சாப்பிடும் முறையில் கவனம் தேவை

சமீப காலமாக என் அம்மாவுக்கு, தாடை மற்றும் காதை ஒட்டிய பகுதியில் வலி இருந்து வருகிறது. ENT மருத்துவரிடம் ஆலோசித்தபோது, காதுகளில் பிரச்சனை இல்லை என்பது தெரிய வந்தது. பின் மேலும் சில ஆய்வுகளுக்குப் பிறகு, தாடையில் உள்ள எலும்புகளின் தேய்மானமே இதற்குக் காரணம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நாம் சாப்பிடும் முறையில் செய்யும் தவறுகளே இம்மாதிரியான தேய்மானங்களுக்குக் காரணமாக அமைவதாக அம்மருத்துவர் கூறினார். மேலும் என் அம்மாவிடம் அவர் உணவை உட்கொள்ளும் முறையைப் பற்றி கேட்டபோது வினோதமான ஒரு தகவலை சொன்னார். அதாவது என் அம்மா உணவை பற்களால் மெல்லும்போது ஒரு பக்கமாக மட்டும் (இடப்பக்கம்) கடித்து மெல்லுவாராம். தன்னுடைய சிறுவயதில் ஒருமுறை கடினமான ஒரு சீடையை வாயின் வலப்புறம் மூலம் கடிக்க முற்பட்டு, அதனால் ஏற்பட்ட வலி காரணமாக, சில காலம் தன்னுடைய இடப்புற பற்களால் மட்டுமே உண்ணுவதற்கு உபயோகித்து வந்திருக்கிறார். நாளடைவில் அதுவே பழக்கமாகியிருக்கிறது.

வலுக்கட்டாயமாக உணவை வலப்புறம் தள்ளினாலும், சில நொடிகளில் தானாகவே இடப்புறம் உள்ள பற்களாலேயே சாப்பிடும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஏற்பட்ட எலும்பு தேய்மானத்தால், வாயைத் திறக்கும் போது தாடை மற்றும் காதை ஒட்டிய எலும்புகளில் வலியாக உருவெடுத்திருக்கிறது. ”நல்லவேளையாக ஆரம்ப கட்டத்திலேயே வந்துவிட்டீர்கள். இந்தத் தேய்மானம் அதிகமாகும் பட்சத்தில் சிலருக்கு வாயைத் திறப்பதே கடினமாகிவிடும். பேச்சு, மற்றும் உணவு உட்கொள்ளுதல் மிகச் சிரமமான ஒன்றாக இருந்திருக்கும்” என்று மருத்துவர் கூறியுள்ளார்.

தற்போது, வலிநிவாரணிகள் மற்றும் சில மருந்துகளால் வலி குறைந்துள்ளது. உணவை சாப்பிடும்போது எச்சரிக்கையாக வாயின் இருபுறத்தையும் உபயோகித்து சாப்பிட்டால் நாளடைவில் இப்பிரச்சனை தீர்ந்து விடும் என்று மருத்துவர் ஆறுதலளித்துள்ளார்.

ஹ்ம்ம் சாப்பிடும் முறையிலும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் நானும், வாயின் இருபுறங்களும் உணவை சம அளவில் அரைக்கிறதா என்று கவனித்து உணவை உட்கொள்கிறேன். Smile

பொதுவாகவே ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் நம்முடைய பற்களை சோதனை செய்து கொள்ளவேண்டும் என்று சொல்வார்கள். குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது செல்லவேண்டும் என்று கருதுகிறேன். குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்த உடனேயே குழந்தை மருத்துவரிடம், regular checkupல் பற்களின் நிலை பற்றி கேட்டுக் கொள்ளுதலும் நலம். நல்ம்