சென்னை புத்தகத் திருவிழா 2017

நேற்று சென்னை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தோம். குழந்தைகளுக்கு சில புத்தகங்களையும், கவிஞர் சச்சினின் “ஷெர்லாக் ஹோம்ஸ் ஜேம்ஸ்பாண்டாகிறார்” கவிதைத் தொகுப்பையும்,  என்.சொக்கனின் “நல்ல தமிழில் எழுதுவோம்” புத்தகத்தையும், விவேகனந்தரின் “சகோதர சகோதரிகளே” (ஞானதீபம் 11 சுடர்களின் திரட்டு) புத்தகத்தையும் வாங்கி வந்தேன். 

சொக்கனின் புத்தகத்தை ஒருவருக்கு பரிசளிக்கும் நோக்கில் வாங்கியுள்ளேன். அதை அளிக்கும்முன் விரைவாக படித்துவிடவேண்டும்.

உண்மையில் சச்சினினுடைய புத்தகத்தின் பதிப்பகப் பெயரை மறந்துவிட்டிருந்தேன். தூயனின் புத்தகத்தைத் தேடிப்போன இடத்தில் கிடைத்தது. நான் வாங்கியிருக்கும் முதல் கவிதைத் தொகுப்பு. ஆர்வத்துடனும் ஒருவித குறுகுறுப்புணர்வுடனும் இருக்கிறேன். 

தூயனும் சச்சினும் என் ஊர்க்காரர்கள். புதுக்கோட்டையை விட்டுவந்து பதினான்கு வருடங்களாகிவிட்டதால் நியாயமாக என்னைத்தான் அவர்களூர்க்காரன் என்று சொல்லவேண்டும். ஜெயமோகன் அவர்களின் வாசகர் சந்திப்பின்வழி அறிமுகமானோம். டிஸ்கவரி புக் பேலஸின் கண்காட்சிக்கடைக்கு சென்றபோது, அங்குள்ளோரிடம் கேட்காமல் நானே தூயனின் இருமுனை புத்தகத்தைத் தேடி எடுக்கவேண்டும் என்று கடை முழுக்க அலசினேன். மற்ற புத்தகங்களுக்கு நடுவில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அப்புத்தகத்தை எடுப்பதை கற்பனையில் நிகழ்த்தியிருந்தேன்.  துரதிருஷ்டவசமாக  அப்புத்தகம் கண்காட்சிக்கடையில் கிடைக்கவில்லை. ஆனால் நான் கற்பனை செய்து வைத்திருந்த காட்சியைப்போல வீற்றிருந்த சச்சினின் புத்தகத்தைக் கிடைக்கப்பெற்றேன். கடைக்கு வந்தால் கிடைக்கும் என்றார்கள். இப்போது அங்கு சென்று அப்புத்தகத்தை எடுக்கும் கற்பனையில் ஈடுபட்டிருக்கிறேன். இவ்வாரத்தில் எப்படியும் வேட்டையாடிவிடவேண்டும்.

ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு செம்பதிப்பு வரிசையில் வெய்யோனை மட்டும் தவறவிட்டிருந்தேன். நேற்று கிட்டத்தட்ட வாங்கப்போய் பின்னர் ஒத்திப்போட்டு வந்தேன். 

ஒவ்வொரு புத்தகக் கண்காட்சியிலும் வருடிப்பார்த்துவிட்டு மட்டும் வரும் புத்தகங்கள் என பல எனக்குண்டு. ஆரோக்கிய நிவேதனம், பருவம், அமர்சித்திர கதாவின் மஹாபாரதம் உள்ளிட்ட நூல்கள், உவேசாவின் என் சரித்திரம் இப்படி. இம்முறையும் அவ்வாறே எடுத்துப் பார்த்துவிட்டு பெருமூச்சுவிட்டு வைத்துவிட்டு வந்தேன். ஒருநாள் இல்ல ஒருநாள் வாங்காமயா போயிடுவோம்?