சிறிய அளவு ரத்த காயத்திலிருந்து மருந்தின்றி வெளிவருதல்

முந்தைய பகுதியின் தொடர்ச்சி

சென்ற பதினேழாம் தேதி (17/01/2016) அன்று என் காலில் ரத்த காயம் ஏற்பட்டதிலிருந்து ஒருவார காலமாக நான் அனுபவித்ததையும் கவனித்ததையும் சுருக்கமாக (!?) எழுதியிருக்கிறேன். பயன்படுகிறதா என்று பாருங்கள்.

17 ஜனவரி

எங்கள் வீட்டிலுள்ள ஒரு கனத்த மரக்கட்டிலை ஒரு படுக்கையறையிலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற முயன்றபோது, கட்டிலின் ஒரு பெரிய மரப்பகுதி கால் கட்டைவிரலில் கடும்வேகத்துடன் மோதியது. இடது கால் நகம் அதன் அடிப்பக்க சதையிலிருந்து பாதி பெயர்ந்து ஆனால் காலிலேயே தங்கிவிட்டது. நகம் உடையவுமில்லை. சுமார் பத்து நிமிடங்களுக்கு வலி கடுமையாக இருந்தது. பின்னர் ரத்தம் வர ஆரம்பித்தது. அதைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயம் வந்தது. அலோபதி டாக்டரிடம் சென்றுவிடலாமா என தோன்றியது. ஏற்கனவே சிறுவயதில் ஒருமுறை இதே காலில் அடிபட்டு நகம் பெயர்ந்து, சீழ் கட்டி அவதிப்பட்டது ஞாபகம் வந்தது. “சரியாகிவிடும், சரியாகிவிடும்” என மீண்டும் மீண்டும் உள்ளூர சொல்லிக்கொண்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டேன்.

சிறிது நேரத்தில் காயம் பட்ட இடத்தை சுற்றி ஒருவித கூச்சம் உருவாகிவிட்டிருந்தது. கட்டைவிரலருகில்  கையை வைக்கும்போது அந்த கூச்சத்தை உணர முடிந்தது. மேலும் உடலின் முன்னெச்சரிக்கை உணர்வும் அதிகரித்திருந்தது. காலின் அருகில் யாராவது வந்தாலோ அல்லது எந்தப் பொருளாவது சமீபித்தாலோ கண் தானாகவே காலை நோக்கி அனிச்சையாக பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுவைத்துக்கொண்டது. சற்று நேரத்தில் ரத்தம் உறைந்து வலியும் குறைந்தது. சும்மா இருந்திருக்கலாம். ஆனால் தொடர்ந்து கட்டிலை சரி செய்ய முனைந்ததால் அந்த அழுத்தத்தில் மறுபடியும் ரத்தம் வர ஆரம்பித்தது. சிறிது நேரத்தில் மறுபடியும் நின்றுவிட்டது. வலியும் அவ்வளவு இல்லை. உட்கார்ந்த நிலையிலேயே வேலையை தொடர்ந்தேன். பிறகு காலை ஒருமுறை குளிர்ந்த நீரில் கழுவினேன். வலி சுத்தமாக விட்டுவிட்டது. விரலைச்சுற்றி காய்ந்திருந்த ரத்தமும் நீங்கி விரல் சுத்தமாக ஆனது. துணியை வைத்து ஈரத்தையும் நன்றாக சுத்தம் செய்துகொண்டேன். ஆனால் கழுவியிருக்க வேண்டாமோ என பின்பு நினைத்துக்கொண்டேன். கழுவியதன் மூலம் ரத்தம் உறைபடுவதிலிருந்து தடுத்துவிட்டேன் என்று தோன்றியது. இரண்டு மணி நேரம் கழித்து, நீர்த்த ரத்தம் போல் ஒரு திரவம் காயத்திலிருந்து வழிய ஆரம்பித்தது. வெறும் வெள்ளைத்துணியை எடுத்து அந்த திரவத்தை அந்தத்துணி உறிஞ்சிக்கொள்ளும் வகையில் காயத்தை சுற்றி கட்டிக்கொண்டேன். வலி இல்லை. இரவு வரை கூட அந்த நீர்த்த ரத்தம்போன்ற திரவம் வழிந்து கொண்டிருந்தது.

18 ஜனவரி

காலையில் அந்த திரவம் வருவது நின்றுவிட்டிருந்தது. நகத்தின் கீழே, சதைக்குமேலே ரத்தம் உறைந்து ஒரு பிசின் போல இருந்தது. அழுத்தினால் மட்டும் கொஞ்சம் வலியிருந்தது. அழுத்தினால் அந்த நீர்த்த ரத்தம் போன்ற திரவம் கொஞ்சமாக வந்தது.  பின்னர் அலுவலகத்திற்கு சென்றேன். சோதனையாக இன்று நிறைய நடக்க வேண்டியதாயிற்று. கால் கட்டைவிரலைச் சுற்றி ஒரு வெள்ளைத்துணியை சுற்றி கட்டிக்கொண்டு மேலே சாக்ஸ் போட்டுக்கொண்டு செருப்பையும் அணிந்துகொண்டு சென்றிருந்தேன். செருப்பு சற்று விரலை அழுத்தியதால் வலிக்க ஆரம்பித்தது. இரவு வீடு திரும்பி கட்டை அவிழ்த்துப் பார்த்தபோது மறுபடியும் அந்த நீர்த்த திரவம் வழிந்து துணியை நனைத்து இருந்தது. கட்டைவிரலின் மேலெலும்பில் சற்று வலியிருந்தது. இரவு தூங்குவதில் பிரச்சனையில்லை.

19 ஜனவரி

இன்று சளித்தொல்லையும் கால் வலியும் இருந்ததால் பெரும்பாலும் உட்கார்ந்தபடியே சமாளித்தேன். கட்டைவிரலின் முகப்பு கீழ்நோக்கி இருக்குமாறு காலை தொங்கப்போட்டு அமர்ந்தாலோ படுத்திருந்தாலோ வலி இருந்தது.  மதியத்திற்கு மேல் காய்ச்சலடித்தது. போர்வையை போர்த்திக்கொண்டு அரைமணிநேரம் தூங்கினேன். வியர்வை வெள்ளத்துடன் எழுந்தேன். மாலையில் ஏங்கெல்ஸ் ராஜாவிடம் சிகிச்சைக்கு சென்றேன். அவர் காயத்தைப் பார்த்துவிட்டு “ஒன்றும் பிரச்சனையில்லை. தானே சரியாகிவிடும்” என்றார். நீர் வைத்து காலை சுத்தம்செய்யலாமா என கேட்டதற்கு “கால் அசுத்தமாக இருப்பதாக தோன்றினால் மட்டும் வெந்நீர் வைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள்” என்றார். மேலும் “காய்ச்சலும் வரலாம் ஆனால் அதை அப்படியே விட்டுவிடுங்கள். தானே சரியாகிவிடும்” என்றார். இருசக்கர வண்டியில் சென்றதாலும் போகும்போதும் வரும்போதும் போக்குவரத்து நெரிசல் இருந்ததாலும் கால்வலி சற்று இருந்துகொண்டேயிருந்தது. காய்ச்சல் நீங்கிவிட்டது. சளித்தொல்லையிலிருந்தும் நன்றாகவே விடுபட்டு இரவு நன்கு தூங்கினேன்.

20 ஜனவரி

இன்று காலை எழுந்தபோது முதுகு வலியும் கால் விரலில் வலியும் இருந்தன. இரவில் நன்றாக தூங்கியிருந்தாலும், இன்னமும் தூங்கவேண்டுமென தோன்றிக்கொண்டேயிருந்தது. காலையில் உணவு உண்டுவிட்டு இரண்டு மணி நேரம் நன்கு உறங்கினேன். பின்னர் இரவு பத்து மணிவரை வேலை இருந்துகொண்டேயிருந்தது. சிறு ஓய்வுகளைத் தவிர. ஒன்பது மணியளவில் இல்லாமலிருந்த கால்விரல் வலி மீண்டும் இப்போது நள்ளிரவில் வலிக்கிறது. நாளை அலுவலகம் சென்றுவிடுவேனென்று நினைக்கிறேன். இப்போது தூங்கிவிடுவேனென்றும் நினைக்கிறேன்.

21 ஜனவரி

இன்று வெறும் செருப்பு மட்டும் அணிந்து அலுவலகம் சென்றேன். மடிக்கணினி பையுடன் செல்லும்போது காலுக்கு சற்று சிரமமாக இருந்தது. மற்றபடி வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டது. இரவு வீட்டிற்கு வரும்போது வலி சுத்தமாக விட்டிருந்தது. ஆனால் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது கொஞ்சம் கொஞ்சமாக வலி மீண்டும் வந்தது. காலை தூக்கி வைத்து உட்கார்ந்தும் பயனில்லை. சாப்பிட்டுவிட்டு அமர்ந்திருந்தபோது, விரலில் உறைந்திருந்த ரத்த பொருக்கில் ஒரு சிறுமுடி ஒட்டியிருந்ததை கவனித்தேன். அதை நீக்கியபின், சும்மா இருக்காமல் அந்த ரத்த பொருக்கை சற்றே நீக்க முயன்றேன். அதனால் காயம் திறந்து கொண்டு, நீர்த்த சீழ் போன்று ஒரு திரவம் வர ஆரம்பித்தது. துணியை வைத்து அதை முழுவதும் ஒற்றியெடுத்து சுத்தம் செய்தேன். பின்னர், கையால் பலமுறை நகத்தை அழுத்திப்பார்த்தேன். கொஞ்சம் வலி தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை. எதற்கும் இருக்கட்டும் என்றெண்ணி விரலைச் சுற்றி இன்னொரு வெள்ளைத்துணியை சுற்றி கட்டிக்கொண்டு படுத்துவிட்டேன். தூங்குவதில் எந்த பிரச்சனையுமில்லை.

22 ஜனவரி

இன்றும் அலுவலகத்திற்கு வெறும் செருப்பு மட்டும் அணிந்து சென்றேன். கால்வலி பெரும்பாலும் விட்டிருந்தது. சிலமுறை சில அடிகள் வேகமாக எடுத்துவைத்து ஓடக்கூட முடிந்தது. மதியம் சும்மா இருக்காமல் அனிச்சையாக காலை நோண்டிக்கொண்டிருந்ததில் மறுபடியும் புண் வாய் திறந்து கொண்டு நீர்த்த சீழை ஒத்த அதே திரவம் மீண்டும் வந்தது. ஒரு டிஷ்யூ காகிதத்தை வைத்துக்கொண்டு சுத்தம் செய்துகொண்டேன். அநேகமாக அதுதான் நிணநீர் போலும். காயம் ஏற்படுகையில் அந்த இடத்தில் சுரந்து காயத்தை ஆற்ற முயற்சிக்கும் என்று அக்குஹீலர்கள் சொல்லியிருந்தார்கள். தேவையில்லாமல் அதை தொந்தரவு செய்து, வீணாக்கிக் கொண்டிருக்கிறேன் என நினைக்கிறேன். மாலை வலி நன்றாகவே விட்டிருந்தது. ஆனால் நடக்கும்போது ஒரு அசௌகரியம் இருந்துகொண்டேயிருந்தது. மேலும் வீட்டிற்கு வந்தபின் சற்று வலியும் இருந்தது. அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக அந்த திரவம் வந்துகொண்டேயிருந்தது. அப்படியே விட்டுவிட்டு தூங்கிவிட்டேன். அடுத்த நாள் காலையில் ஒன்றும் பிரச்ச்சனையில்லை.

23 ஜனவரி

இன்று சற்று வெளியில் சுற்றவேண்டியிருந்தது. காலில் செருப்பின் அழுத்தத்தின் காரணமாகவோ என்னவோ, அந்த திரவம் மீண்டும் வழிந்திருந்தது. வலியெதுவும் இல்லை. ஒரு குறுகுறுப்பு மட்டும் இருந்தது.

24 ஜனவரி

இன்று மாலை வெந்நீரை வைத்து கால் விரலை சுத்தப்படுத்தினேன். உலர்ந்திருந்த ரத்தக் கறைகளையும், அந்த திரவத்தின் கறைகளையும் முழுவதுமாக நீக்க முடிந்தது. வலி என்று எதுவும் இல்லை. சில நேரங்களில் ஓடவும் முடிந்தது.

25 ஜனவரி

இன்று குளிக்கும்போது கால்விரலை மீண்டும் சுத்தம் செய்து துணியால் ஒற்றியெடுத்தேன். வலி எதுவும் இல்லை. நன்றாக காலை வீசி தயக்கமில்லாமல் நடக்கமுடிந்தது. கட்டைவிரலை மடக்கும்போது உள்ளே தசை மெலிதாக இழுபடுவதை உணரமுடிகிறது. நகத்தில் சற்று குறுகுறுப்பு உணர்வு இன்னமும் உள்ளது. அதிகப்படியாக வளர்ந்த நகத்தை வெட்டியெடுக்க முடிந்தது. தொன்னூற்றொன்பது சதவிகிதம் ஆறிவிட்டதால் இத்தோடு இந்த குறிப்பெடுத்தலை முடித்துக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

பலவருடங்களுக்கு முன்னர் இதேபோன்று காயம் ஏற்பட்டபோது விரலில் மருந்து வைத்து கட்டி ஊசியெல்லாம் போட்டார்கள். இருநாட்கள் கழித்து வர சொன்னார்கள். அந்த இருநாட்களும் வலியில் அவதிப்பட்டேன். பின்னர் இருநாட்கள் கழித்து கட்டை அவிழ்த்தபோது நகம் நன்கு நீண்டு வளர்ந்து கறுப்பாகவும் கடினமானதாகவும் ஆகியிருந்தது. அதை அவர்கள் வலிக்க வலிக்க குறடால் பிடுங்கி வெறும் தசையின்மீது மருந்தை வைத்து மீண்டும் கட்டி அனுப்பிவிட்டனர். பின்னர் அந்த காயத்தில் சீழ்வைத்து குத்துவலி கிளம்பி மிகவும் அவதிப்பட்டேன். காயம் குணமாக இரு வாரங்களுக்கு மேல் ஆனது என்று நினைவு. அதை ஒப்பிட்டு பார்க்கும்போது மருந்திடாமல் இருந்த வகையில், ஒரே வாரத்தில் குணமானது ஒரு நல்லவிஷயம். வெறும் அரைமணி நேரமே கடும் வலியோடு அவதிப்பட்டேன் என்பது இன்னொரு விஷயம். மற்ற நேரங்களில் நடப்பதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆக சிறிய அளவு ரத்த காயத்தையும் சமாளிக்கும் அனுபவத்தை பெற்றுவிட்டேன். இந்த அனுபவத்தை பகிர்ந்துகொண்டபோது என் நண்பன் பிரபு எழுதியது நன்றாக இருந்தது.

“’ஊனுடம்பு ஆலயம்’ என்பதை மீண்டும் நிரூபிக்கிறது உன்னுடைய அனுபவம். என்னை பொறுத்தவரையில் இதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கை. நம் உடலில் உள்ள கடவுளை நம்பாமல் மருந்துகளை நம்பி செல்வது கடவுள் நம்பிக்கை இல்லாததிற்கு சமம் என்று நினைக்கிறேன்.” மிகச் சரியான வார்த்தைகள்.

உங்கள் வீட்டினருகில் உள்ள அக்குஹீலர்களை தொடர்பு கொள்ள பின்வரும் இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அக்குஹீலர்களின் கைபேசி எண்களோடு பெயர்களை கொடுத்திருக்கிறார்கள். எல்லா நேரமும் அக்குஹீலர்களால் நம் அழைப்பை ஏற்கமுடியாமல் இருக்கலாம். ஆனால் பெரும்பாலும் பேசிவிடுகிறார்கள். வாட்ஸாப்பிலும் நிறைய அக்குஹீலர்கள் இருக்கிறார்கள். அதன்மூலம் தொடர்பு கொள்வதும் சாத்தியமானதே. ஏங்கல்ஸ் ராஜா ஊடகங்களுக்கு அளித்துள்ள பல்வேறு பேட்டிகளை யூட்யூபில் வலையேற்றியிருக்கிறார்கள். அவையும் உங்களுக்கு பயனளிக்கும் என்று நினைக்கிறேன்.

இணைப்புகள் :

அக்குஹீலர்களின் தொடர்பு விவரங்கள் : http://acuhome.org/?page_id=465
ஏதோ தொழில்நுட்ப கோளாறு போல. தளத்தில் இப்போது விவரங்களை காண இயலவில்லை. சீக்கிரமே சரிசெய்துவிடுவார்கள் என்று எண்ணுகிறேன். பொதுவாகவே நீங்கள் எங்காவது “அக்குபங்சர் இல்லம்” என்ற போர்டை பார்த்தீர்களென்றாலே அது அக்குஹீலர்களின் மருத்துவமனையாகத்தான் இருக்கும். அவர்களிடம் சென்று விசாரித்துக் கொள்ளலாம்.

ஏங்கல்ஸ் ராஜாவின் யூட்யூப் சானல் – https://www.youtube.com/channel/UCxBxsvTTASQ4GDF3DSbsSpg
அவருடைய இந்த ப்ளேலிஸ்ட்டும் உபயோகமாக இருக்கும் – https://www.youtube.com/playlist?list=PLWxbf2aj07pzF-qEEtXpmMBqArE3DO1M5

இந்த மட்டில் இந்த பதிவுத் தொடரை முடித்துக்கொள்கிறேன். இதுவரை இவற்றை படித்தும் என்னை ஊக்கமூட்டியும் வந்த அனைவருக்கும் என் நன்றிகள்.