமே கற்பித்திருக்கிறோம். ஒப்பிட்டு பார்க்க வீட்டிலிருந்து படித்தபோது அவள் மிகவும் நிம்மதியுடன் இருந்தாள்.

இந்நிலையில் என் வேலை காரணமாக ஜெனிவா, ஸ்விட்சர்லாந்துக்கு வந்திருக்கிறோம். இங்கும் வீட்டிலிருந்து கற்பிப்பது சாத்தியம்தான் என்றாலும், ஏகப்பட்ட கண்காணிப்புகள் இருக்குமென்பதாலும், இங்குள்ள பள்ளிக் கல்வி சற்று நன்றாக இருப்பதாக பலர் சொன்னதாலும் இங்குள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறோம். கடந்த 5 மாதங்களாக சென்றுவருகிறாள். ஆனால் இங்கு வந்தபின் அவளுக்கு ஆசிரியர்கள்மேல் நல்ல மரியாதையும் அன்பும் வந்திருக்கிறது. அவளுக்கு வகுப்பாசிரியையாக இருப்பவர் மேல் அவளுக்கு நிறைய பிரியம். அவரால்தான் இவள் முதல் முறையாக ஆசிரியையாகப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறாள். இவ்வாறு சிறுவர் சிறுமியரிடம் ஒரு தாக்கத்தை ஒரு ஆசிரியரால் ஏற்படுத்த முடிகிறது என்றாலே அவர் சாதித்துவிட்டார் என்றே தோன்றுகிறது. எனக்கு தனிப்பட்ட வகையில் பெரும் நெகிழ்ச்சியூட்டும் தருணம் இது. ஏறத்தாழ அந்த ஆசிரியையை தினமும் பார்ப்பேன். அவர்போல அக்கறையுடன், சிரித்தபடி வரவேற்கும் முகத்துடன் ஒரு ஆசிரியையாக இவளை கற்பனை செய்து பார்ப்பது சுகமாக இருக்கிறது.

இப்போது இதை தட்டச்சிட்டுக் கொண்டிருக்கும்போது அருகில் வந்தவளிடம் “டீச்சராத்தான் ஆகப்போறியா? முடிவு பண்ணிட்டியா?” என்றேன். “ஆமா. இந்தியாவுல இருக்கிற டீச்சர் மாதிரி இல்ல. அவங்க நிறைய திட்டுவாங்க, இங்கே ஜெனிவாவுல உள்ள டீச்சர் மாதிரி ஆகப்போறேன். இவங்களும் கொஞ்சம் திட்டுவாங்க. ஆனா நான் அதுகூட பண்ணமாட்டேன்” என்று உறுதியுடன் கூறுகிறாள்.

 • மற்றபடி டாக்டர் ஆகவேண்டும் என்பதெல்லாம் அவளது விளையாட்டினால் பிடித்திருக்கிறது என நினைக்கிறேன். அவளே அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. “புகைப்படக்காரராக ஆவது என்ன ஆயிற்று” என்றபோது, “அது அப்பப்போ ஃபோட்டோ எடுப்பேன், ஃபுல்டைம் எடுக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டாள். “மொழி கற்பிக்கும் ஆசிரியராகத்தான் ஆவேன், அறிவியல், கணிதம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியராக அல்ல” என்று இன்னொருமுறை உறுதிப்படுத்திவிட்டு பல்தேய்க்க சென்றிருக்கிறாள். ஆக தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் கேட்டபோதும் பதில் மாறவில்லை!
 • இங்கு வந்தபின் அவள் தமிழ் படிப்பதில்லை என்பது எனக்கு ஒரு குறை. மேலும் ஒருமுறை “தமிழ் எழுத்தெல்லாமுமே எனக்கு மறந்துகிட்டிருக்கு” என்று அவள் சொன்னபோது மிகவும் சஞ்சலமடைந்தேன். அதனால்தான் “ஏன் அவள் தமிழ் படிப்பதில்லை” என்று கேட்டேன். அவள் சொல்வது போல இங்கு வந்தபின் பள்ளிகளில் ஃப்ரெஞ்ச் மொழிவழியாகத்தான் அனைத்தையும் கற்பிக்கிறார்கள். தோழிகளுடன் பேசுவதும் சில சமயம் ஆங்கிலத்தில்தான் என்று ஆகிறது. தமிழ் பேசும் தோழிகளும் உண்டு என்றாலும், அவர்களுக்கிடையே பொதுமொழியாக ஆங்கிலம்தான் பெரும்பாலும் இருக்கிறது. இந்த சூழலில் தமிழையும் உள்நுழைப்பது சற்று அதிகம்தான். இருந்தாலும் அதை கொஞ்சம் கொஞ்சமாகவாவது செய்யவேண்டும் என நினைக்கிறேன்.
 • காந்தியைப் பற்றி சிலமுறை அவளிடம் பேசியிருக்கிறேன். அந்த வகையில் எந்த அளவு அவரை நினைவில் வைத்திருக்கிறாள் என்று பார்ப்போம் என காந்தி பற்றிய அக்கேள்வியைக் கேட்டேன். மறந்துவிட்டாள் அவரைப் பற்றிய சில கதைகளை சொன்னது அவளுக்கு நினைவிருக்கிறது, மேலும் காந்தி பற்றிய மங்கா காமிக் புத்தகம் படித்ததும் (அதாவது நான் படித்து அவளுக்கு கதை சொன்னதும்) நினைவிருக்கிறது. ஆனால் அதைத்தவிர வேறெதுவும் நினைவிலில்லை. குறை சொல்ல முடியாத நினைவாற்றலைக் கொண்டுள்ள அவளுக்கு இவை நினைவிலில்லை என்றால், குற்றம் சாட்ட வேண்டியது என்னைத்தான். மறுபடியும் காந்தி பற்றி ஆரம்பிக்கிறேன்.
 • இந்தியாவில் இருந்தபோது நரேந்திரமோடி, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரைப் பற்றி பேசியிருக்கிறோம். மத்திய மாநில அரசாங்கங்கள் பற்றியும், ஜெயலலிதா இறந்த நேரத்தில் சசிகலா பற்றியும் பேசியிருக்கிறோம். அவையெல்லாம் கலந்து ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் பிரதம மந்திரிகள் ஆன வரலாற்றுக் குழப்பம் நடந்திருக்கிறது என நினைக்கிறேன்.
 • இந்த “நீ என்ன கேட்டாலும் கிடைக்கும்னா என்ன கேட்பே” வகை கேள்வி எனக்கு சிறுவயதிலிருந்து ஆர்வமான ஒன்று. கருடனாக ஆகவேண்டும் என்றெல்லாம் ஏங்கியிருக்கிறேன். அவ்வகையில் இவளிடம் கேட்டபோது இவள் தனக்கு என்னென்ன தேவையோ அவற்றை நலுங்காமல் பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாள் என்பது தெரியவந்தது. அவள் அம்மாவை பெரிதும் விரும்புகிறாள், ஆனால் அம்மா குறை சொல்வது மட்டும் இவளுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை. என்னிடம் என்ன பிடிக்கும் பிடிக்காது என்ற கேள்விக்கு விரிவாக பதில் சொன்னவள், அவள் அம்மாவை பற்றிய கேள்விக்கு அவ்வளவு விரிவாக சொல்லவில்லை. விமர்சனங்களுக்கு அப்பால் அம்மாவை வைத்திருக்கிறாள் என்றே இதை எடுத்துக் கொள்கிறேன். மேலும் அம்மவைப் போல எந்நேரமும் இல்லாமல் அவ்வப்போது மட்டும் கூட இருப்பதால், செல்லம் அதிகமாகி அவள் கேட்பதை பெரும்பாலும் பெற்றுத் தந்துவிடுவேன். அவ்வகையில் அம்மாவைவிட அப்பாவை அவள் விரும்புவதுபோல தோன்றுகிறது. ஆனால் உண்மையில் தேவையான பொழுதுகளில் இரு மகள்களுமே தம் அம்மாவிடமே சென்று சேர்வதைக் கண்டிருக்கிறேன். ஆக அவளது இப்பதிலைப் பற்றி பெருமைகொள்ள பெரிதாக எனக்கு எதுவுமில்லை என்பதே நிதர்சனம்.

இதுபோல ஒரு பேட்டியை என் இரண்டாவது மகளிடம் எடுக்கவேண்டுமென இருக்கிறேன். அது இன்னமும் மசாலா கலந்து இருக்கும் என நம்பலாம்.