சாலை விபத்துகளை தடுப்பது எப்படி? சில எண்ணங்கள்

பின்வரும் கட்டுரை சில மாதங்கள் முன்பு திரு என்.முருகன் (ஐ.ஏ.எஸ் ஓய்வு) அவர்களால் துக்ளக்கில் எழுதப்பட்டது. அது குறித்து சில எண்ணங்களை துக்ளக்கிற்கு நான் எழுதி அனுப்பினேன். ஆனால் அவர்கள் பிரசுரிக்கவில்லை

பின்வரும் இணைப்பில் திரு. முருகன் அவர்களின் கட்டுரையை இலவசமாக படிக்கலாம்.

http://thuglak.com/thuglak/main.php?x=archive/22_07_2015/murugan_22_07_2015.php

அதுகுறித்த என் எண்ணங்கள் பின்வருமாறு.

திரு. முருகன் அவர்களின் கட்டுரையில் உள்ள பெரும்பாலான விஷயங்களுடன் நானும் உடன்படுகிறேன். அவர் தன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அதிகாலை பயண அனுபவங்களை நானும் பெற்றுள்ளேன். ஆட்டோக்களின் பின்புறமோ, (மாநகர) பேருந்துகளின் முன்புறமோ பயணிப்பதில்லை என்பதை விதியாகவே பின்பற்றிவருகிறேன். நடைபயணிகளைப் பற்றிய அவரது எண்ணங்களுடன் மட்டும் சிறிது முரண்படுகிறேன். சாலைகளில் நடப்போர் என்ன மாதிரியான பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள் என்று பார்க்கலாம். 

தனி நடைபாதை 
சென்னையில் பெரும்பாலும் நடப்போருக்கான தனி நடைபாதைகள் எங்குமே ஒழுங்காக இருப்பதில்லை. தமிழகத்தின் மற்ற நகரங்களிலோ கேட்கவே வேண்டாம். அரசே மின்மாற்றிகள், மின் கம்பங்கள் என்று பல்வேறு விஷயங்களை அமைப்பதற்கு இருக்கும் தனி நடைபாதைகளை பயன்படுத்திக்கொள்கிறது. நடைபாதை வியாபாரிகள் விட்டுத்தள்ளுங்கள். சாலையோரத்தில் உள்ள கடைகளே நடைபாதையை பாதியோ அல்லது முழுமையாகவோ ஆக்கிரமித்து தங்கள் பொருட்களை அடுக்கிவைத்து விடுகின்றன. பெரிய கடைகளும் அவற்றின் முன்னுள்ள நடைபாதையை வாடிக்கையாளரின் கார் பார்க்கிங் உள்ளிட்ட தேவைகளுக்கு ஆக்கிரமித்து விடுகின்றன. இந்த நிலையில் நடப்பவர்கள், தெருவில் இறங்கும் சூழ்நிலையே ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இன்னமும் மோசம். தெருவின் ஓரங்கள் நீரால் நிறைந்திருக்க, மக்கள் துணிந்து சாலையின் நடுப்பகுதி வரை சமயங்களில் வந்து நடந்து செல்லவேண்டியிருக்கிறது. 

தனி ஸிக்னல்கள்
இவையும் பெரும்பாலும் இருப்பதில்லை அல்லது வேலை செய்வதில்லை அல்லது வாகன ஓட்டிகளால் மதிக்கப்படுவதில்லை. சாலையின் ஒரு சந்திப்பில் இடப்புறமாக திரும்ப விழையும் வாகன ஓட்டிகள் எல்லா இடப்புற திருப்பங்களும் free left என்ற நினைப்பிலேயே ஓட்டி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சாலையை கடந்து கொண்டிருப்போர் எளிதாக ஆபத்திற்குள்ளாகின்றனர். சாலையை குறுக்காக கடப்போருக்காக காத்து நிற்பதற்கும் எவருக்கும் பொறுமையில்லை. இவ்வளவு வேகமாக செல்பவர்கள் போய் என்ன இந்தியாவை முன்னேற்றும் காரியங்களிலா ஈடுபடப்போகிறார்கள்? அலுவலகத்திற்கு சென்று அரட்டை அடிப்பார்கள் அல்லது வீட்டிற்கு சென்று டிவி பார்க்கப்போகிறார்கள். இதற்கு எதற்கு இத்தனை வேகம்? 

ஸீப்ரா க்ராஸிங்
மக்கள் சாலையை கடக்க குறிக்கப்பட்டிருக்கும் இந்த ஸீப்ரா க்ராஸிங் கோடுகளுக்கும் ஸிக்னல்களின் நிலைமையே. இருப்பதில்லை, அல்லது பாதி அழிந்திருக்கும் அல்லது வாகன ஓட்டிகளுக்கு இவற்றைப்பற்றி எந்த கவலையுமில்லை. ஸிக்னல்களில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்கு, நிறுத்தக்கோட்டை தாண்டி, இந்த ஸீப்ரா க்ராஸிங் கோட்டையும் தாண்டி நிறுத்துவதை குறித்து எந்த நினைப்பும் இல்லை. நிறுத்தக்கோட்டிற்கு முன்னமே வண்டியை நிறுத்தியதற்கு பலமுறை பலரால் நான் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறேன். சமீபத்தில்கூட ஒரு கார் ஓட்டுநர் என்மேல் இடிக்கும் வகையில் பக்கவாட்டில் தன் காரை நிறுத்தி திட்டினார். போக்குவரத்து காவலர்களே, நெரிசலை சமாளிக்கும் பொருட்டு வாகனங்களை இந்த கோடுகளை தாண்டி வந்து நிற்கசொல்கின்றனர். 

இவ்வாறு இருக்கையில் சாலையை கடப்பவர்கள், நடந்து செல்பவர்கள் ஒழுங்கை கடைபிடிப்பார்கள் என்று எவ்வாறு எதிர்பார்ப்பது? திரு.முருகன் கூறியுள்ளது போலவே, வெளிநாடுகளில் இத்தகைய நிலைகள் இருப்பதில்லை என்பது மிகவும் உண்மை. மற்றுமொரு விஷயம், அங்குள்ள சாலைவிதிகள் நடப்போருக்கு சாதகமான வகையில் அமைந்திருப்பது. மேலும் வாகனம் ஓட்டுவோரும், சாலையில் நடந்து செல்பவரை மதித்து செல்வது. ஸிக்னல்களே இல்லாத சாலை சந்திப்புகள் அங்கே நிறையவே உண்டு. அந்த இடங்களில் ஸீப்ரா க்ராஸிங்கை நடந்து கடப்பவர்களுக்கு வாகனஓட்டிகள் தம் காரை நிறுத்தி பொறுமையாக காத்திருந்து (ஒரு புன்னகையுடன்) வழிவிடுவது மிகவும் சகஜம்! சாலையை கடப்போரும் புன்னகையுடன் அந்த வாகனஓட்டிக்கு கையசைத்து நன்றி தெரிவித்து செல்வதும் சகஜம்!! இத்தனைக்கும் கார்களில் செல்வோர் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் நாடுகள் அவை. 

ஆனால் நடந்து செல்வோர் அதிகமாக இருக்கும் நம்நாட்டில் பொதுவாக, வாகனங்களில் வருவோருக்கு நடந்து செல்பவர்கள் வழிவிடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படியோ வழக்கமாக இருக்கிறது. ஒருவேளை கார்களை நம்நாட்டில் முதலில் பயன்படுத்திய ஆங்கிலேயர்களையும் இந்திய செல்வந்தர்களையும் பார்த்து பயந்து வழிவிட்டு பழகியது நமது மரபணுக்களிலேயே படிந்துவிட்டதோ என்னவோ? அதே போல் காரில் ஏறியதும், தனக்கு அனைவரும் வழிவிட்டு செல்லவேண்டும் என்ற எண்ணமும் தானாகவே வந்துசேர்கிறது. திரு. முருகன் அவர்களின் அந்த காலை நேர அனுபவத்தில்கூட, சாலையை கடந்த அந்த பெரியவர் மற்றும் அவரின் குடும்பத்திற்கு காத்திருந்து வழிவிட்டு சென்றதற்கு 30 நொடிகளுக்கு மேல் ஆகியிருக்காது. ஆனால் அவரே பொறுமையின்றி அந்த காலை வேளையில் ஹாரனை உபயோகித்து அவர்களை அவசரப்படுத்தியதை பார்க்கும்போது, மற்ற பாமர மக்களை ஒன்றும் சொல்வதற்கில்லை. அந்த பெரியவருக்கோ அல்லது அவரின் குடும்பத்தில் யாருக்கேனுமோ நடப்பதில் சிரமமிருக்கலாம். அல்லது அக்காலை வேளையில் பார்வை சரியாக தெரியாமலிருக்கலாம். நமது மாநிலத்தின் தெருவிளக்குகளின் நிலமை நமக்கு தெரிந்ததுதானே? சாலையில் பச்சை விளக்கு எரிந்தவுடன், சாலையை இன்னமும் கடந்து கொண்டிருப்போரை ஹார்னை விடாமல் அடித்து விலகச்செய்பவருக்கும், ஒரு கால்நடையை சப்தமெழுப்பி விரட்டுவோருக்கும் பெரிய வித்தியாசத்தை காணமுடியாது. இத்தனைக்கும், அவ்வாறு கடப்போரில் பெண்கள், வயதானவர்கள், நடக்க சிரமப்படுபவர்கள் என அனைவரும் இருப்பதை நாம் காணமுடியும். ஆனால் அவர்களை நாம் பொருட்படுத்துவதில்லை. 

நகர எல்லைக்குள் high beam எனப்படும் உச்ச ஒளியளவில் வாகனத்தின் விளக்குகளை உபயோகிப்பது கூடாது. போக்குவரத்து விதிகளின்படி கூட இது தவறு என்று நினைக்கிறேன். இவ்வாறு இருக்க அதிகமாக ஒளியுமிழும் ஹாலஜன் விளக்குகளை பயன்படுத்துவோர் நாளுக்கு நாள் பெருகிவருகின்றனர். போக்குவரத்து காவலர்களும் இதை கண்டுகொள்வதில்லை. ஸிக்னல்களில் நிற்கும்போது விளக்குகளை அணைத்து வைப்பது நமக்கும் நல்லது. முன்னால் நிற்பவரின் கண்களையும் நாம் சோர்வடைய செய்யாமல் இருப்போம். ஆனால் பெரும்பாலோர் இதை செய்வதில்லை. தெரிவதேயில்லை என்பதுதான் உண்மை. 

அப்படியானால், சாலையை கடப்போர், அல்லது நடந்து செல்வோரிடம் தவறுகளே இல்லையா? நிச்சயம் இருக்கிறது. ஒரு இருபது பேர் சேர்ந்தால் எந்த ஸிக்னலையும் மீறி சாலையை கடந்துவிடலாம். ஜனநாயகத்தின் வலிமை! சாலை தடுப்புகளை அநாயசமாக தாண்டி செல்வதும் நடக்கும். திரைப்படங்களில் இதே காரியத்தை கதாநாயகன் செய்யும்போது எழுப்பப்படும் எழுச்சிமிகு பிண்ணனி இசையை மனதில் தானாகவே இசைத்துக்கொண்டால் தைரியமும், லாகவமும் தானாக வரப்போகிறது. ஃபேஸ்புக்கிலோ, ட்விட்டரிலோ, வாட்ஸாப்பிலோ சமுதாய புரட்சியை உண்டுபண்ணும்போது கால்கள் நடந்துகொண்டிருப்பதோ, சாலையை கடந்து கொண்டிருப்பதோ ஒன்றும் பெரியவிஷயமில்லையே? (பெரும்பாலும்) திருட்டுத்தனமாக பதிவுசெய்யப்பட்ட திரைப்பாடல்கள் காதில் ஒலித்துக்கொண்டிருக்கும்போதோ, அல்லது உற்ற தோழனோ, தோழியோ பேசிக்கொண்டிருக்கும்போதோ பின்வரும் வாகனங்கள் ஓசையெழுப்பியும் காத்திருப்பது நியாயம்தானே? 

இவற்றையெல்லாம்விட முக்கியமான விஷயம் இரவில் தெருவிளக்குகளில்லாத சாலையை கடப்போர். இம்மாதிரி சாலைகளில், இருபுறமும் வாகனங்கள் வரும்போது அவற்றின் ஒளி காரணமாக அவ்விரு வாகன ஓட்டிகளுக்கும் தான் தெரியமாட்டோம் என்பதை இவர்கள் அறிவதில்லை! வாகனஓட்டிகள் இவர்களை மிகவும் சமீபிக்கும்போதுதான் கவனிப்பது சாத்தியம். அதன் பிறகு ப்ரேக் பிடித்து மோதாமல் தவிர்த்து, தொடர்ந்து வரும் வாகனங்களிலிருந்து தன்னை காத்துக்கொள்வதெல்லாம் வாகனஓட்டிகளுக்கு பெரிய சாதனை. “நான்தான் கையை ஆட்டி எச்சரித்துக்கொண்டே வந்தேனே” என்ற வசனத்தை நடைபயணிகளிடம் கேட்டுப்பெறுவது கூடுதல் நகைச்சுவை. 

மொத்ததில் திரு.முருகன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மக்களின் சமூக குணாதிசயங்கள் மாறும்வரை இப்பிரச்சனைகள் தீரப்போவதில்லை. ஒருவரை ஒரே நாளில் அடுத்தடுத்து வெவ்வேறு வகையில் பயணிக்க வைத்து (நடப்பது, பேருந்தி செல்வது, இருசக்கர மற்றும் நாற்சக்கர வாகனங்களில் செல்வது) கவனித்து பார்த்தால், ஒவ்வொரு முறையிலும், மற்ற முறையை பயன்படுத்தும் பயணிகள் குறித்து கடுப்படிப்பதை நிச்சயம் காணலாம். “எப்படி போறான் பாரு” என்ற வாக்கியம் எல்லா நிலைகளிலும் எழுப்பப்படும். நானுமே சொல்லியிருக்கிறேன்!