லாசர் – சிறுகதையைப் பற்றி

இந்த நோயச்ச காலத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் “புனைவுக் களியாட்டாக” எழுதிய நூறு கதைகளில் அறுபத்தோராவது கதை “லாசர்”. அவரது வாசகர்களாக அறிமுகமாகி, நண்பர்களானவர்கள் பலரில் சிலர் சேர்ந்துகொண்டு வாரந்தோறும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு கதையை எடுத்துக்கொண்டு இணையம் வழியாக சந்தித்து விவாதித்தும் உரையாடியும் வருகிறோம். அவ்வகையில் நேற்று (28.11.2020 அன்று) இக்கதை பற்றி நான் பேசியதன் சற்று மாறுபட்ட வடிவம்.

லாசர் கதையில் அந்தக் குழந்தையின் இறப்பு என்பது லாசருக்கும் அவனுடைய பெற்றோருக்குமே இறப்பு என்றாகிறது. பைபிளில் லாசரை கிறிஸ்து இறப்பினின்று மீட்டு எழுப்பியதுபோன்று பாதிரியாரும் லாசரை இறுதியில் அந்த இறப்பை ஒத்த துன்பத்திலிருந்து மீட்டு எடுக்கிறார். ஒருவகையில் எசிலிக் கிழவியும் அதே வேலையை லாசரின் அம்மாவுக்கு செய்யமுயல்கிறாள். லாசரின் தந்தையின் நண்பர்களும் அவருக்கு பனையேறும் வேலையிலிருந்து பத்து நாட்கள் ஓய்வு கொடுத்து அவரை அத்துன்பத்திலிருந்து மீட்க உதவுகிறார்கள். ஒருவேளை அந்தத் துன்பத்தோடு பனையேறும் வேலையை அவர் செய்தால், துன்பத்திலிருந்து வெளிவராத நிலையில் அவர் மரணத்தைக்கூட தேர்ந்தெடுத்திருக்கக்கூடும்.

பாதிரியார் ராபர்ட் கால்டுவெல் ஒரு மிஷனரியாக கிறிஸ்துவ மதத்தைப் பரப்ப வந்தவர் எனினும், அச்சிறுவனின் துயரத்தை ஜெபக்கூடத்தில் கண்டு, அவன் பின்னர் கொண்டுவந்து கொடுக்கும் கடிகாரத்தை ஒரு சாக்காக வைத்து அவனை துன்பத்திலிருந்து முழுமையாக மீட்டெடுக்கிறார். இல்லையில்லை, அவர் அதை சாக்காக வைத்து தன் மதத்தைப் பரப்பும் வேலையைத்தான் செய்தார்! என்று வைத்துக் கொண்டாலும், அதன் விளைவாக லாசர் அந்தப் பெரும் துன்பத்திலிருந்து வெளியே வருகிறான் என்பதே ஆறுதலாக இருக்கிறது.

ஜான்சன் கதாபாத்திரம் உலகியல் ரீதியாக அனைத்தையும் அணுகும் ஒரு மலினமான மனம் கொண்டதாக வருகிறது. அவனைப் போன்றோர் எங்கும் இருப்பர். நம் மனதிலேயே லாசரும் ஜான்சனும் வேறுவேறு சமயங்களில் தோன்றுவதுமுண்டு. எவ்வித பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளார். ஆனால் அனைத்து விஷயங்களையும் அறிவர். பிறரை தன் ஆளுகைக்குள் வைத்துக் கொள்ள முயல்வர். கூடுதலாக விஷயங்களைத் தெரிந்துகொள்ள காதுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பர். தன் காரியத்திலேயே கண்ணாக இருப்பர். ஆனால் அவர்களால் ஒருபோதும் கடவுளை உணரவும் முடியாது, பாதிரியாரைப் போல மற்றவர்களின் துன்பத்திற்காக இரங்கி, அவர்களுக்காக எழுந்து உடன் நின்று தேற்றவும் முடியாது. ஜெபம் செய்யும்போதும் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டுதான் இருக்க முடியும்.

லாசரின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அந்த வெகுளியான மனத்தையும், ஜான்சன் போன்றோரிடம் எப்போதும் கொள்ளும் பணிவையும் நம் வாழ்க்கையிலும் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் செய்திருப்போம், உணர்ந்திருப்போம். தன் தங்கையின் மீதான அவன் பாசமும் தங்கையைப் போன்றே அந்த ‘விஷவண்டிடமும்’ கொள்ளும் இரக்கமும் அன்பும் மிக அழகாக சொல்லப்பட்டிருந்தன. அவனுடைய பாத்திரப்படைப்பின் உச்சமாக, பாதிரியாரிடம் நேரடியாகச் சென்று தான் செய்ததை உரைக்கும் துணிவு எனக்கு மிகவும் உவப்பாக இருந்தது. அந்தத் துணிவை கைக்கொள்வதற்கு அசாத்திய நேர்மை இருக்கவேண்டும். தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பதைப் பற்றி காந்தி “வேறு எந்தத் தகுதியையும் விட, வேட்பாளர் நேர்மை மிக்கவராக இருக்கவேண்டும். அது ஒன்றே போதும்” என்பதுபோல சொன்னதாக படித்திருக்கிறேன். அது உண்மைதான் எனத் தோன்றுகிறது. கள்ளமில்லாத நேர்மையை ஒருவர் கைக்கொள்ளும்போது துணிச்சல் உட்பட தேவையான அனைத்தும் அவருக்கு தானே வந்துசேர்கிறது.

பைபிளை நான் (இன்னமும்) முழுமையாகப் படித்தவனல்ல. என் ஏழாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்புவரை ஒரு கிறிஸ்தவப் பள்ளியில் படித்தவகையில் அதைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன். எப்போதும் சாலைகளில் செல்லும்போது கண்ணில் தென்படும் பைபிளின் வரிகளை தவறாமல் படித்து மனதில் அசைபோட்டுக்கொண்டிருப்பது எனக்கு மிகவும் விருப்பமானது. இந்தக் கதையில் வரும் லாசரை உயிர்ப்பித்தல் என்னும் சம்பவத்தை அறிந்துகொள்ள இணையத்தில் தேடி படித்தேன். நான் ஊகித்திருந்தபடி இண்டர்ஸ்டெல்லார் படத்தில் வரும் லாஸரஸ் மிஷன் இதை ஒட்டியே பெயரிட்டிருந்தனர் என அறிந்தேன். லாசரின் மீதான கிறிஸ்துவின் அன்பும், அவருக்காக பிதாவிடம் வேண்டிக்கொள்வதும் உருக்கமாக இருந்தன. மேலும் இந்தக் கதையை படிக்கும்போது, பைபிளின் சில வரிகள் நினைவுக்கு வந்தன. அவை குறித்துத் தேடியபோது, அவை கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தில் வரும் வரிகள் என்பதைக் கண்டேன்.

இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர்.
துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.
தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர்.

லாசர் கடவுளைக் கண்டதும், அந்த பாதிரியாரைப் போன்றோர் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவதும் இயல்பானதுதான்.


இணைப்புகள்

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் புனைவுக் களியாட்டு கதைகளின் தொகுப்பு – https://www.jeyamohan.in/134072/

லாசர் சிறுகதை – https://www.jeyamohan.in/129455/