அன்பை போதித்தவர்

நேற்று முகநூலில் எனது அம்மாவின் அப்பாவைப் பற்றி பின்வரும் ஒரு குறிப்பை எழுதியிருந்தேன்.

(ஃபேஸ்புக்கிலிருந்து விலகிவிட்டதால் இக்குறிப்பை இங்கேயே தந்திருக்கிறேன்)
//
என் அம்மா வழித் தாத்தாவைப் பற்றிப் பேச்சு வந்தது. கடந்த 2002ல் மறைந்த அவருக்கு இது நூற்றாண்டாக இருக்குமோ என்று என் பெற்றோரிடம் கேட்டபோது “இருக்கலாம், சரியாகத் தெரியவில்லை. என்னிடம் அவரது ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பார்த்து சொல்கிறேன்” என்றார் எனது தந்தை.

பழைய பைகள் சிலவற்றில் தேடி அவருடைய ஓய்வூதியக் கணக்குப் புத்தகத்தைக் கண்டடைந்தோம். ஆனால் அதில் அவரது பிறந்த தேதி குறித்த விவரங்களில்லை. மேலும் தேடியபோது 2002ம் வருடம் கடைசியாக எங்கள் மாமா கருவூல அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதம் கிடைத்தது.

அதில் அவரது வயது (2002ம் வருடப்படி) 88 என்றிருந்ததது. ஆக, இது அவருக்கு 103ம் வருடம். சற்று சுவாரஸ்யம். குறைந்து போயிற்று. ஆச்சரியமாக அவரது காசோலைப் புத்தகத்தைக் கண்டேன். பணம் எடுக்க வசதியாக வெறும் காசோலைகளில் கையெழுத்திட்டு என் தந்தையிடம் கொடுத்துள்ளார்! மாமனார் மெச்சிய மருமகன் 😉 இந்த ஆவணங்களை இன்றளவும் கையோடு வைத்திருக்கும் என் தந்தையும் மாமனாரை மெச்சும் மருமகன்தான் 🙂
//

அவரைக் குறித்துத் தனியாகவே ஒரு பதிவு எழுதவேண்டும் என்றிருந்தேன். இக்காலைவேளை அதை மீண்டும் நினைவுபடுத்திவிட்டது. பொதுவாகவே அதிகாலை வேளைகள் எனக்கு மன எழுச்சியையும் நெகிழ்வையும் (இப்போதெல்லாம் அடிக்கடி நெகிழ்கிறேன், காலைவேளைகளில் அது இன்னமும் அதிகமாகிறது) தருகிறது. இம்மாதிரித் தருணங்களை விடாமல் எதையாவது எழுதிவிட வேண்டும் என்பதால் இப்பதிவு.

மேலோட்டமாகப் பார்க்கும்போது மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவராகவே தோற்றமளிப்பார். ஆனால் அவரது மறைவிற்குப் பின்னர் அவரைப் பற்றி அவ்வப்போது கேள்விப்படும் சில தகவல்கள் அவரைப் பற்றிய ஒரு ஆச்சரியமான பிம்பத்தை உருவாக்குகின்றன.

நான் குழந்தையாக இருந்த சமயங்களில் என் தாத்தா எங்களுடன் சிலகாலம் (என் அம்மாவிற்கு உதவும் பொருட்டு) தங்கியிருந்தார். எனக்கு முதன்முதலாக என் வாழ்க்கையில் நினைவிலிருக்கும் சில நிகழ்ச்சிகளிலேயே இவரும் இருக்கிறார். அப்போதெல்லாம் எனது அம்மா தான் ஆசிரியராக வேலை பார்த்த பள்ளிக்கு என்னையும் அழைத்துச் செல்வார். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்த சமயத்தில், நான் உணவுண்டுவிட்டு வீட்டிலேயே உறங்கிவிட்டேன் – வழக்கம் போல. என் அம்மாவும் என் உறக்கத்தைக் கலைக்க விரும்பாமல், என் தாத்தா வசம் விட்டுவிட்டு பள்ளிக்குச் செல்ல, தூக்கம் முடிந்து எழுந்த நான், அம்மாவிடம் தான் இருப்பேன் என்று அடம்பிடிக்க என் தாத்தா என்னை அழைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றது எனக்கு நினைவிலிருக்கிறது. அப்போதெல்லாம் என்னை அவர் அழைக்க பல்வேறு பெயர்களைப் பயன்படுத்துவார். “எனக்கு எட்டு பெயர்கள்” என்று பெருமையாக சொல்லிக்கொள்வேன். கணேச்சு, படவா, எலேய் போன்றவை அவற்றில் சில.

ஒருமுறை அவர் கடைக்கு செல்லக் கிளம்பினார். நானும் வருவேன் என்று அடம்பிடிக்க, என்னை சமாதானப்படுத்தியதாக நினைத்துக்கொண்டு, நான் வீட்டிலேயே இருக்கப்போகிறேன் என்று நினைத்துக்கொண்டு கிளம்பினார். நான் “அவர் அப்படித்தான் சொல்வார், நாம் பின்னால் செல்வோம்” என்று அவர் பின்னாலேயே சென்றேன். அவர் அதை அறியவில்லை. மண் சாலையிலிருந்து பேருந்து செல்லும் பிரதான சாலையில் இணைந்தபோது பின்னால் வந்த பேருந்தை சுட்டிக்காட்டி “தாத்தா! பஸ் வருது. பார்த்துப் போ” என்று சொல்ல, அதிர்ந்து விட்டார். கிட்டத்தட்ட கால் கிலோமீட்டர் அவர் அறியாமல் பின்னால் சென்றுகொண்டிருந்திருக்கிறேன். பின்னர் என் அம்மாவிற்கு நல்ல திட்டு விழுந்தது தனிக்கதை. நான் ஓரளவு வளர்ந்தபின் சென்னைக்கு சென்று என் மாமாக்களுடன் வாழ்ந்துவந்தார். எப்போது ஊருக்கு வந்தாலும் மிகப் பிரியமாக இருப்பார்.

ஆனால் இந்தச் செல்லமெல்லாம் சிறுவயதில்தான். என்னுடைய பத்தாம் வயதிலிருந்து பதினைந்தாம் வயதுவரை பெரும்பாலும் அவரிடம் திட்டு வாங்கித்தான் எனது பொழுது கழிந்திருக்கிறது. குறிப்பாக நான் ஏழாம் வகுப்பு படிக்கும் சமயத்தில், என் ஆங்கில அறிவு தரைமட்டத்தில் இருக்கிறது என்பதை அறிந்து அதிர்ந்துவிட்டார். தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகியவற்றை நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு முன்னாள் ஆசிரியரின் பேரன் அவ்வாறு இருந்ததை அவரால் தாங்கமுடியவில்லை போல. உட்காரவைத்து ஆங்கில வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார் – கோடை விடுமுறை தினங்களில். பிள்ளைகளின் வளர்ச்சி என்பது அவர்கள்மீது போடப்படும் அழுத்தங்களுக்கு ஏற்ப எதிர்திசையில் செல்லும் என்பதால், என்னிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. வெறுத்துப் போய் விட்டுவிட்டார். பேனா எதற்கு உதவும் என்ற எளிய கேள்விக்குக் கூட என்னால் ஆங்கிலத்தில் பதில் சொல்ல இயலவில்லை. “அத வச்சு என்ன உழுவியா? எழுதத்தானே செய்வ?” என்று திட்டியது நினைவில் இருக்கிறது. பின்னர் எட்டாம் வகுப்பில் ஓரளவு ஆங்கில அறிவு வந்தாலும், அவர் எதிர்பார்த்த அளவிற்கு நான் முன்னேறவில்லை என்பதால் அதுகுறித்த ஒரு பயத்துடனே அவரிடம் பேசிவந்தேன். நான் பதின்ம வயதுக்கு வந்திருந்த நேரம் ஆதலால், அந்த பயம் கோபமாகவும் அலட்சியமாகவும் மாறியது. அவரிடம் பெரிய அளவில் பேசிக்கொள்வதில்லை. என் இரு மாமாக்களிடமும் அவ்வாறே. அவர்கள் மூவரையும் பற்றி மிகவும் கேவலமாக என் நண்பர்களிடம் சொல்லியிருக்கிறேன். அவர்களுக்கும் அவ்வாறே ஏதேனும் ஒரு உறவினர் அப்போது இருந்திருந்தனர். ஆனால் எனது தாத்தா, எப்போது ஊருக்கு வந்தாலும் என்னிடம் ஆர்வமாகப் பேசுவார். நான் மரியாதைக்கு சில வார்த்தைகள் பேசிவிட்டு விலகிவிடுவேன். பெரும்பாலும் அவருடன் பேச வேண்டிய தேவையின்றி பார்த்துக்கொள்வேன்.

புதுக்கோட்டைக்கு அருகே உள்ள கொத்தமங்கலம் என்ற சிற்றூரில் அவரது நடுவயதுக்காலம் கழிந்தது. அங்கு அவர் பிரபலமான ஆசிரியராக இருந்திருக்கிறார். நாற்பது வயதுக்குப் பின்னரே அவருக்கு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது. “பதினாறு வருஷம் வேலை பார்த்து இருபது வருஷத்துக்கு மேல பென்ஷன் வாங்குறேன்” என்று சிரித்துக் கொண்டே சொல்வார். அவ்வூரில் அவருக்கு மிகவும் மதிப்பு உண்டு. பெரும்பாலும் அனைவருக்கும் அவரைத் தெரிந்திருக்கும். இப்போது கூட “சர்மா வாத்தியார் பேரன்” என்று சொல்லிக்கொண்டு யாரிடமாவது என்னால் உதவி பெற்றுவிட முடியும் என்றே நம்புகிறேன். ஒவ்வொரு வருடமும் ஓய்வூதியம் தொடர்பாக கருவூல அலுவலகத்திற்கு நேரில் வந்து கையெழுத்திடும் வேலைக்காக புதுக்கோட்டைக்கு வருவார். அங்கிருந்து அருகில் உள்ள திருமயம் என்னும் சிற்றூருக்கு சென்று அங்குள்ள சார்கருவூலத்தில் கையெழுத்திட்டுவிட்டு வருவார். அப்போதெல்லாம் என்னையும் துணைக்கு அழைத்துச் செல்வார். இந்நிலையில் கொத்தமங்கலத்திற்கு என் அப்பாவின் சகோதரி குடும்பம் வந்து சேர்ந்தது. அவர்களுடன் என் தாத்தாவிற்கு நல்ல பழக்கம். அவர்களைப் பார்க்கச் செல்லும் சாக்கில் கொத்தமங்கலத்தில் உள்ள தனது நண்பர்களைச் சந்திக்கக் கிளம்பிவிடுவார் – என்னையும் கூட்டிக்கொண்டு. என் அத்தைக்கு என்மீது பிரியம் அதிகம் என்பதாலும், அவர் வடை முதலிய உணவுகளை தயார் செய்துவைத்திருப்பார் என்பதாலும், என் தாத்தாவுடன் அவ்வூருக்குச் செல்ல நானும் விரும்புவேன். என் அத்தையின் வீடு பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் முக்கால் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும். ஒருமுறை பேருந்திலிருந்து இறங்கி ஒவ்வொரு கடைக்கும் சென்று அங்குள்ளோரிடம் (கடைக்காரரிடமும், உட்கார்ந்திருப்பவர்களிடமும்) பேசிவிட்டு அத்தை வீட்டுக்குச் செல்ல வெகுநேரம் ஆனது. யாரோ இருவர் லாட்டரி எண்களைச் சொல்லி சரிபார்த்துக்கொண்டிருக்கும்போது, இவர் குறுக்கால் சென்று வேறு எண்களை மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் அவரைப் பார்த்துவிட்டு பின்னர் அடையாளம் தெரிந்தபின் “அட சர்மா சார் எப்படியிருக்கீங்க” என்று ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவருடைய பேரன் என்பதால் எனக்கும் பிரியமான வரவேற்பு கிடைக்கும். ஆனால் நான் உள்ளூர அவர்மீது மிகவும் கடுப்பில் இருப்பேன். அவர் புகையிலை போடும் பழக்கம் கொண்டவர். பின்னர் சிலகாலம் பான் பராக்கை பழகிக்கொண்டார். என்னைத்தான் சென்று வாங்கி வரச் சொல்வார். ஒருமுறை நான் இல்லாதபோது என் அக்காவை சென்று வாங்கி வரச் சொல்ல, நான் இதுதான் சமயம் என்று “நான் போய் வாங்கினாக்கூட பரவா இல்லம்மா.. அவ போய் வாங்கினா பாக்குறவங்க என்ன நெனப்பாங்க” என்றெல்லாம் செண்டிமெண்ட்டைக் கூட்டி போட்டுக்கொடுத்துவிட்டேன். என் அம்மாவும் தாத்தாவைக் கடிந்துகொண்டு விட்டார். தலைகுனிந்து என் அம்மாவின் பேச்சுக்களைக் கேட்டுக்கொண்டிருந்த என் தாத்தாவின் முகம் நினைவுக்கு வருகிறது. உள்ளுக்குள் இளிப்போடு பார்த்துக்கொண்டிருந்த என் முகமும். அற்பத்தனங்களை மட்டும் மறந்துவிடும் வரம் ஒன்று கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இன்றைக்கு இருந்திருந்தால் அவருக்கு 103 வயதாகி இருக்கும். கிட்டத்தட்ட மூன்று தலைமுறைக்கு முந்தையவர். ஆனால் தன் பிள்ளைகளுக்கு தன்னை விமர்சிக்கும் சுதந்திரத்தைத் தந்திருந்தவர் என்றே எனக்குத் தோன்றுகிறது. எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவரை என் அம்மா, பெரியம்மா மாமாக்கள் என எல்லோருமே அவரின் பிழைகளைச் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அவரும் ஏற்றோ மறுத்தோ விவாதித்தும் இருக்கிறார். அவர் வயதையொத்த என் தந்தை வழித் தாத்தாவை ஒப்பிடும்போது இவர் தன் பிள்ளைகளுக்கு நிறையவே சுதந்திரமளித்துள்ளார் என்றே சொல்லவேண்டும்.

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் வரை என்னை நிறைய திட்டியிருக்கிறார். மிகவும் அவமானமாக உணர்ந்திருக்கிறேன். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வந்தபோது எனக்கு ஒரு சவால் விடுத்தார். ஐநூறுக்கு நானூறு மதிப்பெண்கள் எடுத்தால் ஆயிரம் ரூபாய் கொடுப்பதாகவும், அதற்கு மேல் எடுக்கும் ஒவ்வொரு மதிப்பெண்ணுக்கும் நூறு ரூபாய் கொடுப்பதாகவும் சொன்னார். அதற்கு முந்தைய வருடம் என் பெரியம்மாவின் பெண் ஐநூறுக்கு 437 எடுத்து ஒரு நல்ல தொகையை அவரிடம் பெற்றிருந்தாள். நானோ “அவள் அளவுக்கு உன்னால் மதிப்பெண்களைப் பெறமுடிகிறதா என்று பார்ப்போம்” என்ற ரீதியில் சவால் விடுகிறார் என்று அசட்டுத்தனமாகப் புரிந்துகொண்டு எரிச்சலானேன். மதிப்பெண்கள் வெளியானது. 422 எடுத்திருந்தேன்.. என் பெரியம்மா பெண்ணைவிட குறைவு என்றாலும் எனக்குத் திருப்தியாக இருந்தது. அவரும் ஒத்துக்கொண்டதைப் போல் 1000 + 2200 = 3200 ரூபாயை கொடுத்தார். பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது எனது முதல் மாமாவின் பையனின் திருமணம் நடந்தது. அக்குறிப்பிட்ட திருமண நிகழ்ச்சியில் ஒருமுறை மண்டப வாசலிலிருந்து உள்ளே செல்ல அவரால் முடியவில்லை. இருளில் கண் சரியாகத் தெரியவில்லை. என்னை தன் கையைப் பிடித்து அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். நானும் உதவிசெய்தேன். “என்னமோ என் மாமா பையன் என்னைவிட அறிவாளி அப்படி இப்படி என்று சொல்வாரே? இதற்கு நான் தானே வரவேண்டியிருக்கிறது? எங்கே போனான் அந்தப் பையன்?” என்றெல்லாம் மனதிற்குள் பொருமிக்கொண்டேன். “ஓவரா பேசிக்கிட்டிருந்தாரு.. இப்போ என் கைய புடிச்சிக்கிட்டு நடக்குற மாதிரி தெய்வமே கொண்டுவந்து விட்டுடிச்சு பாரு” என்று அற்பத்தனமாக எண்ணவும் செய்தேன். ஆனால் அவரோ அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரிடமும் என்னை “என்னுடைய பேரன். டென்த்தில் நானூத்திருபத்திரெண்டு மார்க் வாங்கிருக்கான்” என்று மிகவும் பெருமையுடன் சொல்லி அறிமுகப்படுத்தினார். அவர்களில் பெரும்பாலானோரை எனக்குத் தெரிந்திருக்கக்கூட இல்லை. ஏன் இப்படி எல்லோரிடமும் சென்று சொல்கிறார் என்று குழப்பத்துடனும் எரிச்சலுடனும் இருந்தேன். அது என் மீதான அவருடைய அன்பு என்பதுகூட எனக்குத் தோன்றவில்லை. “நல்ல மார்க் எடுத்தா தானா எல்லாரும் மதிக்கிறாங்க பாரு” என்று (வழக்கம்போல) அசட்டுத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

🙂

அந்நேரத்தில் அவர் எண்பது வயதை எட்டியிருந்தார். அதனால் வந்திருந்த நெகிழ்ச்சியா என்று தெரியவில்லை. ஆனால் அதன்பின்னர் என்னை எப்போதும் கடிந்துகூட பேசியதில்லை. படிப்பு மட்டும்தான் அவர் என்னிடம் கண்ட குறை போல. அந்நிகழ்ச்சிக்குப் பின்னர் வருடம் ஒருமுறை மட்டும்தான் அவரை சந்திக்க முடிந்தது. ஆனால் எப்போதும் மிகப் பிரியமாக என்னிடம் நடந்துகொண்டார். அவ்வப்போது ஏதாவது கேள்வி கேட்பார். அவர் திட்டுவாரோ என்று எண்ணித் தயங்கி நான் சொல்லும் பதில்களுக்கு சிரித்துவிட்டு விட்டுவிடுவார். பின்னர் எனது இருபதாம் வயதில், சென்னையில் வேலை தேடும் பொருட்டு, சில நாட்கள் என் இரண்டாவது மாமா வீட்டில் தங்கியிருந்தேன். என் அறிவுத் திறமையைப் பார்த்து என் மாமா வியந்திருந்த நேரம். ஆனால் இம்முறை அவர் என்னைக் கடிந்துகொள்ளும்போதெல்லாம் ஒரு சங்கடச் சிரிப்புடன் தாத்தா எனக்கு மறைமுகமாக ஆதரவளிப்பார். ஒருமுறை எரிச்சலான என் மாமா “ஓ! உங்க பேரன் மேல உங்களுக்கு அவ்வளோ பிரியமா? ரொம்ப சரி” என்று சொன்னார். எனக்கு ஆச்சரியமாகப் போனது. அதுவரைக்கும்கூட என் தாத்தாவைப் பற்றி ஒரு எதிர்மறையான பிம்பத்துடனேதான் இருந்தேன். பிறகுதான் அவரிடம் இருந்த அவ்வித்தியாசத்தை உணரமுடிந்தது. அடுத்த இருவருடங்களிலேயே முதுமை எய்தி மறைந்தார். அப்போது அவருக்கு 88 வயது. மறைவதற்கு கடைசி சில நாட்கள் வரைக்கும் தன் துணிகளைத் தன்னாலேயே அவரால் துவைத்துக் கொள்ள முடிந்தது. மெதுவாக ஆனால் தனது எல்லா வேலைகளையும் தானே பார்த்துக்கொண்டுவிடுவார். அவர் மறைவிற்கு என்னால் செல்ல முடியவில்லை. அதன்பின்னர் பலவருடங்கள் கழித்து வந்த ஒரு பேச்சில் எனது தந்தை “அவர் நிறைய பேருக்கு நிறைய உதவிகளைச் செய்திருக்கிறார். உதவி என்று கேட்டு வரவேண்டும் என்பதில்லை. இவராகவே அவர்களுக்கு இப்போது உதவிகள் தேவைப்படும் என்று எண்ணி பலருக்கு உதவியிருக்கிறார். அது ஒரு சமூகத் தொண்டு போல. அவ்வாறு நாமும் செய்யவேண்டும்” என்றார். சமூகத்திற்கு சேவை செய்வதென்றால் எனக்கு அப்போது பிரபலமாக இருந்த சமூக நல ஆர்வலர்களின் பெயர்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் என் குடும்பத்திலேயே அவ்வாறு ஒருவர் இருந்திருக்கிறார் என்பது தெரியவந்தபோது என் ஆணவத்தை நினைத்து மிகவும் வெட்கப்பட்டேன். என் பெற்றோருமே பலருக்கு உதவியிருக்கிறார்கள். ஆனாலும் அவர்களே பார்த்து வியக்கும் மனிதர் என் தாத்தா. நேற்றுகூட அந்த முகநூல் குறிப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது என் தாய், அவரால் உதவிபெற்ற என் தலைமுறை உறவினர்களைப் பற்றிய ஒரு பெரிய பட்டியலைச் சொன்னார். என் தந்தை வழி உறவினரும் அதில் அடக்கம். அவ்வுறவினர்கள் என் தாத்தவைப் பற்றிப் பேசும்போது அவர்களின் கண்களில் தெரியும் அன்பை நினைத்துப் பார்க்கிறேன்.

என் தாத்தா மறைந்த சில வருடங்களுக்குப் பிறகு நடந்தது இச்சம்பவம். என் அக்கா மகன் கைக்குழந்தையாக இருந்தபோது ஒருமுறை அவனைக் கொஞ்சிக் கொண்டிருந்தேன். அவன் அப்போது என்மீது சிறுநீர் கழித்துவிட்டான். சற்று அருவருப்புடன் அதை என் தாயிடம் சொல்லிவிட்டு சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். என் தாயோ “ஏண்டா அது குழந்தைதானே? எதுக்கு அப்படி அருவருப்பா மூஞ்சிய வச்சுக்கிட்டு சொல்லுற?” என்றார். விவாதத்தில் மடக்குவதாக நினைத்துக்கொண்டு “குழந்தைன்னா? அதுக்காக இதெல்லாம் சகிச்சுக்க முடியுமா? சுத்தம்னு ஒண்ணு வேணும்னு நீங்கதானே சொல்லுவீங்க?” என்றேன். என் தாய் உடனே “நீ சிறு குழந்தையாக இருக்கும்போது மல்லாக்கப் படுத்துக்கொண்டு வட்டமாகத்தான் சிறுநீரை வெளியேற்றுவாய். சுற்றியுள்ளோர் மேலெல்லாம் பட்டுவிடும். ஒருமுறை தாத்தா உணவுண்டு கொண்டிருந்தபோது அவர் தட்டினுள்ளும் தெளித்துவிட்டது! நாங்களெல்லாம் பதற, அவரோ ‘குழந்தைதானே? விடு!’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உண்ண ஆரம்பித்துவிட்டார்” என்றார். ஆசிரியர் பணியில் இருந்தவர். எல்லோருக்கும் ஏதாவதொன்றை போதித்தே பழக்கப்பட்டிருப்பார். “அன்பு என்றால் என்ன?” என்பதை என்றும் மறக்காவண்ணம் எனக்கு போதிக்கவேண்டும் என்று விரும்பியிருப்பார் போல.