விகடனின் பொறுப்பற்ற போக்கு!

சமீபத்தில் சென்னை வெள்ளத்தில் மூழ்கியபோது சென்னை, நந்தம்பாக்கத்திலிருந்து போருர் சிக்னல் செல்லும்வழியிலுள்ள டி.எல்.எஃப் தகவல் தொழில்நுட்ப பூங்கா வளாகத்தைப் பற்றி பின்வரும் செய்தியை “டி.எல்.எஃப். ஐ.டி.வளாகத்தில் என்ன நடக்கிறது? – மறைக்கப்படும் மர்மம்!” என்ற தலைப்பில் அதன் இணையதளத்தில் வெளியிட்டிருந்தது.
http://www.vikatan.com/news/tamilnadu/56139-what-happening-in-dlf-complex-hidden-mystery.art
கொஞ்சம் விஷயமறிந்தவர்களுக்கு கூட கடும் எரிச்சலைக் கிளப்பக்கூடிய வகையில் அந்தக் கட்டுரை எழுதப்பட்டிருந்தது.நான் அந்த வளாகத்தில் செயல்படும் ஒரு நிறுவனத்தில்தான் வேலை பார்த்து வருகிறேன். இந்தச் செய்திவெளியிடப்படுவதற்கு இரண்டு நாட்கள் முன்பு (டிசம்பர் 7ம் தேதியன்று) நான் அங்குச் சென்றிருந்தேன். அந்தச் செய்தியில்சொல்லியிருந்ததை விடக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. வளாகத்தின் நுழைவு வாயில்அடைக்கப்பட்டு, காவல் துறையினராலும், அங்கு வேலைபார்க்கும் பாதுகாவலர்களாலும் பாதுகாக்கப்பட்டிருந்தது. பழையபடங்களில் மூடப்பட்ட தொழிற்சாலை முன்பு வேலையாட்கள் காத்திருப்பதாக காட்டுவார்களே, அதுபோலஎன்னைப்போன்று பல பேர் அங்கு காத்துக்கொண்டிருந்தோம். புகைப்படங்களில் பார்த்திருக்கலாம். அங்கேஉள்ளேயிருக்கும் நிறுவனங்களின் நிர்வாகத்துறையை சேர்ந்த பணியாளர்கள் கையில் தங்கள் அலுவலகத்தின் பெயர்எழுதிய அட்டைகளை வைத்துக்கொண்டிருந்தனர். அந்தந்த நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் அவர்களிடம் தகவல்களைவிசாரித்து அறிந்து கொண்டிருந்தனர். எங்கள் அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் எங்கும் தென்படவில்லை என நானும் என்கூட வேலைபார்ப்பவரும் சலித்துக்கொண்டோம். ஒருவழியாக அவர் வந்து எங்களை ஐந்து அல்லது பத்து பேராக உள்ளேஅனுப்பினார்.
உள்ளே சென்று அவரைப்போன்றோரின் பணிகளை பார்த்தபோதுதான் நாங்கள் சலித்துக்கொண்டது முட்டாள்தனம் என்றுபுரிந்தது. கடுமையான பணிச்சுமை. மின்சார இணைப்பும், UPS இணைப்புகளும் முழுமையாகச் செயலிழந்திருந்தன. ஒருதகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு ஒருமுறை சென்றுவந்தவர்களுக்குக்கூட நான் சொல்லவருவது புரியும் என்றுநினைக்கிறேன். இம்மாதிரி நிறுவனங்களுக்கு (விகடனின் அலுவலத்திற்கும் இது பொருந்துமென்று தான் நினைக்கிறேன்), பாதுகாப்பிற்கு நிர்வாகத்துறை பணியாளர்களும், பாதுகாவலர்களுமே பொறுப்பு. உள்ளேயிருக்கும் ஒவ்வொருபொருட்களையும் இவர்களே பாதுகாக்கவேண்டும். சர்வர் இயந்திரங்களிலிருந்து, எங்களைப் போன்ற ஊழியர்கள்வை த்துவிட்டுச் செல்லும் தனிப்பட்ட பொருட்களும் இவர்கள் பாதுகாப்பிலேயே இருக்கிறது. மின்சாரத்தின்துணையோடுதான் இவர்களால் இவ்வளவு விலை மதிப்புள்ள பொருட்களை பாதுகாத்து வர முடிகிறது.
மின்சாரம் முழுவதும் தடைப்பட்டதால், சிசிடிவி காமிராக்கள், அக்சஸ் கண்ட்ரோல் உபகரணங்கள் என எவையுமே வேலைசெய்யவில்லை. இம்மாதிரி நிலையில் அவர்களால், எங்களைப் போன்ற ஊழியர்களையே நம்பமுடியாத சூழ்நிலை.ஆனால் நாங்களோ முன்கோபத்திற்குப் பெயர்போனவர்கள். ஏதாவது ஒரு சிறிய அவமதிப்பென்றாலும், இம்மாதிரிபணியாளர்களை எடுத்தெறிந்து பேச தயங்காதவர்கள். (நானே அம்மாதிரி சிலமுறை பேசியிருக்கிறேன்) ஆனால் இந்தச்சூழ்நிலையிலும் கூட எங்கள் நிறுவனத்தின் நிர்வாகத்துறை பணியாளர்கள் மற்றும் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மற்றும் வட இந்திய பாதுகாவலர்கள் நன்றாகவே பணியாற்றினார்கள் என்பதே என் அனுபவம். பொறுமையாக ஒவ்வொருவரிடமும் நிலைமையை ஓரளவு விளக்கி, தத்தமது பொருட்களை அலுவலகத்திலிருந்து எடுத்துக்கொண்டுசெல்ல உதவினர். லிஃப்ட் வேலை செய்யாத நிலையில், ஒரு பாதுகாவலர், என் போல உள்ளே வரும் ஊழியர்களைச் சிறுகுழுக்களாகப் பிரித்து, மாடிப்படி வழியாக அழைத்துச் சென்று பொருட்களை எடுத்துக்கொள்ள உதவினார். பலமுறை ஏறிஇறங்கியதால் நடக்கும்போது கூட மூச்சிறைத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தார். செல்ஃபோன்கள் வேலை செய்யாத நிலையில் வயர்லெஸ் வாக்கி டாக்கிகளை வைத்துக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க, நுழைவு வாயிலில் வந்து, ஏதாவது ஒரு பத்திரிக்கையின் அடையாள அட்டையைஅணிந்துகொண்டு (அல்லது அணியாமலே கூட) விலாவாரியாக கேட்கும் ஒவ்வொருவருக்கும் இந்தக் காவலர்கள் பதில்சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது… கொஞ்சம் மனிதத்தன்மையற்ற செயல் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.மொழி தெரிந்த நமக்கே இந்த மழை வெள்ளத்தில் பீதி கிளம்பி சுற்றிக்கொண்டிருந்தோம். ஆனால் மொழி தெரியாத அந்தஇளைஞர்கள், பீதியடையக் கூடாது என்று எதிர்பார்க்கிறோமா? இன்னொரு முக்கிய விஷயம். நான் சென்ற நேரத்தில் இந்தப் புகைப்படங்களில் காட்டும் அளவைவிடக் கூட்டம் நிறைய இருந்தது. வண்டிகளில் சென்றவர்கள் கூட நின்று பார்த்துவிட்டுச் சென்றனர். மேலும் நான் சென்று முதலில் விசாரித்தபோது கூட சாதாரண உடையிலும், அடையாள அட்டையைக்கூட காட்டாமலும் விசாரித்தேன் என்பதை இப்போது நினைவு கூர்கிறேன். உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்புதான் அடையாள அட்டையை அணிந்து கொண்டேன். நான் அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறேன் என்று அவர்களுக்குத் தோன்றுவதற்கு எந்தச் சாத்தியமுமில்லை. அப்போதுகூட, இம்மாதிரி வட இந்திய பாதுகாவலர்கள்பொறுமையாகத்தான் பதிலளித்தனர். யாரும் யாரையும் விரட்டவில்லை. இம்மாதிரி அவசர சூழ்நிலையில், அவ்வாறு விரட்டியிருந்தால் கூட தவறில்லை என்றுதான் நினைக்கிறேன். நாமெல்லாம் சுகமாகவே வாழ்ந்து பழகியிருப்பதால், இம்மாதிரி அவசர சூழ்நிலையில் எவ்வாறு நடந்து கொள்வது என்றுகூடத் தெரியவில்லை என்று நினைக்கிறேன்.
சுனாமி நேரத்து நிகழ்வுகளைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ஒரு கட்டுரையில், பாதிக்கப்பட்ட மக்கள்தங்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ளவில்லை என்று அரசு அதிகாரிகள் சலித்துக்கொண்டதாக எழுதியிருப்பார். அந்த வியாதி நமது பத்திரிகைக்காரர்களுக்கும் பரவிவிட்டதோ என்று தோன்றுகிறது. தான் எங்கு வேண்டுமென்றாலும் சென்றுஎன்ன வேண்டுமென்றாலும் கேட்பேன். ஆனால் மக்கள் சாகக்கிடந்தாலும், பதில் சொல்லிவிட்டுத்தான் சாகவேண்டும்என்று நினைப்பார்களோ என்னவோ?
இன்னொரு முக்கிய விஷயம். எனக்குத் தெரிந்த ஒருவர் சொன்னார். “வெள்ளமென்றால் அடித்து பீறிட்டுக்கொண்டுவரவில்லை. தண்ணீரின் மட்டம் ஏறிக்கொண்டே சென்றது. அவ்வளவுதான். அதுவும் கூட வெகுவேகமாக ஏறவில்லை.நிதானமாக ஆனால் கவலை தரக்கூடிய அளவில்தான் ஏறியது. தண்ணீரை அகற்ற ஆரம்பித்தபிறகு அடித்தளத்தில் சென்றுபார்த்தபோது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களோ, அல்லது சைக்கிள்களோ கூட ஒன்றின்மேல் ஒன்று ஏறி நிற்கவில்லை. வெறுமே தண்ணீரில் முழுக்க மூழ்கி மட்டுமே நின்று கொண்டிருந்தன. தண்ணீர் அடித்துக்கொண்டுவந்திருந்தால் இவையெல்லாம் தண்ணீரின் வேகத்தில் அடித்துச் சென்று விழுந்து கிடந்திருக்கும்.” என்றார். இவ்வாறு நிதானமாக வந்த தண்ணீரிலிருந்து தப்பிப்பது மிகவும் எளிது. ஆகவே உயிர்ச்சேதம் எதுவும் நடந்திருக்க வாய்ப்புகள் குறைவு என்றே நான் நினைக்கிறேன். அலட்சியமாக உள்ளேயே இருந்து, அல்லது எக்குத்தப்பாக மாட்டிக்கொண்டிருந்தால் மட்டுமே உயிர்ச்சேதம் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
இப்படியிருக்க, எந்தத் தகவலுமின்றி, ஊகத்தின் அடிப்படையில், உயிர்ச் சேதம் நடந்திருக்கலாம் என்று செய்தி பரப்புவது திமிர்த்தனம். சமீபத்தில் வெளியிட்டிருக்கும் இந்தச் செய்தியில் (http://www.vikatan.com/news/coverstory/56167-whats-happening-inside-dlf-it-park.art) டி.எல்.எஃபில் நடப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டுவருவதற்காகவே இதை வெளியிட்டோம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். ஆனால் நான் முதலில் கொடுத்திருக்கும் செய்தியை வாசித்துப்பாருங்கள். அவ்வாறு எந்த வார்த்தையோ எண்ணமுமே கூட அந்தச் செய்தியில் இல்லை என்பது தெளிவாகவே தெரியும். இப்படிக் கவலைப்பட்டு எழுதியிருப்பவர்கள், தங்களது விகடன் அலுவலகத்தில் என்ன நடந்தது என்று நான் சென்று விசாரித்தால் எப்படி நடந்து கொள்வார்கள்? அல்லது அம்மாதிரி ஒரு செய்தியையாவது வெளியிட்டிருக்கிறார்களா என்ன?
டி.எல்.எஃபை பொறுத்தவரையில், குறைகள் இருக்கின்றன. எல்லாக் கட்டிடங்களிலுமே குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைப் பட்டியலிடுங்கள். வேண்டாமென்று சொல்லவில்லை. மற்றபடி இம்மாதிரி ஒரு அவசர சூழலில்கூட எந்த ஆதாரமுமில்லாமல், பொறுப்பற்ற முறையில் செய்திகளை வெளியிடுவது எந்த மாதிரி பத்திரிக்கை தர்மம் என்று தெரியவில்லை.