குழந்தைகளின் திறன்கள்

நேற்று நண்பனொருவனின் அழைப்பின்பேரில் மாற்றுக்கல்வி வழங்கும் ஒரு பள்ளிக்கு சென்றிருந்தேன். முதல் பங்கேற்பு என்பதால் அதுபற்றி நிறைய தகவல்களை அளிக்கமுடியவில்லை. சிலகாலம் பொறுத்து அதைப்பற்றி எழுதுகிறேன். அந்நிகழ்ச்சியில் குழந்தைகளின் திறன் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவரவருடைய குழந்தைகள்/ தெரிந்த குழந்தைகளின் திறன்களைப் பற்றி பேச்சு சென்றது. அந்நிகழ்ச்சி முடிந்தபின்னரும் அதனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன்.

“குழந்தைகள் திறனற்றவை, அவற்றிக்கு ஒன்றும் தெரியாது, நாம் கற்றுக்கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே அவை விஷயங்களை கற்றுக்கொள்கின்றன என்று நாம் நினைப்பது மிகவும் தவறு. விக்டோரிய கல்விமுறை நமக்குள் திணித்த ஒரு மாபெரும் பொய் இது. குழந்தைகள் ஏற்கனவே அறிவுடன்தான் பிறக்கின்றன. அதை கெடுக்காமல் வளர்த்துவிட்டாலே போதும்” என்று அந்நிகழ்ச்சியில் சொன்னார்கள். அது உண்மைதான். எனக்குத் தெரிந்த ஒரு குழந்தையின் பிரமிக்கவைத்த ஒரு திறமையை பற்றி இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

என் சகோதரி வசித்த அடுக்குமாடி குடியிருப்பில் எதிர்வீட்டில் ஒரு வடநாட்டு குடும்பம் வசித்து வந்தது. மிஸோரம் மாநிலத்தினர் என்று ஞாபகம். அவர்களின் குழந்தை தனது ஒரு வயதிலிருந்து என் சகோதரியின் வீட்டுக்கு வந்து விளையாடி பழகிக் கொண்டிருந்தது. என் சகோதரி மற்றும் அவரின் மகன் ஆகியோர் அக்குழந்தையுடன் விளையாடும்போது, தமிழிலேயே பேசி விளையாடுவர். ஏறக்குறைய இரு வருடங்களுக்குள் அக்குழந்தை நன்றாகவே தமிழில் பேச ஆரம்பித்துவிட்டது! அதே சமயம் அவர்களது தாய்மொழியையும் நன்கு பேசக் கற்றுக்கொண்டது! என் தாய் அவளுக்கு கற்றுக் கொடுத்த “தமிழ் மண்ணே வணக்கம்” என்பதை அவள் சொல்லும் அழகே தனி.

இனிதான் ஆச்சரியமே. என் சகோதரிக்கு தமிழ், ஆங்கிலம் தவிர வேறுமொழிகள் தெரியாது. அந்தப் பெண்ணின் அம்மாவிற்கு ஹிந்தி மற்றும் அவரின் தாய்மொழி தவிர வேறு மொழிகள் தெரியாது. ஆங்கிலம் ரொம்பவே உடைந்து வரும். இவர்கள் இருவரும் தகவல்களை பரிமாறிக் கொள்ள ரொம்பவே சிரமப்படுவார்கள். இருவரும் சிறு தகவல் சொல்வதற்குக்கூட தத்தம் கணவரையே எதிர்பார்க்க வேண்டிய நிலைமை.

இவ்வாறிருக்க, ஒரு நாள் என் சகோதரி இக்குழந்தையிடம் விளையாட்டாக தமிழில் ஏதோ சொல்லி “இதை உன் அம்மாவிடம் போய் சொல்” என்று அனுப்பியிருக்கிறார். ஆச்சரியப்படும் விதமாக அக்குழந்தை தன் அம்மாவிடம் போய் அவர்கள் தாய்மொழியில் அவ்விஷயத்தை சொல்லியிருக்கிறாள்! அப்போது அவளுக்கு மிஞ்சிப்போனால் மூன்று வயதுதான் இருந்திருக்கும்! யாராலும் நம்பவே முடியவில்லை. பிறகு அதேபோல் அவள் அம்மாவும் விஷயங்களை சொல்லியனுப்ப, அவள் இங்கு வந்து தமிழில் சரளமாக சொன்னாள்! ஒருவேளை உலகின் இளம் வயது மொழிபெயர்ப்பாளர் இவள்தானோ?

இத்தனைக்கும் இன்ன மொழியில் போய் சொல் என்றுகூட அந்தக்குழந்தையிடம் யாரும் சொல்லவில்லை. அவளே முடிவுசெய்து ஆளுக்கு ஏற்றாற்போல் அவர்களது மொழியில் பேசிவந்தாள். சில இடங்களில் கஷ்டப்பட்டாலும் பெரும்பாலும் சரளமாக மொழிபெயர்த்து வந்தாள். இருவருக்கும் தகவல் பரிமாற்றப் பிரச்சனை ஒருவழியாக தீர்ந்தது!

அந்தக்குழந்தையை பார்க்கும்போதெல்லாம் ரொம்ப ஆச்சரியமாக, பிரமிப்பாக இருக்கும். என்ன நினைப்பில் நாம் “உனக்கெல்லாம் ஒன்றும் தெரியாது” என்று குழந்தைகளிடம் சொல்கிறோம்? மேலும் சிலவருடங்கள் கழித்து அவள் தந்தைக்கு கொல்கத்தா பகுதியில் வேலை கிடைக்க சென்னை வீட்டை விட்டு காலிசெய்து போய்விட்டார்கள். கடைசியாக அவளை பார்த்தபோது என் அம்மா “எங்களையெல்லாம் ஞாபகம் வச்சுக்குவியா? தமிழை மறக்காம இருப்பியா?” என்றெல்லாம் கேட்க “மறக்கமாட்டேன்” என்று உறுதியளித்தாள்.  மேலும் “தமிழ் மண்ணே வணக்கம்” என்று சொல்லி விடைபெற்று சென்றாள். அவள் தமிழை மறந்தாலும் அவளை எங்களால் மறக்கவே முடியாது.