சைக்கிள் புராணம்

சமீபத்தில் பத்ரி சேஷாத்ரி எழுதிய சைக்கிள் க்ரானிக்கிள்ஸ் பதிவைத் தொடர்ந்து, நாமும் நமது சைக்கிள் புராணத்தை அளக்கலாமே என்று தோன்றியது. வழக்கம்போல் சோம்பல் காரணமாக இதோ அதோவென்று தள்ளிப்போட்டுக்கொண்டு வந்ததை இன்று எழுதுகிறேன். 

நான் சைக்கிள் வாங்க காரணமாக இருந்தது இரு விஷயங்கள். ஒன்று, பணி நிமித்தமாக ஜெர்மனியில் சிலகாலம் இருந்தபோது, அங்கிருப்பவர்கள் நிறையபேர் நிறைய விதங்களில் சைக்கிளை பயன்படுத்தியது. இரண்டு, நான் அந்த விஷயத்தை இங்கு வந்தபின் என் நண்பனொருவனிடம் சொல்லப்போக அவன் அதனால் உந்தப்பட்டு, ஒரு சைக்கிளும் வாங்கி பயன்படுத்த ஆரம்பித்துவிட்டான். சரிதான் சொன்ன நாம் சும்மாயிருக்கலாமா என்று 2013 ஃபிப்ரவரி வாக்கில் சைக்கிளொன்றை வாங்கினேன்.

ஹெர்குலிஸ் ஆடோம் (Hercules Atom) கியர் வைத்தது. அப்போது கியர் வைத்த வண்டிக்கும், கியர் இல்லாத வண்டிக்கும் ரூ.1000 மட்டுமே வித்தியாசமென்பதால் கியர் வைத்த வண்டியே வாங்கிவிட்டேன். ஆரம்பத்தில் ரொம்பவே கூச்சப்பட்டுக்கொண்டே ஓட்டுவேன். அலுவலகத்திற்கெல்லாம் கொண்டுசெல்லுமளவுக்கு தைரியமேயில்லை. பிறகு ஓட்ட ஓட்ட கூச்சம் குறைந்து அலுவலகத்திற்கும் கொண்டுவர ஆரம்பித்தேன். பத்ரி சொல்வதுபோல் வியர்வை வெள்ளத்துடன்தான்.

இதற்கு நடுவில் ஒரு தொலைதூர பயணம் செல்லலாம் என்று நானும், ஒரு நண்பரும் முடிவு செய்தோம். அவர் ஏற்கனெவே சைக்கிள் கிளப்பில் சேர்ந்து பல பயணங்கள் செய்திருந்தார். எனக்கோ ரொம்பவே தயக்கமாக இருந்தது. சிறுவயதில் கூட ஒரேயொருமுறை 40 கி.மீ ஓட்டியதே என் சாதனையாக இருந்தது. சமீப காலங்களில் சைக்கிள் ஓட்டியும் பழக்கமில்லை. மேலும் உடல் பெருத்து, கடுமையான முதுகுவலியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த காலமது. ஆனால் அந்த நண்பர் கொடுத்த உற்சாகம், நம்பிக்கை சொல்லி மாளாது. தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டேயிருந்தார். சரியென்று ஒரு நாள் கிளம்பியும் விட்டோம். அவரிடம் ”முடிந்தவரை ஓட்டுகிறேன். எல்லாவித ஏமாற்றத்திற்கும் தயாராக இருங்கள்” என்று முதலிலேயே தெளிவாக சொல்லிவிட்டேன். அவரும் ஒத்துக்கொண்டு வந்தார்.

காலை 4.30க்கு தொடங்கி போருரிலிருந்து, கிண்டி, மத்தியகைலாசம், வழியாக பழைய மஹாபலிபுரம் சாலையில் முடிந்தவரை செல்வது என்று திட்டம். எனக்கு மத்தியகைலாசம் வரை செல்வதே பெரிய விஷயமென்று எண்ணியிருந்தேன். ஆனால் ஆச்சரியப்படும் விதமாக, சோளிங்கநல்லூர் சென்று, அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலையை அடைந்து, மேலும் ரெட்டிக்குப்பம் வரை சென்றோம். அதன்பின் நிச்சயம் முடியாது என்று தோன்றவே அங்கு சிறிது ஓய்வெடுத்தோம். சில புகைப்படங்களும். பின்னர் அங்கிருந்து கிளம்பி சோளிங்கநல்லூர் வந்து பெரும்பாக்கம், மேடவாக்கம், சேலையூர் தாம்பரம் என்று நீண்டது. தாம்பரத்துடன் திரும்பி குன்றத்தூர் வழியாக போரூர் திரும்புவதாக திட்டம். சரி இவ்வளவு தூரம் வந்துவிட்டோம். புறவழிச்சாலை வழியாக செல்லலாமே என்று தோன்றவே, தாம்பரத்திலிருந்து புறவழிச்சாலையை அடைந்து, அங்கிருந்து பகல் 12 மணிக்கு போருர் வந்தடைந்தோம். ஏறத்தாழ 75 கி.மீ! காலை உணவு, மற்றும் ஓய்வு நேரங்களுடன் சேர்த்து 7 மணி நேர பயணம். என்னால் மட்டுமல்ல என்னை அறிந்தவர்களால்கூட இன்றுவரை இதை நம்பமுடியவில்லை. வெறும் ஊக்கம் மட்டுமில்லாமல், பொங்கல் சாப்பிடுங்க, நிறைய சக்தி கிடைக்கும் போன்ற அறிவுரைகளும், கடலைமிட்டாய் ஆகியவற்றை வழங்கி சக்தி கொடுத்தவருமான அந்த நண்பருக்கே இந்த சாதனை சென்று சேரும்!

அதற்கு முன்னரும் பின்னரும் நிறைய குறுகிய தூர பயணங்கள். போருரிலிருந்து கிண்டிவழியாக விமான நிலையம் சென்று, பின் பல்லாவரம், குன்றத்தூர் வழியாக போருரை வந்தடைந்தது குறிப்பிடத்தக்க ஒன்று. சென்றவாரம் போருரிலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிவரை சென்று வந்தேன். நன்றாகவே ஓட்டமுடிகிறது. பத்ரி எழுதியதில் சில விஷயங்களுக்கு பதில்கூறும் பொருட்டு எழுத ஆரம்பித்தேன். பதிவு நீளமாக செல்வதால் அடுத்த பாகத்தில் அதைப்பற்றி எழுதுகிறேன்.