செய்திதுறத்தல் – என் அனுபவங்கள்

இரண்டு வருடங்களுக்கு முன்பு 2018ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்தில் செய்திதுறத்தல் என்னும் பதிவு வந்தது (சரியாக இரண்டு வருடம் இரண்டு நாள் முன்பு). மலையாள பெண் பத்திரிக்கையாளர் ஒருவரின் மரணத்தையொட்டி “இனிமேல் செய்திகள் எவற்றையும் படிப்பதில்லை” என்ற முடிவை எடுத்தார். அதையொட்டி நானும் அந்த முடிவுக்கு வந்தேன். அவர் அந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்த மனநிலைகளை நானும் அச்சமயத்தில் கொண்டிருந்தேன். அந்த சமயத்தில், சமூக ஊடகங்கள் நம்மை எவ்வாறு மாற்றியமைக்கின்றன என்பது குறித்த சில கட்டுரைகளையும் படித்துவந்தேன். அதையொட்டி சில நாட்கள் கழித்து ஃபேஸ்புக்கில் இருந்த என் கணக்கை அழித்தேன் – கவனிக்கவும், முடக்கவில்லை, முழுவதுமாக அழித்துவிட்டேன். ஏற்கனவே டிவிட்டரில் அவ்வளவாக ஈடுபாட்டோடு இல்லாததால் அங்கு பிரச்சனையில்லை. எதற்கும் இருக்கட்டுமென அக்கணக்கையும் அழித்துவிட்டேன். அதற்கு முன்னரே கிட்டத்தட்ட நான்கு வருடங்களாகவே தொலைக்காட்சியை பெரும்பாலும் பார்ப்பதில்லை. செய்தித்தாள் படிக்கும் வழக்கமும் இல்லை என்பதால் செய்திகளிலிருந்து என்னால் எளிதாகவே முழுமையாக வெளிவர முடிந்தது.

ஐந்து மாதங்கள் எந்தவித செய்தியையும் தெரிந்துகொள்ளாமல் சுற்றினேன். யாரேனும் சமகாலச் செய்திகளையொட்டி உரையாட வந்தால் பெரும்பாலும் தவிர்த்துவிடுவேன். இதனால் பெரிதாக எதையும் இழந்துவிடவில்லை. ஒரேயொருமுறை கோவையிலிருந்து சென்னை வரும்போது ஒரு குறிப்பிட்ட ரயில் இரண்டு நாட்களாக தாமதமாக வந்து கொண்டிருந்ததால் அடுத்த நாள் அது ரத்தாகலாம் என்ற யூகச் செய்தியைத் தவிர. இதனால் எனது செயல்படும் வேகமும் நான் ஈடுபடும் செயல்களும் அதிகமாகும் என நானும் நினைத்தேன். அவ்வாறெல்லாம் எதுவும் நிகழவில்லை. ஆனாலும் கொந்தளிப்புகள் எதுவும் இன்றி, செயலின்மையில் ஆனால் மன அமைதியுடன் இருந்தேன். அவ்வருடத்தின் பிற்பகுதியில் வேலை காரணமாக ஒன்றிரண்டு வருடங்கள் தங்கும் பொருட்டு இந்தியாவிலிருந்து ஸ்விட்ஸர்லாந்துக்கு பயணமானேன். இங்கு வந்தபின் “சரி! வெளிநாட்டில் இருக்கிறோம், இந்தியா குறித்த செய்திகளை தெரிந்து கொள்ளாமல் இருக்கக்கூடாது. மேலும் நிறைய பொழுது மீந்திருக்கிறது. அதையும் போக்கவேண்டுமே” என நினைத்து கூகிள் செய்திகள் இணையதளத்தின் வழியே மீண்டும் செய்திகளை வந்தடைந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் அடிமைப் படுவதை உணர்ந்து, “செய்திகளை மேலோட்டமாக மட்டும் படிப்போம். மிகவும் தேவைப்பட்டால் மாத்திரம் உள்ளே சென்று முழுக்க படிக்கலாம்” என்ற முடிவுக்கு வந்தேன்.

இன்றுவரை இந்த பழக்கத்தை என்னால் தொடரமுடிகிறது. கொரோனா பற்றியெரியும் இப்பொழுதுகளிலும். ஜெயமோகன் அவர்கள் சொல்வதுபோல இந்த கால செய்திகள் நம்மை தொடர்ந்து கொந்தளிக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. எல்லா செய்திகளுக்கும் எதிர்வினையாற்றிக்கொண்டே இருக்கிறோம். இதற்கிடையில், ஃபேஸ்புக்கில் மட்டுமேயென சிலர் எழுதும் கருத்துக்களை அறிந்து கொள்ளவேண்டி, இன்னொரு மின்னஞ்சலில் கணக்கை சிலமாதங்கள் முன்பு மீண்டும் துவக்கினேன். ஆனால் இம்முறை யாருடைய நட்புவட்டத்திலும் இருக்கக்கூடாது, லைக், கமெண்ட் என எவ்வித எதிர்வினையையும் எந்த பதிவுக்கும் கொடுக்கக்கூடாது, படித்துவிட்டு வந்துவிடவேண்டும் என்ற விதியை எனக்கு நானே விதித்துக் கொண்டேன். இதையும் என்னால் தொடர்ந்து பின்பற்ற முடிகிறது என்றாலும், மீண்டும் அதே கொந்தளிப்பு பிரச்சனையை பார்க்கிறேன். எல்லாரும் எந்த வித்தியாசமுமின்றி கொந்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள். பத்து நாட்களுக்கு ஒருமுறை – சமயத்தில் அதற்குள்ளாகவே – கொந்தளிக்க வேண்டிய தலைப்புகள் மாறிவிடுகின்றன. அந்த டிரெண்டிங் தெரியாமல் யாரேனும் பழைய கொந்தளிப்புடன் எதையாவது எழுதினால் “அதெல்லாம் முடிஞ்சுபோச்சு, வாங்க அப்டேட் ஆகி இதுக்கு கொந்தளிங்க” என மற்றவர்கள் ஏளனமாக பதில் சொல்கிறார்கள். வசைகள், ஆபாச வசைகள், கூடுதல் ஆபாச வசைகள் என சென்றுகொண்டே இருக்கிறார்கள்.

இவற்றுக்கு நான் பதிலளிப்பதில்லை என்றாலும், இவற்றை படிப்பதே எனக்கெல்லாம் பிரச்சனையாகிவிடுகிறது. அந்த விஷயங்களைக் குறித்து வாட்ஸாப்பிலோ அல்லது மற்றவர்களிடமோ உரையாடும்போது ஒருவகை எரிச்சல் உணர்ச்சி அதிகமாகவதை காண்கிறேன். சிலமுறை கசப்பு வெளிப்பட்டு நட்புகளும் உறவுகளுமே கெடும் அளவுக்கு செல்கின்றன. சமயத்தில் அந்த விஷயத்தைப் பற்றி பேசாமல் வேறு எதையாவது யாரிடமாவது பேசும்போதுகூட அந்த கசப்பு வெளிப்படுகிறது. சாதாரண விஷயத்தையும் கோபமாக எதிர்கொள்கிறேன். நல்லவேளையாக இதுவரை பெரிய அளவில் எதுவும் சென்றுவிடவில்லை என்பது ஆறுதலான விஷயம். மேலும் தேவையற்ற செய்திகளை படிக்கும்போதும் இதே மனநிலையையும் மற்றவர்களின் தேவையின்றி கோபப்படும் சூழலும் உருவாவதை உணர்கிறேன். ஆகவே செய்திகளையும் ஃபேஸ்புக்கையும் தொடர்ந்து தள்ளியே வைக்கப்போகிறேன்.

இந்த கொரோனா காலத்தில் தினமும் ஒன்று என ஜெயமோகன் அவர்கள் அவரது தளத்தில் எழுதிவரும் சிறுகதைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். அவற்றில் சூழ்திரு என்னும் கதை எனக்குள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது. போன தலைமுறையில் ரசனையுடன் வாழ்ந்த மனிதர்களையும், அவர்கள் ரசிப்பவற்றையும் பற்றியது. அவர்களால் ரசிக்கப்படும் விஷயங்கள் மற்றும் மனிதர்களின் எண்ணிக்கையும், அவை சார்ந்த தளங்களின் எண்ணிக்கையும் எனக்கு பெரும் பிரமிப்பைக் கொடுத்தன. ரசிப்பதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன, நாம் ஏன் இப்படி நம் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோம் என்ற எண்ணம் வந்தது. இதை படித்தபின்னர் ஃபேஸ்புக் பக்கம் நானாக செல்வது முற்றிலுமாக நின்றுவிட்டது. யாரேனும் ஏதாவது இணைப்பை அனுப்பினால் செல்வது, இல்லையென்றால் அதைப் பற்றி நினைக்காமலேயெ இருந்துவிடுவது என்றிருக்கிறேன்.

மேலும் அந்தக் கதையில் விவரிக்கப்பட்டுள்ள அளவு பல்வேறு வகையான விஷயங்களையும் மனிதர்களையும் ரசிப்பதற்கான அந்த மனநிலை, ரசனை ஆகியவற்றை பெறுவதற்கும், யாரை எதை ரசிக்கலாம் என்று தேர்ந்தெடுப்பதற்கும் எவ்வளவு காலமும் முனைப்பும் தேவைப்பட்டிருக்கும் என்பதை நினைக்கும்போது திகைப்பை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து அந்த ரசனை மனநிலையிலேயே இருந்தால் மட்டுமே பலகாலத்துக்குப் பின்னர் ரசனை மட்டுமேயான ஒரு வாழ்க்கையைப் பெறுவோம். மாறாக இப்படி சகலத்துக்கும் கொந்தளித்துக் கொண்டிருந்தால் வயதாக வயதாக நமது உடல் ஆரோக்கியத்துக்கே தீங்காக முடியும் என நம்புகிறேன். எனது முப்பத்தைந்து வயதையொட்டியே, கோபப்பட்டு கத்தும்போதெல்லாம் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படுவதை உணர்ந்திருக்கிறேன். முதுமை மிகும் காலத்தில் இவ்வகை மனநிலைகள் பெரும் சுமையாகவே வந்தமையும். மேலும் அந்த நேரத்தில் சட்டென ஆரம்பித்து எல்லாவற்றையும் ரசித்துவிட முடியாது. இதை ஒரு தொடக்கமாகக் கொண்டு, என் ரசனையை இன்னமும் மேம்படுத்திக் கொண்டு செல்லவேண்டும் என உணர்கிறேன். ஒரு பழக்கம் நிரந்தரமானதாக மாற ஐந்து வருடங்கள் தேவைப்படும் என்று எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். மூன்று வருடங்கள் கழித்து பார்க்கவேண்டும்.

செய்திதுறத்தல் – https://www.jeyamohan.in/108786/#.XqpQ4JlS82w
சூழ்திரு – சிறுகதை – https://www.jeyamohan.in/130411/#.XqpdE5lS82w
ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக அழிக்க – https://www.facebook.com/help/224562897555674