குழந்தைகளுக்கான ஓட்ட நிகழ்ச்சி

டிசம்பர் ஒன்றாம் தேதி ஜெனிவாவில் நடந்த நாற்பத்தியிரண்டாவது Escalade Race என்றழைக்கப்படும் குறுகிய தூர ஓட்ட நிகழ்ச்சியில் ஹரிணியும் (எங்கள் 9 வயது மகள்) கலந்துகொண்டாள். சிறுவர்களும் பெரியவர்களும் ஓட வயதானவர்கள் நடக்க என ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டிருந்தன. சிறுவர்களில் சமவயதினர் ஒரே குழுவாக ஓடுமாறும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஹரிணி ஏறத்தாழ ஒன்றேமுக்கால் கிலோமீட்டர் தூரத்தை எந்தவித ஒய்வு இடைவேளைகளுமின்றி ஓடி முடித்தாள். முதல் பரிசு இரண்டாம் பரிசு என யாருக்கும் எதுவும் கிடையாது. ஓடி முடித்தவர்களுக்கு ஒரு சான்றிதழ் மட்டுமே. தவிர இந்நிகழ்ச்சியின் புரவரலர்கள் சில நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்காக கடந்த அக்டோபரிலிருந்தே ஹரிணியின் பள்ளியில் பயிற்சிகள் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஓடிப் பழகுவது மட்டுமின்றி அவ்வாறு தொடர்ச்சியாக ஓய்வெடுக்காமல் ஓடுவதற்கான உடற்பயிற்சிகளையும் கற்றுக் கொடுத்தார்கள். வாரம் ஒருநாள்தான் இப்பயிற்சி என்றாலும், பள்ளியில் விளையாடப்படும் மற்ற விளையாட்டுகள், உடற்பயிற்சிகள் இவை தவிர எங்கள் சொந்த அலைச்சல்கள் என கடந்த மூன்று மாதங்களாக நிறைய அலைந்து கொண்டிருந்தாள். பயிற்சி முடித்துவிட்டு வரும்போதும் மற்ற நேரங்களிலும் கால் வலிப்பதாக சொல்லிக் கொண்டே இருந்தாள். ஒரு நிலையில் பேசாமல் இதை விட்டுவிடலாமா என நாங்கள் யோசித்தோம். ஆனால் அவளிடம் கேட்டால், பரவாயில்லை ஓடிவிடுகிறேன், பார்த்துக்கலாம் என்று சொல்லிவிட்டதால் பயிற்சிகள் தொடர்ந்தது.

இந்நிலையில் அவளிடம் சில மாற்றங்களை கவனித்தோம். தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் பிரதான கதவு பெரியதாகவும், திறந்தபின் தானாக மூடிக்கொள்வதற்காக வலுவான சுருள்வில் பொருத்தப்பட்டதாகவும் இருக்கும். நாங்கள் வெளியில் செல்லும்போது அக்கதவை அவள் திறந்து, நாங்கள் வெளியேறும்வரை பிடித்துக் கொண்டிருக்க விரும்புவாள். முன்பெல்லாம் அதற்கு சற்று சிரமப்படுவாள். நாங்கள் வெளியே வர சற்று தாமதமானால், கதவை திறந்தே வைத்திருக்க கஷ்டப்படுவாள். இப்பயிற்சியையும் பள்ளியில் தரப்படும் மற்ற உடற்பயிற்சிகளையும் பெறப்பெற, ஒரே கையால் சடுதியில் அக்கதவைத் திறந்து ஒரு கால், ஒரு கையின் உதவியால் வலுவாக அதே சமயம் சிரமம் ஏதுமின்றி அதை பிடித்து வைத்துக் கொண்டு நாங்கள் வெளியேறும் வரை காத்திருக்க ஆரம்பித்தாள்.

மேலும் சில சமயங்களில் நாங்கள் பயணம் செய்யவேண்டிய டிராம் வண்டிகளை பிடிக்க ஓடவேண்டியிருக்கும். அந்த வேளைகளிலும் பெரும்பாலும்அவளேதான் ஓடிச் சென்று அவ்வண்டியின் கதவை மூடவிடாமல் பிடித்துக் கொள்வாள். ஆனால் சமீப காலங்களில் அதை எளிதாக செய்கிறாள். அவள் ஓடும் விதம் ஒரு சிட்டு பறப்பதுபோல எனக்கு தோன்றும். முன்பெல்லாம் அவள் ஓடுவதில் ஒரு தத்தக்கா பித்தக்காத்தனம் இருக்கும். அவள் உடல் எடையால் அவ்விதம் ஓடுகிறாள் என தோன்றும். இப்போது அதில் ஒரு ஒழுங்கு வந்திருக்கிறது. வெண்முரசின் மொழியில் சோனக புரவியாக இருந்தவள் யவன புரவியாக ஆகியிருக்கிறாள் 🙂

நிகழ்ச்சி நடந்த நாள் அன்று இங்கே நல்ல மழை. இந்தியாவை ஒப்பிட அது கனத்த தூறல் என்றுதான் சொல்லவேண்டும். போட்டுச் சென்ற காலணிகள் சேற்றில் அழுந்தி பாழ்பட, மீண்டும் வீட்டுக்கு வந்து இன்னொரு ஜோடி காலணிகளையும் மழையில் நனையாமல் இருக்க உடைகளையும் அணிந்து சென்றாள். போட்டி நடந்த இடம் வீட்டினருகில் என்பது ஒரு வசதியாகிவிட்டது. என்னதான் கனத்த ஆடைகள் அணிந்திருந்தாலும் ஓடுகையில் உள்ளங்கைகளும் விரல்களும் குளிர ஆரம்பித்துவிட்டிருக்கின்றன. இருப்பினும் சமாளித்து ஓடியிருக்கிறாள். போட்டியாளர்கள் ஓடுவதை இருமருங்கிலும் இருந்து பார்க்கலாம். அல்லது போட்டி தொடங்கும் இடத்தில் வைக்கப்பட்டுள்ள திரையில் பார்க்கலாம். போட்டி நடக்கும் பாதை நெடுக அங்கங்கே கிரேன் கேமராக்கள் வைத்து அவர்கள் ஓடுவதை நன்றாகவே ஒளிபரப்பினார்களாம் (உடல்நிலை சரியில்லாததால் நான் வீட்டிலேயே தங்கிவிட்டேன்). தொடர்ச்சியாக நிற்காமல் ஓடிமுடித்தேன் என எங்களிடம் சொன்னாள். பின்னர் அவர்கள் எடுத்த வீடியோவில் அங்கங்கே அவள் நடந்திருந்தது தெரிந்தது. கேட்டபோது “ஆமா குளிர்ல ஓடவே முடியல தெரியுமா? ஆனா நான் நிக்கவே இல்ல” என்றாள். 🙂

பொதுவாக மற்றவர்களைவிட நிறைய தூரத்தை ஓடியே கடந்திருக்கிறாள் என்பது தெரிந்தது. மேலும் பலரை முந்தியும் வந்தாள் என்பதும். எப்படியிருந்தாலும் ஒரு நிகழ்ச்சிக்காக சில மாதங்கள் முன்னரே பயிற்சியை ஆரம்பித்து எல்லா பயிற்சி வகுப்புகளிலும் கலந்துகொண்டு (ஒரேயொரு முறை எங்களால் அவள் கலந்துகொள்ளவில்லை), மழையென்றும் குளிரென்றும் பார்க்காமல் பங்குபெற்று ஓடிமுடித்தாள் என்பதே எங்களுக்கு நிறைவாக இருக்கிறது. அவளுக்கும். போனமுறை போட்டிக்கான புரவலர்கள் கலந்துகொண்டவர்கள் அனைவருக்கும் சிறிய வடிவத்தினாலான health watchகளை வழங்கினார்கள். இம்முறை அது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அவளிடம் இருந்தது. இம்முறை அவ்வாறு எதுவும் கொடுக்கவில்லை. இவளும் சரியென விட்டுவிட்டாள். அதற்காகவே அந்த watch ஒன்றை வாங்கி பரிசளிக்க வேண்டும் என எண்ணியிருக்கிறோம்.

நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் எடுத்த சில படங்கள் கீழே. அவள் பங்குபெற்ற காட்சிகளாக மெனக்கெட்டு தொகுத்து அவற்றை காணொளியாக்கி எங்களுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அனுப்பி வைத்தனர். அதை யூட்யூபில் ஏற்றி இணைப்பை இறுதிப் பகுதியில் கொடுத்திருக்கிறேன். மிக சிறிய உருவமாக தெரிவாள். இந்த படங்களில் உள்ள அவள் உடையை நினைவில் வைத்துக் கொண்டு அவ்வீடியோவை பார்த்தால் அவளை அடையாளம் கண்டுகொள்ளலாம்.

படங்கள் :


வீடியோ இணைப்பு :