ஸ்மார்ட்ஃபோன் எல்போ அல்லது ஆங்க்ரி பேர்ட்ஸ் எல்போ (Smartphone Elbow or Angry Birds Elbow)

2012ம் வருட இறுதியில் என் மனைவிக்கு முழங்கை மூட்டில் சிறிய அளவில் வலி வந்தது. அப்போது நாங்கள் ஜெர்மனியில் வசித்து வந்தோம். பனிக்காலம் ஆரம்பித்த நேரம். கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரித்துக் கொண்டே வரவே, அங்கிருந்த மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைக்கு சென்றோம். அவர் “இம்மாதிரி வலிகள் பொதுவாக இரண்டு காரணங்களால் வரலாம். ஒன்று, பனிக்காலத்தில் தசைகளின் இறுக்கம் காரணமாக. இரண்டு, அதிகமாக சிரமப்படுத்திக் கொள்வதால். மற்றபடி பயப்பட ஒன்றுமில்லை” என்று கூறினார். அவர் கூறிய மருந்துகளை எடுத்துக் கொண்டபோதும் வலி சரியாகவில்லை. பின் சில மாதங்களில் இந்தியாவுக்கு திரும்பிவிட்டோம். சரி வலி இதோடு விடும் என்று பார்த்தால் அதற்கான அறிகுறிகளே இல்லை.

இங்கு என் அம்மாவுக்கு மூட்டுவலிக்கு ஒரு மருத்துவரிடம் (அவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் பிரபலமானவர்) சென்றபோது, என் மனைவியின் கை வலிக்கும் ஆலோசனை கேட்டோம். அவர் “அம்மா… இந்த மாதிரி வலிகள் பெண்களுக்கு ரொம்பவே சாதாரணமாக வரும். கை மூட்டில் நீர் கோர்த்துக் கொள்வதால் இவ்வாறு வலி வரும். இதற்கு சில மாத்திரைகள் கொடுக்கலாம். மீறிப் போனால் மூட்டில் ஒரு ஊசி போடலாம். ஆனால் ஊசி போடுவதை நான் பரிந்துரைக்க மாட்டேன். ஏனென்றால் அதற்கு எளிதில் அடிமையாகி விடுவீர்கள். வீட்டு வேலைகளை மிகவும் குறைத்துக் கொண்டு நன்கு ஓய்வெடுங்கள். உங்கள் கணவரை நன்கு சம்பாதிக்க சொல்லி, வீட்டு வேலைக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள். இதுதான் நல்ல தீர்வு” என்றார். இருபதுகளில் இருக்கும் என் மனைவி எத்தனை நாளைக்கு இப்படி இருக்க முடியும்? வீட்டு வேலைகள் இல்லாவிட்டாலும் மற்ற வேலைகள் செய்ய வேண்டும்தானே? எனவே இது அவ்வளவு உசிதமான முடிவு இல்லை என்று விட்டுவிட்டோம். மருத்துவம் தொடர்ந்தது.

சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள அந்த பிரபலமான மூட்டு வலி சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனைக்கு சென்றோம். அங்கு உள்ள தலைமை மருத்துவர் என் மனைவியை பரிசோதித்து விட்டு ஒரு ரத்த பரிசோதனைக்கு சிபாரிசு செய்தார். அதற்கான கட்டணம் சுமார் ரூ.3000/- !!! சரிதான் என்று அதையும் எடுத்து கொடுத்தோம். அதைப் பார்த்த அந்த மருத்துவர் “இது ஒருவகையான வாதம். ஆரம்ப நிலைதான். பயப்பட வேண்டாம். மருந்துகளிலேயே குணப்படுத்தி விடலாம்” என்று நம்பிக்கையளித்தார். மருந்துகளும் எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார் என் மனைவி. வலி நன்றாகவே குணமடைந்தது. இடையில் சொந்த ஊருக்கு செல்ல நேர்ந்தபோது, சில வேளைகள் மாத்திரைகள் எடுத்துக் கொள்ளமுடியாத நிலை வந்தபோது, வலி திரும்பவும் வர ஆரம்பித்தது. என் மனைவி கொஞ்சம் அதிருப்தியடைந்தாள். “இந்த மருந்துகள் வெறும் வலி நிவாரணி போன்றே உள்ளது. 2 வேளைகள் எடுத்துக் கொள்ளவில்லையென்றாலும் வலி வருகிறது. எனவே இது சரிப்படாது” என்ற முடிவுக்கு வந்தார். (நுண்ணுயிரியல் படித்தவர் என்பதால் மருந்த் மாத்திரைகள் குறித்து நிறையவே அறிவுள்ளவர் என் மனைவி!)

பின் மேலும் விசாரித்ததில், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு ஹோமியோபதி மருத்துவர் இவ்வாறான மூட்டு வலிகளுக்கு நன்றாகவே மருத்துவம் பார்க்கிறார் என்று தெரியவந்தது. அவரிடம் சென்றபோது, அந்த 3000 ரூபாய் ரத்த பரிசோதனை அறிக்கையை பார்த்துவிட்டு “இது டென்னிஸ் எல்போ. டென்னிஸ் விளையாடுபவர்களுக்கு வரும். இவர் எதோ பளு நிறைந்த வேலைகளில் ஈடுபட்டதால் இது வந்திருக்கிறது என்று யூகிக்கிறேன். 45 நாட்கள் மருந்து சாப்பிட வேண்டும். வலி நிச்சயமாக நிற்கும்” என்று உறுதியளித்தார். அந்த ஹோமியோபதி மருந்தை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து வலி சுத்தமாக விட்டுவிட்டது. இப்போதெல்லாம் அரிதாகவே அந்த வலி வருகிறது.

இதற்கிடையில் என் மனைவி “ஸ்மார்ட்ஃபோனை தொடர்ந்து உபயோகித்தால் வலி வருகிறது” என்று கண்டுபிடித்தாள். 2012 இறுதியில்தான் ஸ்மார்ட்ஃபோனும் வாங்கியிருந்தோம். மேலும் என்னைக் காட்டிலும் என் மனைவிதான் அதிகமாக அதைப் பயன்படுத்தி வந்தாள். எனவேதான் எனக்கு வலி வரவில்லை போலும்.  பிடிவாதமாக சில நாட்கள் உபயோகிக்காமல் இருந்தபோது வலி சுத்தமாகவே இல்லாமல் இருந்தது. இது குறித்து இணையத்தில் தேடியபோது கிடைத்த தகவல்கள் ஆச்சரியமாக இருந்தன்.

  • ஸ்மார்ட்ஃபோன் உபயோகிப்பவர்கள் நிறைய பேர் இம்மாதிரி வலிகளால் பாதிக்கப் படுகிறார்கள்.
  • இவ்வலி ஏறத்தாழ டென்னிஸ் எல்போ வலியை ஒத்தது.
  • வெளிநாட்டு மருத்துவர்கள் இவ்வலியை “டென்னிஸ் எல்போ” என்று அழைப்பதை விட்டுவிட்டு, கிண்டலாக “ஸ்மார்ட்ஃபோன் எல்போ அல்லது ஆங்க்ரி பேர்ட்ஸ் எல்போ” என்றே அழைக்க ஆரம்பித்து விட்டனர்.

மேலும் மல்லாந்து படுத்துக் கொண்டு ஸ்மார்ட்ஃபோனை பயன்படுத்தும்போது இவ்வலியை அதிகமாக நாங்கள் உணருகிறோம் (ஆம். எனக்கும் இப்போதெல்லாம் இந்த வலி சிறிய அளவில் வருகிறது!!). மேஜையில் அல்லது சமதளமான இடத்தில் ஃபோனை வைத்து விட்டு பயன்படுத்தும்போது வலி ஏற்படுவதில்லை.

ஹ்ம்ம் நம் மருத்துவர்களை நினைத்தால் கோபமும் வருத்தமும் ஒரு சேர வருகின்றது. எங்களுடைய இந்த விஷயத்தில் (அந்த ஜெர்மனி மருத்துவரையும் சேர்த்து) மூன்று மருத்துவர்களுக்கு என்ன பிரச்சனை என்றே தெரியவில்லை. மேலும் தவறாகப் புரிந்து கொண்டு சிகிச்சையும் அளிக்கிறார்கள். அந்த ஹோமியோபதி மருத்துவர் நல்லவேளை சரியான சிகிச்சை கொடுத்தார், என்றாலும் சரியான காரணத்தை அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

என்னதான் இணையத்தில் வரும் தகவல்களை ஒன்றுக்கு பலமுறை சரிபார்க்க வேண்டும் என்றாலும், இந்த வகையிலான தகவல்களை நாம் நிச்சயம் நம் மருத்துவர்களிடமிருந்து பெறமுடியாது. அந்த வகையில் இணையத்திற்கு நாம் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

சில நாட்களுக்கு முன்பு சென்னை பல்லாவரத்திலிருந்து குரோம்பேட்டைக்கு செல்லும் வழியில் உள்ள அந்த பிரபலமான மருத்துவமனைக்கு சென்றபோது அங்கிருந்த ட்யூட்டி டாக்டர் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.  “இது ஒண்ணும் பெரிய பிரச்ச்னை இல்லை அம்மா. நீங்கள் வீட்டு வேலைகளை நிறைய குறைத்துக் கொள்ள வேண்டும். ஒரு ரத்தப் பரிசோதனைக்கு எழுதிக் கொடுக்கிறேன்……..